என் மலர்
நீங்கள் தேடியது "Nurses"
- 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.
'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.
நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.
அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.
நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும்.
நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.
செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.
இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ, அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.
ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
- நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு அம்மாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி விடியா திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடியா திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடியா திமுக, Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.
- சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்
- சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்குவழங்கப்படும் இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று என்று செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்றார்.
- விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.
தஞ்சாவூர்:
உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர்மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம்,
நிலைய மருத்துவ அதிகாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்புரை ஆற்றினார்.
மூளை நரம்பியல் துறை தலைமை பேராசிரியர் ரவிக்குமார் பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார். மூளை நரம்பியல் துறை உதவி பேராசிரியர் சாந்தபிரபு நன்றியுரை ஆற்றினார்.
இந்த பேரணியில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என திரளானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது
- சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது
கரூர்:
கரூரில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல் நடந்தது. இதில், மாநில கவுரவ தலைவர் லீலாவதி தலைமை வகித்தார். தொடர்ந்து நடந்த தேர்தலில், தலைவராக மகாலட்சுமி, துணை தலைவராக சண்முகவள்ளி, செயலாளராக மணிமேகலை, துணை செயலாளர் ஆக பிரேமா, பொருளாளராக கங்காதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின், அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். செவிலியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், செவிலியர்கள் திரளாக பங்கேற்றனர்.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
- அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப்பட்டனர்.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.
இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிக மாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதா
ரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்க ளில் எங்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இதுவரை 14000 ரூபாய் தற்காலிக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும்.
- தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை
சென்னை:
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அன்றைய அரசினால் ஏப்ரல் 28ம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 2570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனங்கள் குறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டு 2300 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
அன்று முதல் அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்கு பிறகும் பணி நீட்டிப்பு என்பது தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பேரிடர் முடிவுக்கு வந்த சூழலில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த நிலையில் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால் அவர்கள் யாருக்கும் பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்கின்ற வகையில், ஒரு மாற்று யோசனையின்படி மாவட்ட வாரியாக இருக்கிற அமைப்புகளின் சார்பில் டிபிஎச்இ மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய துறைகளில் இருக்கிற காலி பணி இடங்களை இவர்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என அறிவுத்தினார். அந்த வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுவரை 14000 ரூபாய் தற்காலிக பணிநியமனத்திற்காக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும், அது மட்டுமல்லாது ஏற்கனவே இருக்கிற தற்காலிக பணி நியமனங்களின் மூலம் அவர்களில் பெரும் பகுதியானவர்கள் தலைமை மருத்துவமனைகளில்தான் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள்கூட பல்வேறு மனுக்களின் வாயிலாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பக்கத்திலேயே பணி மாறுதல் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வந்தார்கள். தற்காலிக செவிலியர்களை இடமாற்றம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாவட்ட சுகாதார சங்கம் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட்டு, மிகப்பெரிய அளவு பணி பாதுகாப்பு இருக்கும் என்கிற அளவில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் செவிலியர்கள் எங்களுக்கு ஏற்கனவே இருப்பது போல் DMS ஒப்பந்த பணியாளர்கள் என்ற அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். தொடச்சியாக இரண்டு நாட்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தார்கள். இன்று சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து ஏறக்குறைய 2 மணி நேரம் பேசியிருக்கிறோம். அவர்களுக்கு தனித்தனியே கொடுக்கப்பட்ட வேலைக்குரிய ஆணையையும் எங்களிடம் காட்டினார்கள். அதிலே மிக தெளிவாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தற்காலிகமாக பணி ஆணை தரப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நானும் துறையின் செயலாளரும் என்எச்எம் இயக்குனர், திட்ட இயக்குனர், டிபிஎச், டிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்கள் அவர்களிடம் பேசினோம். அவர்கள் என்எச்எம் நிதி ஆதாரத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தின் பணி நியமனங்கள் வேண்டாம். இங்கு டிஎம்எஸ் ஒப்பந்த அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணி அது, இப்போது அந்த நிலை இல்லை என்பதால் அது முடியாது என்ற வகையில் அலுவலர்கள் எடுத்து சொன்னார்கள். அவர்களும் பிடிவாதமாக மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக வேண்டாம் என்று சொன்னார்கள்.
அதற்காக அவர்கள் சொன்ன காரணம், என்எச்எம் நிதி ஆதாரம் இல்லாமல் நேரடியாக தமிழக அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் எங்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக இட ஒதுக்கீடு பின்பற்றாத தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் ஒப்பந்த பணி வழங்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் மூலமும் அந்த மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பும்போது, நீங்கள் விண்ணப்பியுங்கள் உங்கள் அத்தனை பேருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம். காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும். இதில் இருக்கிற சட்டப்பூர்வான விஷயங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட்டிருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
- தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
- செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்காலிக பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
சென்னை:
கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 நர்சுகள் தற்காலிக முறையில் ஒப்பந்த நர்சுகளாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.
இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தர பணி கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை மாவட்ட கலெக்டர்கள் நேர் முகத்தேர்வு மூலம் நிரப்ப உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும். தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணிகிடைத்து விடும். 20 மாதம் கொரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப் பெண்கள் கொடுக்கப்படும்.
ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியர்களுக்கு எளிதாக பணி கிடைத்துவிடும்.
இதற்கு முன்பு செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும். இது தற்காலிக ஒப்பந்த பணியாகும். இந்த வாய்ப்பை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா கால செவிலியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், வேறு புதிய செவிலியர்கள் பணியில் சேர்ந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷிடம் கேட்ட போது, "கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக நாளை (12-ந்தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்" என்றார்.
- தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
- 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
அம்மாபேட்டை:
பாபநாசம் அடுத்த ராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடை பெற்றது.
குடியரசு தினத்தை முன்னிட்டு 13-வது முறை நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் அலி தலைமை தாங்கினார்.
பாபநாசம் தாசில்தார் பூங்கொடி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
முகாமில் தஞ்சாவூர் அரசு ராசாமி ராசுதார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ரத்த வங்கியின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
- மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 21 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். பி.எஸ்.சி. நர்சிங், துணை நர்சிங் படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.
1 மருந்தாளுனர், 3 ஆய்வக நுட்புநர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மருந்தாளுனர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம், ஆய்வக நுட்புநர் பணிக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக வருகிற 25-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேர்காணலில் தகுதி பெற்று காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்துக்குள் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.
இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
- நைட்டிங்கேல் பிறந்தநாளை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
- நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது.
நெல்லை:
மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் உன்னத சேவையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் உலக செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவி லியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளான மே 12-ந் தேதியை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி ஆண்டு தோறும் இன்றைய தினம் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவமனை சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், கந்தசாமி, துணை முதல்வர் சுரேஷ் துரை, செவிலிய கண்காணிப்பாளர்கள் பானு, வள்ளி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி செவிலியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் பேரணியாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.
- 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
- நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சுகாதாரத்துறை 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
இப்பணிக்கு வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், புதுவை அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சுகாதாரத்துறை மூலம் கொரோனா தொற்று காலத்தில் பணி அமர்த்தப்பட்ட தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த நர்சுகள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றினர்.
மத்திய அரசு கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த டாக்டர், நர்சு மற்றும் உதவியாளர்களுக்கு தக்க சன்மானமும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கியுள்ளது.
ஆகையால், தற்போது நிரப்பப்பட உள்ள நர்சு பணியிடங்களுக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் கொரோனா காலத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய நர்சுகளுக்கு முன்னுரிமை அளித்து பணிக்கான இடங்களை நிரப்பவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






