என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யபட்டு வருகிறது. பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அணை மூடப்பட்டது. ஆனால் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை ஆகவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்தும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்பொழுது பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் கரை புரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. திற்பரப்பு அருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.இதை யடுத்து அந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 619 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.31 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் அணை நீர்மட்டம் கணிசமான அளவு சரிந்துள்ளதால் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.20 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்...
    • நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அந்தியூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தலைவர்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    * 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரேயொரு சாதனை சொன்னால் நாங்கள் போட்டியில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * தலா 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக என்னுடைய வாழ்நாளில் பாதி நாளை தின்னுவிட்டீர்கள்.

    * என்ன நடந்திருக்கு எந்த நாட்டில்? ஆட்சி பொறுப்பேற்கும் போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னார் மோடி. தற்போது 20 கோடி பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள்.

    * ஒரே ஒரு தடவ பத்திரிகையாளர்களை மோடி சந்தித்தால் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * எல்லாவற்றிலும் புதுசு தேடும் போது, 75 வருஷமா உதயசூரியன், 60 வருஷமா இரட்டை இல்லை, அதே தாமரை, அதே கை... எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு ஒரே தடவ மைக்கை அழுத்து..

    * எல்லாரும் அவங்க சின்னத்துல நின்னு போட்டியிடுறாங்க. எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்... நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    * இந்தியம் பேசி, திராவிடம் பேசி என்னிடத்தில் வளத்தை கெடுத்து மக்களின் நலத்தை நாசமாக்கி, என்னுடைய வரியை, வரிவரி என்று வாங்கி குவித்தவர்கள், ஊழல், லஞ்சத்திலே ஊறி திளைத்தவர்கள் இதையெல்லாம் தடுக்க ஒரு அரசியல் புரட்சி படை உருவாகி வருகிறது என்று நடுங்குகிறார்கள்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.
    • பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியனில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு தொழில் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பட்டாசு தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு ஆதரவு தேவை.

    ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். இந்தியாவில் 10 கோடி பெண்களுக்க வருடந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களிடம் பணம் இருந்தால் குடும்பம். ஊர், மாவட்டம், மாநிலம், நாடு நன்றாக இருக்கும்.

    எனவே தான் ராகுல் காந்தி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது. அவர்களுக்கு ரூ.17 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதானி, அம்பானி போன்றவர்களுக்காக பாஜக செயல்படுகிறது.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏழை தாய்மார்களின் அரசாக இருக்கும். எனவே என்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர்.
    • அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

    தமிழக முன்னாள் அமைச்சரான ஆர்.எம். வீரப்பன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவிதுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகளில் கூறியிருப்பதாவது:-

    திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

    அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

    ஆர்.எம்.வீ. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., முத்தமிழறிஞர் கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர்.

    எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

    பின்னாளில் எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், முத்தமிழறிஞர் கலைஞருடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

    எம்.ஜி.ஆர்-ன் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்திற்கும் தலைவராகப் பொறுப்பேற்று இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார். அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார்.

    அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

    ஆர்.எம்.வீரப்பனின் மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம். வீரப்பன் புகழும் நிலைத்திருக்கும்!

    இவ்வாறு இரங்கல் செய்தில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
    • விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன்.

    ராமதாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம், தொண்டி, சோழாந்தூர், வரவணி, சேத்திடல், ஆனந்தூர், செவ்வாய்பேட்டை, ஆய்ங்குடி, மேலப்பனையூர், சனவெளி, உப்பூர்சத்திரம், பாரனூர், திருப்பாலைக்குடி ஆகிய கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றும் தி.முகவுக்கு பாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இந்த நாடக ஆட்சியில் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத ஆட்சியை தூக்கி எறிய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயிகளின் அனைத்து கஷ்டங்களையும் உணர்ந்தவன். விவசாயியான என்னை அதிமுக வேட்பாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    விவசாய தொழிலாளர்களை முன்னேற்றவும், ஏழை தொழிலாளியின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்பாடு படுவேன். கடந்த காலங்களில் மக்களின் ஓட்டுக்களைப்பெற்று பகட்டாக கோடிஸ்வரன்களாக வீதிகளில் வலம் வருபவர்களை ஒதுக்குங்கள். மக்களுக்காக பாடுபடுவர்களை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். மக்களுக்கு உதவவும், அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் குரல் கொடுப்பேன்.

    மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட கடலில் இறங்கியும் போராட தயங்க மாட்டேன். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தைவலுப்படுத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் கே.சி.ஆனிமுத்து, ஆர்.எஸ். மங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.ஜி.திருமலை, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ராஜா, பழ.கருப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ஷாஜ கான், பேரூராட்சி செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா உள்பட கூட்டணி கட்சியினர் சென்றனர்.

    • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.
    • தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.

    இந்த காலகட்டங்களில் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் வாரம் தோறும் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
    • ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    சென்னை:

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் காலமானார்.

    அரசியல் வாழ்க்கையில் ஆர்.எம்.வீரப்பன் குறித்த தகவல்கள் பின்வருமாறு:-

    * அ.தி.மு.க. உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

    * ஆர்.எம்.வீரப்பன் 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார்.

    * 1986 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

    * 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.


    * எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    * எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

    * ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    * 1995 ஆம் ஆண்டு பாட்ஷா படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்காக ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்ட போதுதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஓட்டு போட்டால் இந்த தமிழகத்தை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த காரணத்திற்காகவே அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனை கட்சியிலிருந்து நீக்கினார்.

    * இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

    • ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது.
    • கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை எட்டயபுரம் கால்நடை சந்தைக்கு அடுத்தபடியாக இந்த மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

    இங்கு வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நெல்லை சுற்று வட்டார பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் ஆடு விற்பனையானது சுமார் ரூ.3 கோடி அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது. கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தை பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.

    • அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்

    கோவை மாவட்டம் சூலூரில் பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தாமரை சின்னம் என கூச்சலிட்டனர்.

    அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். அதே நியாபகத்தில் குக்கர் சின்னம் என கூறிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.

    குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் பின்பு அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் அவர் பேசினார்.

    அதன் பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.

    • தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள்.
    • தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

    தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

    • கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது.
    • மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் கயத்தாரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாமா. இவர்களுக்கு மனோகரன் என்ற மகனும், சரவணசெல்வி என்ற மகளும் உள்ளனர். மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சரவணசெல்விக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பாமா, அவரது மகன் மனோகரன் ஆகிய இருவரும் சரவணசெல்வியை பார்ப்பதற்காக சென்னை சென்றனர். நேற்று காலையில் சிங்கராஜ் பணிக்கு சென்றுவிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து சிங்கராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 48 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிங்கராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது சிங்கராஜ் வேலைக்கு சென்றதையும், அவரது குடும்பத்தினர் சென்னை சென்றதையும் நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரி வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தென் மண்டல பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    இதனை ஒட்டி பாளை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந் தேதி நெல்லையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாக இருந்தாலும் ராகுல் காந்தியின் வருகை அவரது வெற்றியை மேலும் வலுப்படுத்தும்.

    ராகுல் காந்தியின் வருகைக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்கு அடுத்த நாளோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவரது பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் 100 நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் அளிக்க வேண்டும்.

    தி.மு.க.வின் வக்கீல் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கென பிரத்தியேக வார்-ரூம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×