search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister thangam thennarasu"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தென் மண்டல பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    இதனை ஒட்டி பாளை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந் தேதி நெல்லையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாக இருந்தாலும் ராகுல் காந்தியின் வருகை அவரது வெற்றியை மேலும் வலுப்படுத்தும்.

    ராகுல் காந்தியின் வருகைக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்கு அடுத்த நாளோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவரது பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் 100 நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் அளிக்க வேண்டும்.

    தி.மு.க.வின் வக்கீல் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கென பிரத்தியேக வார்-ரூம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை.
    • மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கி வருகிறோம்.

    * மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    * கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை அரசு திறமையாக கையாண்டுள்ளது.

    * மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

    * நம்மிடம் இருந்து செல்லும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் திரும்ப வருகிறது.

    * சில மாநிலங்களுக்கு அதிகமான வரி வருவாய் கொடுக்கப்படுகிறது.

    * பா.ஜ.க.ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரி பகிர்வு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    * தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை.

    * மறைமுக வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    * நிதி பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

    * மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நடப்பாண்டு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இத்திட்டத்திற்கு வெறும் 3,273 கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    * உ.பி., கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது.

    * கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிவாரணம் தொடர்பாக நிதி மந்திரியிடம் 72 பக்க மனுவை அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
    • வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயரதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் சீரமைப்பு பணிகளுக்கான நிவாரணம் தொடர்பாக 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கியுள்ளார்.

    இந்த மனுவில், தமிழகத்தில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் தென் மாவட்டங்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் பாலங்கள், சாலைகள், பள்ளிகள், பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. எதிர்பார்த்ததை விட பெரிய பாதிப்புகளை தமிழகம் சந்தித்துள்ளது. எனவே இந்த நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசிடம் குறைந்த அளவே மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு போதுமானதாக இருக்காது. எனவே மத்திய அரசு விரைவாக நிவாரணம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது.
    • தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

    சென்னை:

    நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    டிசம்பர் 4-ம் தேதின்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பெய்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை அனைவரும் அறிவீர்கள்.

    தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் பேராபத்து தவிர்க்கப்பட்டது. புயல்-மழைக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியும் படிப்படியாக மீண்டு வருகிறது. நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் மக்களைக் காக்கும், மீட்கும் பணி தொடர்ந்து கொண்டு வருகிறது. இதுகுறித்து நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களின் வாயிலாக கடந்த மூன்று வார காலமாக நாட்டு மக்கள் இந்தச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்து வருகிறார்கள். ஊடகங்களும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்தும் அளித்து காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள்.


    நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவது ஆகும்.

    மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கடந்த 19-ம் தேதி அன்று விளக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 20 நிமிடங்கள் முதலமைச்சர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், 'இதுதொடர்பான கோரிக்கை மனு கொண்டு வந்துள்ளீர்களா?' என்று கேட்டார்கள். ஆம் என்றதும் அதனை வாங்கி வைத்துக் கொண்டார்கள். 'உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். இதைவிட எனக்கு வேறு பணி இல்லை' என்று பிரதமர் சொன்னார்கள்.

    தமிழ்நாட்டில் டிசம்பர் 4, 17, 18 ஆகிய 3 நாட்கள் பெய்த மழை என்பது வரலாறு காணாதது ஆகும். 50 ஆண்டுகள் கழித்து பெய்கிறது, 100 ஆண்டுகள் கழித்துப் பெய்கிறது என்று சொல்லத்தக்க மழையளவு ஆகும். எனவேதான் அது ஏற்படுத்திய பாதிப்பு என்பது மிகமிக அதிகமானது. இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்கள்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் கோரி உள்ளார்கள்.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்று முதலமைச்சர் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

    அதாவது ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தரவேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதலமைச்சரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    பாதிப்பையும், பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்கள் அடைந்த துயரங்களையும், அனுபவிக்க இருக்கும் துன்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் 'தேசியப் பேரிடராக அறிவிக்கமுடியாது, அப்படி இதுவரை அறிவித்தது இல்லை' என்று சொல்வதன் மூலம் தனது இரக்கமற்ற குணத்தைத் தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி.

    ஒன்றிய அரசின் அமைப்புகளின் சார்பில் என்னனென்ன மீட்புப்பணிகள் நடந்துள்ளது என்பதை எல்லாம் நிதி அமைச்சர் தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். இது எதுவும் புதிய செய்தி அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நெல்லையில் வைத்து அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னவை தான். மத்திய பாதுகாப்புப் படையும், ராணுவமும் எந்த வகையில் ஒத்துழைத்து மீட்புப் பணியைச் செய்துள்ளது என்பதை முதலமைச்சரே விளக்கிச் சொல்லிவிட்டார். மத்திய பாதுகாப்புப் படை ஒத்துழைக்கவில்லை என்றோ, ராணுவம் வரவில்லை என்றோ நாங்கள் குற்றச்சாட்டை வைக்கவுமில்லை. நிதி அமைச்சர் சொன்னது புதிய செய்தியும் அல்ல. தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புகளை வரிசையாகப் பார்த்தாலே மத்திய பாதுகாப்புப் படை குறித்த செய்திகள் அதிகம் உள்ளன.


    ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளிக்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தமிழ்நாட்டுக்கான நிதியை அறிவிக்கவே அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். 'நிதி கிடையாது' என்று சொல்வதற்காக எதற்காக பேட்டி தரவேண்டும்?

    பொய்யும் வன்மமும் கலந்த குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது தவறான கற்பிதத்தை உருவாக்க மீடியாக்களை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தி இருக்கிறார்.

    தமிழ்நாடு அரசு கேட்டது 21 ஆயிரம் கோடி. ஆனால் அதில் இதுவரை வந்திருப்பது 450 கோடி மட்டுமே. இதுவும் தமிழ்நாடு அரசுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல்-மழை-வெள்ளச் சேதங்களில் இருந்து மீட்க தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல.

    இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை 5 ஆண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும்.

    ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

    சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் NDRF-ல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்கவேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய பாஜக அரசு எத்தகைய அலட்சியத்தோடு நடத்துகிறது என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு இது.

    2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் ஒன்றிய பாஜக அரசால் ரூ.5884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே. அதாவது பாஜக தமிழ்நாட்டில் வைத்திருக்கும் வாக்கு சதவீதத்திற்கு அதற்கு ஏற்ப நிதி ஒதுக்குவார்கள் போலும். தமிழ்நாடு குறித்தும், வாழும் மக்கள் குறித்தும் துளியும் அக்கறையற்றதாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மறைப்பதற்காக நிருபர்கள் மீது பாய்ந்துள்ளார் நிதி அமைச்சர். அவரது கோபத்துக்குப் பின்னால் இருக்கும் குதர்க்கம் அனைவரும் அறிந்ததுதான்.

    நிதி அமைச்சர் தனது பேட்டியில், பிரதமர்-முதலமைச்சரது சந்திப்பையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். 'ஒருநாள் முழுக்க டெல்லியில் இருந்த முதலமைச்சர், போகிற போக்கில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார்' என்று சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்தியப் பிரதமர் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கான நேரத்தை அவர் தான் தீர்மானிப்பார் என்பதைக் கூட தெரியாதவராக ஒருவர் நிதி அமைச்சராக இருப்பது வேதனை தருகிறது. மதியம் 12.30 மணிக்கு வரலாம் என்று நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு வரலாம் என்று நேரத்தை மாற்றியது பிரதமர் அலுவலகம். எனவே இரவில் சந்திக்க நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம் தானே தவிர, முதலமைச்சர் அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் யாரிடமும், எந்தச் சூழலிலும் தோரணை காட்டக் கூடியவர் அல்ல.

    'மழை பெய்யும்போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?' என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். 'இந்தியா' கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். 'இந்தியா' என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத் தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். பிரதமரைச் சந்திப்பதற்காகவும் சேர்த்தே தான் முதலமைச்சரின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது. பற்றி எரிந்த மணிப்பூருக்கு ஒன்றிய மாண்புமிகுக்கள் ஒரு தடவையாவது போனார்களா? மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4-ம் தேதி புயல்-வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்கவாவது ஒருமுறை சென்னை வந்தாரா? என்று எங்களாலும் கேட்க முடியும். டெல்லி சென்ற ஒரே ஒரு நாள் தவிர-அனைத்து நாட்களும் மக்களோடு மக்களாகத்தான் இருந்தார் முதலமைச்சர். இதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.

    'ஒரே நாடு-ஒரே தேசம்' என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம்.
    • மிச்சாங் புயலால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிச்சாங் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களிலும் வரும் 18ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.

    மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம் வழங்கியது.

    • பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது.
    • சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன.

    மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக தொடர் மழை ஏற்பட்டது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம், ஈரப்பதம் நிலவுவதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் படிப்படியாக மின் விநியோகம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பொது மக்கள் அசாதாரண சூழலை புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்

    பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது.

    சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள மின்னூட்டிகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு, பின்னி மில், நேரு ஸ்டேடியம், தாமோதரன் தெரு, முத்தமிழ் நகர், கொளத்தூர் பாலாஜி நகர், சாத்தாங்காடு, மீஞ்சூர், கல் மண்டபம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மழை நீர் தேக்கம் இருப்பதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2022-23-ம் ஆண்டில் மற்ற மாநிலங்களுக்கான தரவுகள் நம்மிடம் வராததால் இன்னும் அந்த ஒப்பீடு செய்ய காத்திருக்க வேண்டி சூழ்நிலை உள்ளது.
    • திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும் நோக்கங்களுமே பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.

    சென்னை:

    சென்னையில் மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதாரமாகவும், நிலைத்த விலையில் 3-வது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்கிறது. கொரோனாவுக்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதிகரித்து வருகிறது.

    2022-23-ம் ஆண்டில் மற்ற மாநிலங்களுக்கான தரவுகள் நம்மிடம் வராததால் இன்னும் அந்த ஒப்பீடு செய்ய காத்திருக்க வேண்டி சூழ்நிலை உள்ளது.

    ஒட்டுமொத்த மாநில பொருளாதாரம் 2021-22-ல் 7.2 சதவீத அளவிலும் 22-23-ம் ஆண்டில் 8.1 என்ற அளவிலும் வளர்ச்சி உள்ளது.

    திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும் நோக்கங்களுமே பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.

    மாநிலப் பொருளாதாரம் 2021-22-ல் நிலைத்த விலையில் 7.92 சதவீத அளவிலும், 22-23-ம் ஆண்டில் 8.19 என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது.

    தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானமும் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 67 சதவீதமாக இருந்த தனிநபர் வருமானம் 69 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதாவது 2021-22-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ஆக இருந்த ஆண்டு வருமானம் 2022-23-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ஆக வருமானம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நலத் திட்டங்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
    • கட்சியின் வளர்ச்சி பணிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயல் வீரர்கள் கூட்டங்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் தென் மண்டல மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    வருகிற 7-ந்தேதி கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நலத் திட்டங்கள் வழங்குவது, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சார கூட்டங்கள் பிரம்மாண்டமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும், கட்சியின் வளர்ச்சி பணிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயல் வீரர்கள் கூட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதில் ஞான திரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர்கள் கிரகாம்பெல், முருகன், மாநில சட்ட தீர்மானக் குழு உறுப்பினர் சுப.சீதாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் பிரபாகரன், கே.கே.சி. பிரபாகர பாண்டியன், சித்திக், பேச்சிப்பாண்டியன், லட்சுமணன், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், மாவட்ட துணைச் செயலாளர்கள் தமயந்தி, எஸ்.வி.சுரேஷ், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, தங்கபாண்டியன், போர்வெல் கணேசன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், சேவியர் ராஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, இளைஞரணி ஜான் ரவீந்தர், வில்சன் மணித்துரை, அருள்ராஜ் டார்வின், முகமது மீரான் மைதீன், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அனுராதா ரவிமுருகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் நவநீதன் மற்றும் நிர்வாகிகள் பொன்னையா பாண்டியன், வேலன்குளம் முருகன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன், நிர்வாகிகள் ஆறுமுகராஜா, வீரபாண்டியன், செல்வ சூடாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது.
    • தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதில் இணைய வழியாக பங்கேற்றார்.

    சென்னை:

    இணைய வழி விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாக கலந்து கொண்டார்.

    இணையவழி விளையாட்டுக்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, கூட்ட நடவடிக்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    தமிழ்நாட்டில், சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக தங்கம் தென்னரசு வலிமையான கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

    இணையவழி சூதாட்டம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

    சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இணையவழி பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடைசெய்யப்பட்ட, அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுக்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்தார்.

    மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திராவிட மாடல் ஆட்சியின் அனைத்து சட்டமும், திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதே தவிர, யாரையும் வேறுபடுத்தி பாகுபடுத்தி பார்ப்பவை அல்ல.
    • கோடிக்கணக்கானவர்களுக்கு-லட்சக்கணக்கானவர்களுக்கு நன்மை தரும் திட்டங்களைத் தான் முதலமைச்சர் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

    சென்னை:

    அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திருக்குறள் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது முதல், சனாதனம் குறித்த தனது ஆய்வை தினமும் செய்துகொண்டு வருகிறார்.

    'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தைப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். பா.ஜ.க.வின் முந்தைய தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயாவின் நூலை வெளியிட்டு நேற்றைய தினம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கும் சென்று 'திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது' என்று பேசி இருக்கிறார். இப்படிச் சொல்லும் அவர், எந்த வகையில் பிரிவினையைப் பிரதிபலிக்கிறது என்று சொல்லி இருந்தால் விரிவாக விளக்கம் அளிக்கலாம். பொத்தாம் பொதுவாக, பிரிவினையை பிரதிபலிக்கிறது என்று அவர் சொல்வதைப் புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

    'திராவிடம்' என்ற சொல் ஒருகாலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கோட்பாட்டின் பெயராக இருக்கிறது. இதனைத்தான் தமிழ்நாட்டின் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். 'திராவிடம்' என்ற அரசியல் கோட்பாட்டு வடிவம் என்பது பண்டித அயோத்திதாசர் , சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், தந்தை பெரியார், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.ராஜா, பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தமிழினத் தலைவர் கலைஞர் போன்றவர்களால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் கருத்தியல் ஆகும். 'சாதி பேதமற்ற திராவிடர்கள்' என்று அழைத்தவர் பண்டித அயோத்திதாசர். தமிழ் என்பதே அதனை உச்சரிக்க முடியாதவர்களால் 'திரமிள' எனத் திரிந்து அழைக்கப்பட்டது என்பது மொழியியல் அறிஞர்கள் கருத்து. எனவே தான் தமிழ்-திராவிடம் என்பதை ஒரே பொருள் தரும் இருவேறு சொற்களாக பயன்படுத்தினார் தந்தை பெரியார்.

    இத்தகைய திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்பவை, சுயமரியாதை- சமூகநீதி -சமதர்மம்- மொழிப்பற்று- இன உரிமை-மாநில சுயாட்சி-இந்தியக் கூட்டாட்சி ஆகும். இதனை உள்ளடக்கியது தான் 'திராவிட மாடல்' ஆட்சியியல் கோட்பாடு ஆகும். தனது ஆட்சியின் நெறிமுறையாக இதனை வடித்துக் கொடுத்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் தனது இலக்காக முதலமைச்சர் குறிப்பிட்டு வருகிறார். இதில் பிரிவினை எங்கே இருக்கிறது?

    திராவிட மாடல் ஆட்சியின் அனைத்து சட்டமும், திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதே தவிர, யாரையும் வேறுபடுத்தி பாகுபடுத்தி பார்ப்பவை அல்ல.

    கோடிக்கணக்கானவர்களுக்கு-லட்சக்கணக்கானவர்களுக்கு நன்மை தரும் திட்டங்களைத் தான் முதலமைச்சர் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் சூத்திரர்கள் என்ற கருதுகோளை விதைத்தது மனு நூல். அதன் 10-வது அத்தியாயம் 44-வது சூத்திரத்தில் தமிழகம் என்பது திராவிடம் என்றே அழைக்கப்படுகிறது. "பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தநதம், கசம் இத்தேசங்களை யாண்டவர்களனைவரும் மேற்சொன்ன படி சூத்திர ராய்விட்டார்கள்" என்கிறது மனு. எது தமிழர்களைக் கொச்சைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லோ, அதனையே அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியது திராவிட இயக்கம். இத்தகைய திராவிட இயக்கமானது கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அமைத்துவிட்டதே என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

    அவருக்கு 'தமிழ்நாடு' என்ற சொல் பிடிக்கவில்லை. அதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக் கொள்ள முடியாது. அவருக்கு 'திராவிட இயக்கம்' பிடிக்கவில்லை. அதற்காக திராவிடம் என்ற சொல்லை நாங்களும் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. அடுத்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?

    ஆளுநராக வந்தவர், இந்த மாநிலத்துக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தினமும் ஏதாவது புலம்பிக் கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குக் குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். சனாதன-வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணைப் பிரசாரக் களமாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருகிறார். 'ஆளுநர் பதவி-என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம்' என்பதை மறந்து அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதியாலோசனை மண்டபமாக, கிண்டி மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார். கடந்த அரை நூற்றாண்டாக அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம் போன சனாதனப் புத்தகங்களுக்கு ஆர்.என்.ரவியை வைத்து புதிய பொழிப்புரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள். ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்பது தான் உண்மை.

    'ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவி தான். இங்கே இருந்து அவரை மாற்றி விடக் கூடாது. அவர் இருந்தால் தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்க முடியும்' என்று முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நெல்லை:

    தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை நெல்லை மாவட் டத்திற்கு வருகை தந்தார்.

    உற்சாக வரவேற்பு

    அவருக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே வைத்து தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் கிரகாம் பெல், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பாளை யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், சித்திக், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக் கோட்டை செல்லத்துரை, மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஜோசப் பெல்சி, அருள்மணி, ராஜன், நிர்வாகிகள் வீர பாண்டி யன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் ஆய்வு

    அதனைத்தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெறும் பாளை யூனியன் பாளை யஞ்செட்டி குளம் பஞ்சாயத்து மற்றும் ரெட்டி யார்பட்டி பஞ்சாயத்துகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கு மரக்கன்று கள் நட்டு வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உடன் இருந்தார். அதன் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

    நலத்திட்ட உதவிகள்

    அங்கு அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் 25 பயனாளிகளுக்கு உழவர் காசுக்கடன்கள் உள்பட மொத்தம் 643 பயனாளி களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போ தெல்லாம் அமைகிறதோ அப்போ தெல்லாம் மகளிருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு மாவட்டத்தில் உள்ள 528 நியாய விலை கடைகள் மூலம் முதல் கட்டமாக 2.46 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அதில் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு மையங்களில் பயனாளிகளால் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது வரை பெறப்பட்டுள்ளது.மீத முள்ள சுமார் 2 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
    • காலகாலமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேற்று திறக்கப்பட்டது. விழாவிற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலர் டி.பிஎம். மைதீன்கான் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு சிறந்த மாநிலம்

    நிதி மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கல்லூரியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒட்டு மொத்தமான கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவில் இருக்க கூடிய மாநிலங்களில் ஏறத்தாழ 52 சதவீதம் உயர் கல்வியில் இடம் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் உயர் கல்வியிலே தமிழ்நாடு பெற்றிருக்கிற உட்கட்டமைப்புக்கு மிக பெரிய சான்று இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. காலகாலமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றார். தொடர்ந்து ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம்வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், பழனிநாடார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி போஸ், தென்காசி நகராட்சி தலைவர் சாதிக், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, லாலா சங்கர பாண்டியன், கடற்கரை கிரஸ்டோபர், வக்கீல் சிவகுமார், ரஞ்சித் ஜெபராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா வரவேற்றார். முடிவில் ஆலடி அருணா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.

    ×