என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.

    பொள்ளாச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்டார். நீலகிரி, காரமடை, கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    அதனை தொடர்ந்து இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.

    இதனையொட்டி அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

    • அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது.
    • வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது. காட்டு தீயால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பறவைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், தேன் கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசப்பா (வயது29) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வனப்பகுதியில் தீ வைத்த குற்றத்திற்காக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    வனத்துறையினர் மல்லே சப்பாவை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையிலடைத்தனர்.

    வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார்.
    • உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

    வேலூர்:

    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமர் மோடியை கோஷம் எழுப்பி உற்சாகமாக பாஜக தொண்டர்கள் வரவேற்றனர்.

    தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை பிரதமர் மோடி அணிந்து வந்தார். தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார் பிரதமர் மோடி.

    பொன்னாடை அணிவித்து பிரதமர் மோடியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கவுரவித்தனர்.

    பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

    * வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி.

    * உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார்.

    * இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி.

    * அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
    • ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

    மதுரை:

    திரைப்பட இயக்குனர் அமீரை ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லி என்.சி.பி. போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இரண்டாவது முறையாக ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்.சி.பி. அதிகாரிகள் என்னை இரண்டாவது முறையாக ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரை இது ஒரு புது அனுபவம்தான். என்னோடு பயணித்த நபர் ஒருவர் மீது இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கும்போது, அந்த குற்றத்திற்கான சந்தேக நிழல் என்மீது விழுவதில் தவறில்லை. இதில் என்மீது சந்தேகமே படக்கூடாது என்று நான் கூறமுடியாது. அவர் மீது குற்றப்பின்னணி இருப்பதால் அவருடன் பயணித்தவர் என்ற முறையில் என்னிடம் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது.

    ஆனால் அதே நேரத்தில் என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வழக்கு குறித்தும், விசாரணை குறித்தும் எந்தவித முழுமையான தகவலை அறியாதவர்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு கருத்து சொல்வதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வரும்.

    என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக முதன்முறையாக என்னுடைய அறிக்கையில், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும். ஆரம்பம் முதல் குற்றம் சாற்றப்பட்ட நபர் ஜாபர் சாதிக்கை தற்போது வரை யாரும் பார்க்கவில்லை. அவர் சிறைக்கு சென்று விட்டார்.

    எனவே அவரைப்பற்றியோ, அவர் தொடர்பான வழக்கு பற்றியோ எதுவும் தற்போது கூறமுடியாது. அவரோடு பயணித்தவன் என்ற முறையில் என்மீது சந்தேக நிழல் விழுவதை நான் தட்டிக்கழிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். விசாரணை முடிந்ததும் முழுமையாக என்னுடைய பங்களிப்பு என்ன என்பதை தெளிவாக கூறுவேன். எனவே ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை நான் கடந்து தான் செல்ல வேண்டும், சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்தரப்பில் இருந்து இந்த வழக்கில் நல்ல முடிவு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.
    • காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

    பின்னர் அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலம் அருகே காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரியவந்தது. இதே தொடர்ந்து 7 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் பல்வேறு பணிகளில் பகுதிகளில் இருந்து வந்துள்ள நிபுணர்கள், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் தெர்மல் ட்ரோன் கேமரா, தானியங்கி கேமராக்கள், மோப்ப நாய்கள், வேட்டை நாய்கள் உதவியுடன் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கண்காணித்து சிறுத்தையை கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிவாய் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் சிறுத்தையின் எச்சம் கால் தடம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது:-

    சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை காஞ்சிவாயை அடுத்த கருப்பூர் அருகே நண்டல ஆற்றின் அருகில் சிறுத்தையின் எச்சம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிறுத்தை இடமாற்றம் அதன் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை குறித்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என்றார்.

    இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இன்று 8-வது நாளாக தொடர் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ்.புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதிகளில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எஸ்.புதூரில் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது.
    • குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது நீண்ட கால பிரச்சனைகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆங்காங்கே மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள திரு.வி.க. வீதி பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை கண்டித்தும், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு போர்டு வைத்து உள்ளனர்.

    மேலும் அதன் மேல் பகுதியில் கருப்பு கொடி கட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    ஈரோடு சூரம்பட்டி திரு.வீ.க. வீதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சூரம்பட்டி காந்தி ஜி மெயின் ரோட்டில் வலது புறம் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதி ஜனத்தொகை அதிகம் உள்ள நெருக்கடியான பகுதியாகும்.

    இங்கு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் குழந்தைகள் நல மருத்துவமனையும் அமைந்துள்ளது.

    டாஸ்மாக் கடையில் மது அருந்த வருபவர்கள் ஆங்காங்கே குடித்து விட்டு வாந்தி எடுத்து ரோட்டில் படுத்துக் கிடக்கின்றனர். சிலர் அலங்கோலமான நிலையில் உள்ளனர். இந்த பகுதியை கடந்து செல்ல பள்ளி மாணவ- மாணவிகள், பெண்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் மது பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்தும் சென்று விடுகின்றனர். குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

    எனவே உடனடியாக இந்த மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் திரு.வீ.க பகுதிக்கு உடனடியாக சென்று அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
    • வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.

    முன்னதாக தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து கப்பரை எடுத்து வரப்பட்டது. கப்பரையானது சுமார் 5 கி.மீ. தூரம் கொண்டு வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர், பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராதாகிருஷ்ண சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.

    சாமியார் வீசும் இந்த வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிட்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பின்னர், இரவு சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேற்று காலை முதலே கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாய்மேடு போலீசார் செய்திருந்தனர்.

    • பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார்.
    • சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார்.

    வேலூர்:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    அந்த வகையில், இதுவரை 6 முறை தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று சென்னையில் நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக 7-வது முறையாக தமிழகம் வந்தார்.

    பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி, அரக்கோணம் வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை அஸ்வத்தாமனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அருணாச்சலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் அமைந்துள்ள அம்மா திடலில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா நடக்கிறது. இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம் ஆகியவை நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை போன்றவை நடக்கிறது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.
    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சி னையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தி னரின் எண்ணிக்கை தொட ர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.

    சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது. அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவ டிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டதாக உலக வங்கி கருத்து தெரி வித்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக மக்களை ஏமாற்று கின்றனர். வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளை அறிவிப்பதற்கு 44 நாள் தாமதப்படுத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலையின் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதே போல தமிழக நதி நீர் உரிமையை பாதுகாப்பதில் பாரதிய ஜனதாவின் நிலை என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தேசியம் பேசுகிறவர்கள் கர்நாடகத்தில் மாநில உரிமைகள் குறித்து பேசுகின்றனர். எனவே ஒரு சொட்டு கூட தண்ணீர் தர முடியாது என்பவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடையாது என மக்கள் முடிவெடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது கன்னடராக இருப்பது தனக்கு பெருமை என பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தமிழகத்தில் எதற்கு போட்டியிட வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
    • காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (12-ந் தேதி) பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.

    பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரகடனம் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு பெரிய திருப்பம் ஏற்படும்.

    சென்னையில் பிரதமரின் வாகன பிரசாரத்துக்கான விளம்பர பதாகை அகற்றப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தான் நடக்க வேண்டும். எங்கள் தலைவர்கள் எல்லாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திக்கின்றனர். ஆனால் பிரதமர் தமிழ்நாட்டில் ஏதாவது சாதித்து விடலாம், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என ரோடு ஷோ நடத்துகிறார்.

    தமிழக மக்களுக்கு இவரது உண்மை முகம் தெரியும். அதனால் தமிழக மக்கள் பிரதமரை ஆதரிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே பெரிய ஊழலான தேர்தல் பத்திர ஊழல் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிட்டது போன்றவை தொடர்பாக பிரதமர் பேச மறுக்கிறார். தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் குறித்து மேட்டுப்பாளையத்தில் பிரதமர் பேச வேண்டும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. என்ன செய்தது? சி.ஏ.ஏ., என்.சி.ஆர். வேளாண் சட்டம் ஆகிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருந்துள்ளது.

    காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம். சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இல்லாமல் காவிரி விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. காவிரியில் அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×