search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை சிறப்பு ரெயிலில் அனைத்து இடங்களும் நிரம்பின: மே மாதம் வரை காத்திருப்போர் பட்டியல் நீட்டிப்பு
    X

    நெல்லை சிறப்பு ரெயிலில் அனைத்து இடங்களும் நிரம்பின: மே மாதம் வரை காத்திருப்போர் பட்டியல் நீட்டிப்பு

    • தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
    • இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்ற நிலை உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    வந்தே பாரத் உள்ளிட்ட எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே நாளை (11-ந்தேதி) முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து வருகிற 12, 19, 26 ஆகிய நாட்கள் மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து வருகிற 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் வியாழக்கிழமை தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேருகிறது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட் விரைவாக புக்கிங் ஆனது. ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்தனர். இந்த மாதம் மட்டுமின்றி மே மாதத்திற்கும் இடங்கள் நிரம்பி விட்டன. இரண்டு வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 100 முதல் 200 வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.

    ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படுக்கைகள் மட்டும் ஒரு சில நாட்களில் காலியாக உள்ளன.

    தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் பயணத்தை விட கட்டணம் குறைவாக இருப்பதோடு இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதால் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அலை அலையாக திரண்டு வருகிறார்கள்.

    சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலும் முழு அளவில் செல்கிறது. தற்போது கோடை வெயில் வறுத்தெடுப்பதால் குளு குளு ஏசி வசதியுடன் சொகுசாக பயணம் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். இதனால் இந்த ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×