மடத்துக்குளம் அருகே குடிபோதை தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை- நண்பர்கள் வெறிச்செயல்

தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மடத்துக்குளம் அருகே குடிபோதை தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை- நண்பர்கள் வெறிச்செயல்
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் சாமிதுரை (வயது 42) என்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாட்டான் என்கிற ராமகிருஷ்ணன் (34), பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (26) ஆகியோர் சாமிதுரையை அடித்துக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த சாமிதுரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com