search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து 19-ந்தேதி தண்ணீர் திறப்பு
    X

    மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து 19-ந்தேதி தண்ணீர் திறப்பு

    • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்ததாலும் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறும். இதற்காக வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    19-ந்தேதி மாலை 6 மணி முதல் 23-ந்தேதி காலை 6 மணி வரை மொத்தமாக 26 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×