என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
    • ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை :

    டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் அவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.
    • தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

    உயரம் இல்லாத கட்டிடங்களின் அதிக பட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரத்தை 14 மீட்டர் வரை உயர்த்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தரைதளம் மற்றும் 3 தளத்துக்கு இதுவரையில் 12 மீட்டர் உயரம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 14 மீட்டர் வரை கட்டிடத்தின் உயரத்தை அதிகரித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. அதே போல தரை தளம் மற்றும் 2 அடுக்குமாடி வீடுகளுக்கு 9 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை கட்டிக் கொள்ளலாம். 3 அடுக்கு மாடிகளுக்கு கட்டிடத்தின் உயரத்தை 6 அடி வரை உயர்த்தி கொள்வதன் மூலம் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்று கட்டுமானர்கள் தெரிவிக்கின்றனர். ஏர்கண்டிஷன், பால் சீலிங் போன்ற வசதிகள் செய்வதற்கு தரையில் இருந்து கட்டிடத்தின் உயரத்தை உயர்த்த இது போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது என்று கட்டுமான சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தென்னக கட்டுமான சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

    கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் கார் பார்க்கிங் வசதி நேர்த்தியாக செய்து கொடுக்க முடியும். தரையில் இருந்து சீலிங் வரை 10 அடியில் இருந்து 11.5 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. இது சொந்த வீடு வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

    மேலும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டரக்கு மிகாமல் உள்ள கட்டி டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒழுங்க முறை ஆணை யத்தின் நிறைவு சான்றி தழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் குடியிருப்புவீடுகள் 3-ல் இருந்து 8 வரை கட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை நிறைவு சான்றிதழை சமர்பிக்காமல் எளிதாக பெறவும் இந்த திருத்தங்கள் உதவுகிறது.

    • பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர்.
    • அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக தொண்டர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

    அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து உரையாற்றினார்.

    இத்தகு முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக நிர்வாகி மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,

    "சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.

    நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவை அடுத்து யார் இந்த அஸ்வந்த் பிஜய் என பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அஸ்வந்த் பிஜய் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என தெரியவந்தது. மேலும் இவர் சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியிடம் கூறியது போல் அஸ்வந்த் பிஜய்க்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக அவரிடம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அஸ்வந்த் பிஜய் பொய் சொல்லியுள்ளார். பிரதமரிடம் சொன்ன தகவல் யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியே இந்த நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவாக வெளியிட்டதால் அஸ்வந்த் பிஜய் மாட்டிக்கொண்டுள்ளார்.

    இதனையடுத்து தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே சமயம் பிரதமரிடம் பொய் சொன்ன அஸ்வந்த் பிஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
    • சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சிஏஏ சட்டம் பற்றி தெரியாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர்.

    * சிங்கள தமிழர்கள் 11 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    * யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.

    * மக்களை குழப்பி, திசை திருப்பும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

    * குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் மத்திய அரசிற்கு மட்டுமே உள்ளது.

    * 2019-ம் ஆண்டுக்கு பிறகு 1,414 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளோம்.

    * அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 31 மாவட்டங்களில் சிஏஏ அமல்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    * சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.

    * இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உள்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது.

    * 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக இந்தியாவில் உள்ளனர்.

    * சட்டத்தில் என்ன தவறு, குளறுபடி உள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

    * சமத்துவ மக்கள் கட்சியை கூட்டாக பா.ஜ.க.வில் இணைத்துள்ளார், மோடி குடும்பம் பெரிதாகி உள்ளது.

    * இலங்கையில் இருந்து வந்த அனைத்து அகதிகளுக்கும் சட்டத்திற்குட்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்தது.

    முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள், இலங்கை மற்றும் இங்கிலாந்து செல்ல சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகன் உள்ளிட்டோருக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கு நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

    • சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    * சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * ராணிப்பேட்டை ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

     

    • கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது.
    • அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு 45,477 கோவில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சியில் அமைக்கப்படாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவினை அமைத்து, அதன் உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் இக்குழுவின் முதல் கூட்டமும், அதனைத் தொடர்ந்து 27.2.2024 அன்று 2-வது கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழு தீர்மானங்களை நிறை வேற்றிடும் வகையில் இன்று 45,477 கோவில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை மண்டலம் – 1 மற்றும் 2 ஐ சேர்ந்த 1,277 கோவில் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் முழு உடற்பரிசோதனை திட்டத்தில் முழு ரத்த பரிசோதனைகள், கண் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    இம்முகாம் 3 நாட்கள் நடை பெறும். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோவில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளனர். கோவில் பணியாளர்களுக்கான முழுஉடல் பரி சோதனை முகாம் சென்னை மண்டலத்தை தொடர்ந்து 6 மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு பணியாளர்களின் நலன் காக்கப்படும்.

    இவ்வாறு அவா் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரி பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இன்று முதல் 17-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    18-ந்தேதி அன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
    • அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    சென்னை:

    தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

    இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன.
    • குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னைக்கு கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர், திருவொற்றியூர் வழியாக இரு மார்க்கத்திலும் தினமும் 40-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்கள் வந்து செல்கின்றன. பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொன்னேரி ரெயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் குடும்பத்துடன் அங்கு அட்டகாசம் செய்து வருகின்றன. ரெயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளை ரெயில் நிலையத்திற்கு நுழையும் போதே வாசல் அருகில் நின்று அச்சுறுத்துகின்றன. பயணிகள் பைகளில் கொண்டு வரும் பழங்கள், உணவு பொருட்களை பறித்து சென்று விடுகின்றன. இதனை தடுக்க முயன்றால் பயணிகளை குரங்குகள் கடிக்க பாய்கின்றன.

    இதேபோல் பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே பொன்னேரி ரெயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

    2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை, சிந்தாதிரி பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

    இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது.

    நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை தயாநிதி மாறன் எம்.பி. மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×