search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் பண்ணை வீட்டில் கொள்ளையடித்த 4 பேர் கைது
    X

    சூலூர் பண்ணை வீட்டில் கொள்ளையடித்த 4 பேர் கைது

    • தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் நித்தியா நந்தினி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 13-ந் தேதி, இவரது வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் வீட்டில் இருந்த நித்யா நந்தினியை கட்டிப்போட்டு, 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையர்கள் பண்ணை வீட்டில் இருந்து செஞ்செரிமலை வழியாக நெகமம் நோக்கி வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் யார் என்பதை அறியும் பணியில் போலீசார் இறங்கினர்.


    போலீஸ் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன்(72), ஆந்திர மாநிலம் தாவணிக்கரையை சேர்ந்த முருகன்(55), குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த ஏழுமலை என்ற ராஜா(50), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்ற ராஜேஷ்(42) என்பதும், இந்த கும்பலுக்கு தலைவனாக அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன் செயல்பட்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவர்களை தேடி தனிப்படையினர் குடியாத்தம் விரைந்தனர். அங்கு அவர்கள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    சம்பவத்தன்று அவர்கள் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த கும்பல் மோகனூரில் உள்ள ஆந்திர வங்கி, பண்ரூட்டி, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக்கடைகளிலும் ஏராளமான பணம் மற்றும் பல சவரன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    இவர்கள் பொள்ளாச்சியில் கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் இங்கேயே எங்காவது கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்து, தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.

    அப்போது பண்ணை வீடு இருப்பதை பார்த்ததும் அங்கு சென்று, அங்கு இருந்தவரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை வைத்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையர்களை பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.

    இருந்தபோதிலும் கிடைத்த தகவல்களை வைத்து, கொள்ளையர்களை கண்டறிந்து, அவர்களை பிடித்து விட்டோம் என்றனர்.

    இதையடுத்து போலீசார் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×