என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மவுன குருவாக இருப்பது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
    X

    பிரதமர் மவுன குருவாக இருப்பது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

    • கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
    • தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள்.

    சென்னை:

    கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க.-காங்கிரஸ் விளையாடுகிறது.

    இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ்-தி.மு.க. செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா? என பேசினார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்.

    தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

    கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?

    அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த மத்திய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்?

    படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?

    இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

    இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று #பதில்_சொல்லுங்க_பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை! ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.

    விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?

    தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Next Story
    ×