என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.
    • தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் பணியாற்று வருகின்றனர்.

    இது தவிர செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, தனிப்பட்டறை என ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும்போது குறைந்தது 10 முதல் 15 நாட்களுக்கு விடுமுறை எடுத்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஓட்டு போடவும், பிரசாரத்தில் ஈடுபடவும் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மூட்டை முடிச்சுகளுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் ரெயில்களில் ஏறி சென்றனர்.

    இன்று காலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சொந்த ஊர் செல்ல வந்திருந்தனர். இனி வரும் நாட்களில் சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு ஆலைகளில் தயாரிப்பு பணி பாதிக்கும் என்றும் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம்.
    • பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏமப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார்.

    அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளை படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம்.

    ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்கு கூறினார்கள். சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார். குறிப்பாக தமிழர்கள் முன்னேற அவருக்கு விருப்பமில்லை. எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல இந்த முறை என் சகோதரர் ரவிகுமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் இருந்த பெண்களிடம் பேசினார். அதன் பின்னர் பிரசார வாகனத்தில் பானை சின்னம் பாடல் இசைக்கப்பட்டபோது அமைச்சர் பொன்முடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.

    • கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்றிரவு செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 2.3 கிலோ எடை கொண்ட யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானை தந்தத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த புதியவன் (வயது 32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யானை தந்தம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் அவர் விற்பனைக்கு கொடுத்ததாகவும், இதை தூத்துக்குடியை சேர்ந்த இன்னொரு நபர் வாங்க வந்ததாகவும் தாங்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்கள்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்தால் தான் யானை தந்தம் எங்கிருந்து கிடைத்தது? எப்படி வந்தது? என்ற விவரம் தெரிய வரும்.

    • வெள்ளி விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
    • வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. அதே போல வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640-க்கும் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 74 கன அடியிலிருந்து 85 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 57.30 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு மலைகளில் கோடை வறட்சி நிலவுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 100 அடிக்கு கீழ் குறைந்து விட்டது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 74 கன அடியிலிருந்து 85 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயில் இருந்து வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 57.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 22.71 டி.எம்.சி.யாக உள்ளது

    • சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
    • பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

    பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரசாரம் வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    பிரசாரத்துக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    இப்படி தேர்தல் பிரசாரம் 'களை' கட்டி உள்ள நிலையில் பிரதமர் மோடி சென்னையில் நேற்று ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்துக்கு 7-வது முறையாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள பிரதமர்மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தியும் காங்கிரசிற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இப்படி தேசிய தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

    தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் சோதனைகளும் தீவிரமாகி உள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பறக்கும் படை அதிகாரிகளும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் (வியாழக்கிழமை மட்டும்) புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் 12,19,26, மே 3, 10, 17, 24, 31 (வெள்ளிக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06069) அடுத்தநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்ததாலும் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறும். இதற்காக வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    19-ந்தேதி மாலை 6 மணி முதல் 23-ந்தேதி காலை 6 மணி வரை மொத்தமாக 26 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை, வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர் கபில் குமார் சி.சரட்கர், தேர்தல் பொது பார்வையாளர்கள் சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பொதுபார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் முன்னிலையில் காவல்துறை பணியாளர்களையும், பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களையும் சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி முதற்கட்டமாக நடைபெற்றது. மேலும், 5 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்திற்கு ஒரு போலீசாா், 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி உள்ள மையத்திற்கு 2 போலீசார் என மொத்தம் 9 ஆயிரத்து 277 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல, வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 97 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. தற்போது, 32 வாக்குச்சாவடிகள் கூடுதலாக பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி, தற்போது வரை சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அதில் மிகவும் பதற்றமானவையாக 23 வாக்குச்சாவடிகள் உள்ளது. 769 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதுவரையில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 524 பேருக்கு 'பூத் சிலிப்' கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 3 லட்சத்து 8 ஆயிரத்து 277 பேருக்கு 'பூத் சிலிப்' கொடுக்கப்பட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 82 பேர் நேற்று முன்தினம் தபால் வாக்களித்துள்ளனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள 944 இடங்களுக்கு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய 239 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று வாக்கு எந்திரம் நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் தபால் ஓட்டு வாங்கும் பணி தொடங்கிய நிலையில், அதற்காக தேர்தல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தபால் ஓட்டு சேகரித்து வந்தனர். அதில் நேற்று முன்தினம் 82 பேரும், நேற்று 931 பேரும் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களித்துள்ளனர்.

    • சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்.
    • எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    அதன்படி அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே...

    குஜராத் மாடல்- சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் #Elections2024-க்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே...

    இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?

    * சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்;

    இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்

    * எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்

    * தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு

    * ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது

    * மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து

    * ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400

    * வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

    * தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்

    * அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்

    * மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன்

    * வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம்

    * கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்

    * வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.

    * கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்

    * சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்

    * தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்

    * அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்

    * வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு

    * சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு

    * தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்

    * குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்; சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன்

    - என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா?

    இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் 'Made in BJP' வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்!

    #பதில்_சொல்லுங்க_மோடி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.

    அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

    அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

    ×