என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும்.
    • தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி ஆகியவற்றை சாத்தியமாக்கி அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது.

    அதற்குள்ளாக தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.
    • தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

    குன்னூர் அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து காட்டு ப்பகுதிக்குள் விழுந்தன. தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து குன்னூர் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி முடுக்கிவிடப்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் வனத்துக்குள் கொளுந்து விட்டெரிந்த காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் வனத்துக்குள் பற்றிஎரியும் தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத்துறையினருக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டது.

    இதற்கிடையே குன்னூர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற பழமையான மரங்கள் செடி-கொடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாயின.

    அதுவும் தவிர பாரஸ்ட்டேல் பகுதியில் மான், முயல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் சுற்றி திரிந்து வந்தன.

    குன்னூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் வசித்த வன விலங்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.

    இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நேற்று மாலை உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குன்னூரில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்புப்படை போலீசாரை வரவழைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை ஊழியர்கள் சம்பவ இடத்தில் கா ட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சி காட்டு த்தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதற்கிடையே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக தோட்ட உரிமையாளர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குன்னூர் காட்டுப்பகுதியில் கடந்த 5 நாட்களாக பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் வண்டிச் சோலை, பாரஸ்ட்டேல் பகுதியில் இருந்த வன விலங்குகள் தற்போது இடம்பெயர்ந்து கிராமம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று நடமாடி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவும் காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழகம் என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பு பூமி.
    • தமிழக மக்கள் எந்த காலத்திலும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

    தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ் மொழியின் மீது பாசத்தை பொழிகிறார் பிரதமர் மோடி. உங்களிடம் தமிழில் பேசப் போகிறேன் என்கிறார். உங்கள் மொழிக்கு மரியாதை வழங்க துடித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு 2017 முதல் 2020 வரை மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூபாய் 12.31 கோடி மட்டுமே. ஆனால், 24,000 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு அதே காலக்கட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூபாய் 643.84 கோடி.

    8 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழிக்கு ஒதுக்கிய தொகையை விட 50 மடங்கு அதிகமாக காலாவதியான சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மோடியின் தமிழ் பாசத்திற்கு அடையாளம். மோடியின் இரட்டை வேடத்திற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

    மோடியின் தமிழக விரோத போக்கை முற்றிலும் அறிந்து வைத்திருக்கிற தமிழக மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள். தமிழகத்திற்கு எத்தனை முறை மோடி வந்தாலும் மக்களின் வெறுப்பிற்கும், கோபத்திற்கும் ஆளாகி இருப்பதிலிருந்து மோடி மீளவே முடியாது. தமிழகம் என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பு பூமி. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.

    இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

    பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார்.
    • தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து வருகின்றன.

    இதில் பா.ஜனதா தனது தலைமையில் 3-வது கூட்டணி அமைத்து இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற களப்பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அவர்களுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


    இதில் த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தனது கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியும் வழங்கவேண்டும் என்று கேட்டதாகவும், அவ்வாறு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனில் ஒரு தொகுதியை கண்டிப்பாக கேட்டு பெற திட்டமிட்டி ருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு சீட்டுக்கு பா.ஜனதா சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் த.ம.மு.க. போட்டியிடும். அந்த சீட் தென்காசி தொகுதியாக இருக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் பேசி வருகின்றனர்.

    தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் கட்சிக்கு ஒதுக்கப்படும்போது, அவர் தனது மகளான வினோலின் நிவேதாவை களமிறக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே அவர் சில மாதங்களாக தென்காசியை மையமாக கொண்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் என்பதால் அந்த தொகுதிக்கு அவர் அதிகமாக முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது.


    இதுஒருபுறம் இருக்க பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, திடீரென அ.தி.மு.க. பக்கம் தாவி உள்ளார். அவர் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தென்காசி தனி தொகுதியை கேட்டு பெற்று போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதி தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் அந்த தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் அவர் சேர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தென்காசி தொகுதியில் இந்த முறை பா.ஜனதா வேட்பாளரே நேரடியாக தாமரை சின்னத்தில் களம் காணவேண்டும் என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மாவட்டத்தை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில நிர்வாகி விஸ்வை ஆனந்தன் வேலை செய்து வருகிறார். அவர் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சுமார் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றது என்பதால், கூட்டணிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டாம் எனவும் அக்கட்சியினர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார். தற்போது பா.ஜனதா கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகளும் தென்காசி தொகுதியை பெற விரும்புகிறார்கள் என்று பேசப்படுகிறது.

    இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்து வருகிறார். இதனால் இந்த முறையும் தி.மு.க.வுக்கே தென்காசியை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தலைமையிடம் கேட்டு வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்றும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் இந்த தொகுதியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால், அவர்களும் தி.மு.க. கூட்டணியில் தென்காசியை ஒதுக்க கேட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றில் தி.மு.க. நேரடியாக களம் காண திட்டமிட்டுள்ளதால், அவர்களுக்கு போட்டியிடுவதற்கான தொகுதி குறையாமல் இருக்க தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.
    • 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தாலும் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.

    இதனால் ம.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    திருச்சி, ஆரணி தொகுதிகளை தவிர பிற தொகுதி கள் காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

    கரூர் தொகுதி ஜோதிமணிக்கு மீண்டும் ஒதுக்கப்பட உள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.

    திருச்சி தொகுதியை ம.தி.மு.க. விற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.

    தி.மு.க. தரப்பில் இருந்து தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரசுக்கு பல முறை அழைப்பு கொடுத்தும் மேலிட தலைவர்களிடம் இருந்து இசைவு வராததால் செல்வப்பெருந்தகை பேச்சு வார்த்தைக்கு போகாமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நாளை மும்பையில் நடக்கும் காங்கிரஸ் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் செல்கிறார்கள். அதனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திங்கட் கிழமை இறுதி செய்யப்பட உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்து இடுகிறார்.

    கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2 தொகுதிகள் மட்டுமே மாற வாய்ப்பு உள்ளது.

    எனவே 18-ந்தேதி காங்கிரஸ், ம.தி.மு.க.விற்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

    • கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
    • தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள்.

    சென்னை:

    கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க.-காங்கிரஸ் விளையாடுகிறது.

    இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ்-தி.மு.க. செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா? என பேசினார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்.

    தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

    கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?

    அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த மத்திய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்?

    படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?

    இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

    இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று #பதில்_சொல்லுங்க_பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை! ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.

    விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?

    தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
    • அனுமதியும் இன்றி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை:

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கலையில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.


    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    எந்த ஒரு அனுமதியும் இன்றி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட 217 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.
    • நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

    புதுப்பேட்டை:

    பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.

    இந்த நிலையில் சீமானின் சின்னம் என்ன என்ற வாசகத்துடன் தேர்தல் ஆணையத்தை கேட்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

    இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காக்க வைக்கப்பட்டு செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனை நடைபெற்றதை பார்த்து விற்பனையில் ஈடுபட்டனர்.

    பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது எனவும், செவிலியர்கள் யாரும் சேலை விற்பனை செய்வதை வேடிக்கை பார்க்க செல்லவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×