என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செவிலியர்களை பணிநிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க ஆட்டம் போடக்கூடாது - அன்புமணி
- 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.
'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.
நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.
அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.
நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும்.
நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.
செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.
இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ, அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.
ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






