என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
- அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.
அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.
அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
- சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
- பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், 13, 14-ந் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி புதன் கிழமை (இன்று) 315 பஸ்களும் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 290 பஸ்களும், 13-ந் தேதி (சனிக்கிழமை) 340 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 10 (40 பஸ்கள்), 12 (40 பஸ்கள்) மற்றும் 13-ந் தேதிகளில் (40 பஸ்கள்) என 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரம் சோதனை.
- வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் பரபரப்பு.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர்.
பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர்.
வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறுகையில்," எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
- வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக தேவை.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளா்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் களம் காணுகின்றனர். அதற்காக வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக தேவைப்படுகிறது. மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு இந்திரமும் தேவைப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் 944 அமைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளும் (வி.வி.பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு தேவைக்கேற்ப ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்டபின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது.
எனவே, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி இன்று(புதன்கிழமை) வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
- இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
- இன்று திருச்சியில் உள்ள புலிவலம், மூவானூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று திருச்சியில் உள்ள புலிவலம், மூவானூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.
குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 45 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.
இதேபோல் நியாயவிலை கடைகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.
பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .
இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.
மீண்டும் என்னை நீங்கள் பாராளுமன்ற உறுப்பிராக தேர்ந்தெடுத்தால் மத்திய அரசு வழங்கும் தொகுதி மேம்பாட்டு நிதி 25 கோடியை பயன்படுத்தி உங்களின் குறைகளை நிவர்த்தி செய்வேன்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.
மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.
நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதையை ஓரிரு ஆண்டுகளில் நான் செய்து கொடுப்பேன்.
தேசிய நெடுஞ்சாலைகளில் 3 மேம்பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம். 9 தரைப்பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம். 2 உயர்மட்ட பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம்.
உங்கள் ஊரில் தொழிற்சாலை வேண்டும் என்று கேட்டுளீர்கள். காட்டுகுளம் - திருவலஞ்சுழி சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுளீர்கள். புலிவலத்தில் புதிய ஒன்றிய அலுவலகம் வேண்டும் என்று கேட்டுளீர்கள். என்னை மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுத்தால் உங்களின் தேவைகளை நான் நிறைவேற்றுவேன்.
இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக உறுப்பினர் அருண் நேரு குடும்பம் ஊழல் குடும்பம் ஆகும். திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம்.
யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
- பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.
- பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?
மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை ரிங் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
* இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களான சு. வெங்கடேசன் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
* புதிய பிரதமர் தமிழகத்திற்க நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் பிரதமராக இருப்பார். இப்போது இருக்கும் பிரதமர் போன்று இருக்கமாட்டார்.
* பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் ஆளுநர்களால் தொல்லை கொடுப்பார்கள். இதுதான் மோடி இந்தியா.
* பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?
* ஒருதாய் மக்களாக வாழும் நாட்டில் மதவெறியை விதைத்து மக்களை பிளவுப்படுத்தினார் மோடி.
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாடு முழுவதும் 70 ஆயிரம் கோடிக்கு மேல் கல்விக்கடன் வழங்கியது. 65 ஆயிரம் கோடி அளவிற்கு சிறு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டது. டி.ஆர். மத்திய மந்திரியாக இருக்கும்போது சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. நெசவுத் தொழிலில் இருந்து சென்மார்க் வரி நீக்கப்பட்டது. இன்னும் ஏராளமாக உள்ளது. பிரதமர் மோடியால் பட்டியல் போட முடியுமா?.
* தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி வர, தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மீது மட்டும் பிரதமர் மோடிக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம்தர குடிமக்களா?
* திராவிட மாடலின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏராளமான சாதனைகள் செய்த பெருமிதத்துடன் வாக்குகள் கேட்க நின்றிருக்கிறேன்.
* உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.
* கல்வியையும் மருத்துவத்தையும் இரு கண்களாக பார்க்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், திராவிடம் மீது பயம் இருப்பவர்கள் மதத்தின் விரோதியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களை பிரித்து குளிர் காய நினைக்கும் மதவாத்திற்குதான் நாங்கள் எதிரி. மதத்திற்கு அல்ல. நான் முதலமைச்சராக பதவி ஏற்றபின் அதிகமாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இந்து அறிநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாக்களில்தான். அன்பிற்கு மட்டுமல்ல. ஆன்மீகத்திற்கும் அடையாம் மதுரைதான்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
- எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்
- முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அண்ணன் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் 'பொன்மனச் செம்மல்" பாட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து புரட்சித் தலைவர் அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், மாண்புமிகு அம்மா அவர்கள் காலத்தில் கழக இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்
- முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்துக்கு பின்னால் போனதே இல்லை. அவரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்று தெரிவித்தார்.
- ஒருவர் விலை பட்டியல் (ரேட் கார்டு) உடன் பெண் அரசியல் தலைவரை ஒப்பிட்டு பேசுகிறார்.
- இன்னொருவர் 75 வயது பெண்மணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அருவருக்கதக்க வகையில் அசிங்கமாக பேசும் நபர்களுக்கு சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த 'கருத்துருவாக்கத்தை' மாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த 2 வாரங்களாக, பொது வெளியில் பெண்களுக்கு எதிராக என்னென்ன மாதிரியான வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நான் கவனித்து வருகிறேன்.
ஒருவர் 'விலை பட்டியல்' (ரேட் கார்டு) உடன் பெண் அரசியல் தலைவரை ஒப்பிட்டு பேசுகிறார். இன்னொருவர் 75 வயது பெண்மணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார். மற்றொருவர் 60 வயதை கடந்த பெண் அரசியல் தலைவரின் பிறப்பு குறித்து அசிங்கமாக பேசுகிறார்.
நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் இதுபோன்ற நபர்களுக்கு தடைவிதியுங்கள். பெண்களுக்கு எதிரான அசிங்கமான, அவதூறு பேச்சுகள் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான இந்த 'கருத்துருவாக்கத்தை' மாற்றாவிட்டால், வேறு எதையும் உங்களால் மாற்ற முடியாது" என கூறியுள்ளார்.
In the last two weeks, the language used about women in the political discourse has included "rate card", questions about parentage and disgusting comments about a 75-year-old lady. What is wrong with us? I request the media and influencers, please ban such people for good. We… pic.twitter.com/MXpPK9saEC
— Sadhguru (@SadhguruJV) April 8, 2024
இது தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள சத்குரு, "ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள பிரபலங்கள் உட்பட அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பெண்களுக்கு எதிராக அசிங்கமாக பேசும் நபர்களுக்கு தடைவிதியுங்கள்" என தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். இன்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்துள்ளார்
- இன்று இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார்
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். இன்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்துள்ளார். தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தடைந்தார்.
பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட உள்ளார். சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கிறார்.
பிரதமர் மோடியுடன் பிரசார வாகனத்தில் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால்.கனகராஜ் ஆகிய பாஜக வேட்பாளர்கள் உடன் இருந்தனர்.
ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் 144 தடைச் சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அவா், நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா். அங்கு வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பா.ஜ.க. வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.
அதன்பிறகு சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா்.
- சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
- இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.
அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.
ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
- மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






