என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார்.
- பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்:-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடியோடு மாற்றப்படும். தலைநகர் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்படும் என்று தடுமாறிய அவர், இல்லை... இல்லை... வாரணாசிக்கு மாற்றப்படும் என்றார். வைகோவின் இந்த தடுமாற்றமான பேச்சு அங்கு நின்ற பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதே போல புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார். பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார். அந்தாள வெளியில் தூக்கி போடுங்க என்று உத்தரவிட்டார். அவர் கட்சிக்காரர் என்று கூட்டத்தில் இருந்து பதில் வந்தது. இதனால் கோபமடைந்த வைகோ கட்சிக்காரர் என்றால் குடிக்க வேண்டுமா? நான் அடிவயிறு வலிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சலித்துக்கொண்டபடி தொடர்ந்து பேசி முடித்தார்.
- மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
- சின்னங்கள் மற்றும் நோட்டா என 14 சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூர் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பணிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் , பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 13 பேரின் பெயர், சின்னங்கள் மற்றும் நோட்டா என 14 சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்றது.
- மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள்.
- தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.
சென்னை:
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று இரவு 8 மணியளவில் அறிவித்தார்.
இதற்கிடையே கோவை-சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இஸ்லாமியர்களில் சிலர் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.
அவரது வழியில் வாழ்ந்து வரும் இசுலாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாகக் கழக அரசு திகழ்ந்து வருகிறது. 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாதுநபிக்கு அரசு விடுமுறை, இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த தலைவர் கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட நமது திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.
அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம், மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, இனி 5 லட்சம் வரை கல்விக்கடன்.
இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி, நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை என எண்ணற்ற அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான உதவித் தொகை, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.
இசுலாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்படி, இசுலாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இசுலாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்; கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.
மேலும் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் விவரம் வருமாறு:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சசிகலா, திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.
- வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.
வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்:-
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். மேலும் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்றார்.
- ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
- எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும்.
மண்ணச்சநல்லூர்:
நடிகர் கஞ்சாகருப்பு தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அம்மனுக்கு அவர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அக்னி சட்டியை அவர் கோவிலில் இறக்கி வைக்கும்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு வணங்கினார். பின்னர் அம்மனை தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறேன். சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டுவது நிச்சயம் நடக்கும்.
எதிர்க்கட்சியினர்கள் எடப்பாடி பழனிசாமியை பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிக்கிறார்கள். காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும். தூற்று பவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
- இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்ற நிலை உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.
வந்தே பாரத் உள்ளிட்ட எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே நாளை (11-ந்தேதி) முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து வருகிற 12, 19, 26 ஆகிய நாட்கள் மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது.
இதேபோல் நெல்லையில் இருந்து வருகிற 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் வியாழக்கிழமை தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேருகிறது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட் விரைவாக புக்கிங் ஆனது. ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்தனர். இந்த மாதம் மட்டுமின்றி மே மாதத்திற்கும் இடங்கள் நிரம்பி விட்டன. இரண்டு வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 100 முதல் 200 வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.
ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படுக்கைகள் மட்டும் ஒரு சில நாட்களில் காலியாக உள்ளன.
தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் பயணத்தை விட கட்டணம் குறைவாக இருப்பதோடு இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதால் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அலை அலையாக திரண்டு வருகிறார்கள்.
சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலும் முழு அளவில் செல்கிறது. தற்போது கோடை வெயில் வறுத்தெடுப்பதால் குளு குளு ஏசி வசதியுடன் சொகுசாக பயணம் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். இதனால் இந்த ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.
- வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
- வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.
சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இன்றும் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.
- சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை:
டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக் கில் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை திரட்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இது தொடர்பாக இயக்குனர் அமீரை டெல்லிக்கு நேரில் அழைத்து 10½ மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது அமீரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பல்வேறு தகவல்களை திரட்டியுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம், ஜாபர் சாதிக்கின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஜாபர்சாதிக் போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாக கூறப்படுவதால் இந்த பணம் எந்தெந்த வழிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய தகவல்களையே அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது திரட்டி வருகிறார்கள்.
சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளதா? சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அது தொடர்பாகவே ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் சிறையில் உள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த இயக்கு னர் அமீர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் ஏற்கனவே கடந்த 2-ந்தேதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அழைத்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் முடிவில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
- நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.
- திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.
வேலூர்:
வேலூரில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பிரித்தாளும் அரசியலை திமுக செய்து வருகிறது.
* மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வகையில் கருத்துகளை பரப்புகிறது திமுக.
* முழு நாடும் தமிழின் பெருமையை அறிய வேண்டும் என்பதே எனது முயற்சியாக உள்ளது.
* நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன்.
* குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு அழைக்கிறேன்.
* நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.
* நான் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது திமுக அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
* காங்கிரசும், திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது.
* தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும்போது திமுக, காங்கிரஸ் கண்ணீர் வடிக்கிறது.
* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் இருந்து உயிரோடு மீட்டுக்கொண்டு வந்தேன்.
* நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, வேலூர் அருகே உள்ள தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன்.
* திமுக, காங்கிரஸ் சனாதனத்தை அழிப்பதை பற்றி பேசி வருகிறார்கள்.
* திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் அயோத்தி ராமர் கோவிலை புறக்கணிக்கிறார்கள்.
* திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.
* தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை அவமானப்படுத்துவதை வேலூர் மக்கள் அறிவார்கள்.
* ஜெயலலிதா குறித்து எப்படி எல்லாம் மோசமாக பேசினார்கள் என்பது மக்களுக்குத்தெரியும்.
* ஏப்.19-ந்தேதி தமிழகத்தின் பெருமையை காக்க, வளர்ச்சிக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
* உங்கள் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்.
* அயோத்தி ராமர் வேடத்தில் ஒரு சிறுவன் எனக்கு கைகாட்டுவதை நான் பார்க்கிறேன்.
பெரியோர்களே, எனக்கு ஆசி வழங்குவதற்காக, எனக்கு ஆதரவு தருவதற்காக வந்துள்ள இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார்.
- அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்பு கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
- விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல். இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் சென்று இருந்தார்.
அங்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி முடிந்ததும், கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று அதிகாலை தளவாய்புரத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டு விருதுநகர் வந்தனர். அங்கு பங்குனி பொங்கலையொட்டி திருவிழா நடந்து வரும் பராசக்தி மாரியம்மன் கோவிலிலும் சாமி கும்பிட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கனகவேல் மகன் மணி ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் காலை 6.30 மணிக்கு கார் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அதே சமயம் வழியில் உள்ள எஸ்.பி.நத்தம் சாலையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி பின்னால் வைத்திருந்த பழக்கூடையுடன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டி வந்த மணி, இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரி மீது மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது.
அதிவேகமாக வந்த கார் அத்துடன் நிற்காமல் சாலையில் இருந்த தடுப்புக் கம்பியிலும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. காலை நேரம் என்பதால் காரில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தை ஆகியோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்தில் கார் சிக்கியதும் அதில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். விபத்தை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (வயது 55), காரில் பயணம் செய்த கனகவேல் (62), அவரது மனைவி கிருஷ்ணகுமாரி (58), கனகவேலின் மருமகள் நாகஜோதி (28), நாகஜோதியின் குழந்தை சிவா ஆத்மிகா (8) ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டும், காருக்குள் சிக்கி உடல் நசுங்கியும் பலியானார்கள்.
மேலும் காரில் இருந்த மணிகண்டன், ரத்தினசாமி, மீனா, சிவா ஆதித்யா, சிவாஸ்ரீ ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கள்ளிக்குடி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இன்று மதியம் மற்றொரு குழந்தையான சிவாஸ்ரீயும் பலியானது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆனது.
விபத்தில் பலியான குழந்தைகள் சிவாஆத்மிகாவும், சிவாஸ்ரீயும் இரட்டை குழந்தைகள் ஆவர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய மணிகண்டன் மதுரை பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்துள்ளார்.
- வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது.
- உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது.
வேலூரில் நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் உரையை தொடங்கினார்.
பின்னர் அவர் மேலும் பேசியதாவது:-
என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்.. தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
பொது மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் புத்தகாண்டில் தமிழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்.
வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரியாது.
வரலாறு, புராணம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வேலூரை நான் வணங்குகிறேன். முருகன் பெருமானை நான் வணங்குகிறேன்.
வரலாற்று சிறப்பு கொண்ட வேலூர் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்க இருக்கிறது.
21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.
2014-க்கு முன்பு உலகம் இந்தியாவை கேவலமாக பார்த்தது. செய்தி தாள்களில் தினந்தோறும் ஊழல் செய்திகள் வந்தன.
உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாக பார்க்கப்படுகிறது.
விண்வெளி துறையில் பாரதத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள்.
உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் விமான நிலையம் அமையம் உள்ளது. சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாக செல்கிறது.
இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமை பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது.
முழு திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாக மாறிவிட்டது. திமுகவின் செயலால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட 3 தகுதிகள் வேண்டும்.
ஊழல் செய்வதில் திமுக காப்புரிமை பெற்று இருக்கிறது.
மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கி உள்ளது.
மணல் கொள்ளை மூலம் ரூ.4,300 கோடி ஊழல். போதைப் பொருள் விற்பனையில் சிறு குழந்தைகள் கூட விட்டு வைக்கவில்லை.
வரும் மக்களவை தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத போது, வீட்டின் முன்புறம் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- வெளியே சென்றிருந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் வந்தபோது நடந்த விவரத்தை குழந்தைகளிடம் கேட்டு அறிந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கழுவன்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் செல்வேந்திரன்-சாந்தி தம்பதியினர். இவர்கள் தங்களது மூத்த மகன் கலைவாணன், 2-வது மகன் கணேஷ் ஆகியோர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் டெஷண்ட் வகையைச் சேர்ந்த நாயை 11 வருடங்களுக்கு முன்பு குட்டியாக எடுத்து வந்து ஹென்றி என்ற பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர். ஹென்றியின் பாசத்தால் அன்பால் தங்களது குடும்பத்தில் ஒரு மகனாக செல்வேந்திரன் குடும்பத்தினர் வளர்த்து வந்துள்ளனர்.
சுப நிகழ்ச்சிகளில் கூட ஒரு போட்டோ எடுப்பதாக இருந்தால் நாயுடன் தான் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடி அன்புடன் 11 வருடங்களாக பழகி வந்துள்ளது நாய் ஹென்றி.
தீபாவளியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்தால் நாய் பயப்படும் என்பதால் சிறிய ரக சத்தம் குறைவான பட்டாசுகளையே செல்வேந்திரன் குடும்பத்தினர் வெடிப்பார்கள். அந்த அளவிற்கு குடும்பத்தில் ஒருவராக இருந்தது.
இந்நிலையில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத போது, வீட்டின் முன்புறம் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள முந்திரி தோப்பில் இருந்து பாம்பு வந்தது.
இதை பார்த்த நாய் குலைத்து சத்தம் எழுப்பியத்துடன் குழந்தைகளை தன் காலால் தள்ளி பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியது. பின்னர் வீட்டை நோக்கி வந்த பாம்பை உள்ளே விடாமல் போராடியது. அப்போது பாம்பு நாயை கடித்தது. எனினும் கவலைப்படாமல் பாம்பை நாய் குதறியது. இதில் பாம்பு செத்தது. பாம்பின் விஷத்தால் நாய் ஹென்றி மயங்கி விழுந்தது.
இதனிடையே வெளியே சென்றிருந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் வந்தபோது நடந்த விவரத்தை குழந்தைகளிடம் கேட்டு அறிந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாயை தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே பாம்பின் விஷத்தால் நாய் இறந்து விட்டதை தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரை இழந்த தூக்கத்தில் குழந்தைகளை காப்பாற்றி வீரமரணம் அடைந்த நாய்க்கு டிஜிட்டல் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி, உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தார்கள். மேலும் குடும்ப உறுப்பினர் இறந்தால் அனுசரிக்கப்படும் 14 நாள் துக்கம் அனுசரித்து சடங்குகள் செய்து வருகின்றனர்.
எஜமானரின் பேரக்குழந்தைகளை காப்பாற்ற நாய் போராடி உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






