என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எனது தொகுதியான ராயபுரத்தில் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருந்தது.
- பாஜக இல்லை என்றால் நாங்கள் தான் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் கூறியதாவது:
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்கு ஜெயக்குமார் "இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே பறிபோது என்றும், இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.
நானெல்லாம் ராயபுரத்தில் தோற்கிற ஆளா? நான் இப்போது மனம் திறந்து சொல்கிறேன். 25 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக இந்த ராயபுரத்தில் இருந்தேன். தோல்வி என்பதையே அறியாத ஆள் நான். பாஜகாவால் தான் தோற்றேன். பாஜகா என்று ஒன்று இல்லை என்றால் நானெல்லாம் சட்டமன்றத்தில் இருந்திருப்பேன். எனது தொகுதியான ராயபுரத்தில் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருந்தது. என் மீது எனது தொகுதி மக்களுக்கு எந்தவித கோபமும் கிடையாது. அப்போதே என் தொகுதி மக்கள் கூறினார்கள் பாஜகவை கழட்டி விட்டுவிடுங்கள் என்று, நான் சொன்னேன் வேஸ்ட் லக்கேஜ் தான்.. வேறு என்ன செய்வது.. சமயம் வரும் போது கழட்டி விட்டுவிடுவோம் என்று கூறினோம் அதே போல் இப்போது கழட்டி விட்டுவிட்டோம். பாஜக வேஸ்ட் லக்கேட், அந்த பேட்டி இனிமேல் ஓடாத பேட்டி, ஓடாத வண்டி, பழைய மோட்டார் சைக்கில் என்று நினைத்து கழட்டி விட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் நாங்கள் தான் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
- பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும்.
- கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம்மை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட கையேந்தும் நிலையில்தான் உள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருசிலர் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீரில் யாராவது கைவைத்தால், அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி.
இந்த பகுதியின் வனவிலங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும். கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.
- சுதீஷ் இன்று மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இன்று தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.
இதனை மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். சாதாரண தொண்டையும் மந்திரிகளாக, எம்.பிக்களாக ஆக்கியவர்.
அவரை தொடர்ந்து விஜயகாந்தும் சாதாரண தொண்டர்களை வேட்பாளராக நிறுத்தி எம்.எல்.ஏக்களாக உருவாக்கியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
- கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. சோதனை சாவடி அருகே வந்த ஒற்றை யானை போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்குவது போன்று வந்தது.
இதை கண்ட போலீசார், வனத்துறையினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதியில் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.
சென்னை:
டெல்லியில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சூடோபெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் செயலாளருமான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கிய ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஜாபர்சாதிக் போதை பொருள் கடத்தல் மூலமாக ரூ.40 கோடியை சுருட்டி இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த பணத்தில் ரூ.18 கோடியை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஜாபர்சாதிக் ஒரு கிலோ போதைப் பொருளுக்கு ரூ. ஒரு லட்சம் பணத்தை கமிஷனாக பெற்று வந்திருப்பது ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாபர்சாதிக் ஒரே நேரத்தில் மங்கை, இறைவன் மிகப்பெரியவன் உள்பட 4 படங்களை தயாரித்து வந்துள்ளார். இதனால் ரூ.18 கோடி பணத்தையும் தாண்டி சினிமாவில் மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் கொட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஜாபர்சாதிக் தயாரித்து வந்த படங்களை இயக்கிய சினிமா இயக்குனர்களுக்கு எத்தனை கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதில் சினிமா இயக்குனர்களுக்கு சில கோடிகள் வரையில் குறிப்பிட்ட தொகை பேசப்பட்டு அந்த பணத்தை ஜாபர் சாதிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்த பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்களில் இயக்குனர் அமீர் மட்டுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
2-வது முறையாக டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அமீரின் சொத்து விவரங்கள், பண பரிமாற்ற தகவல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மேலும் ஒரு இயக்குனரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதை தவிர ஜாபர்சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடமும் அமலாக்க துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.
ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கு விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ரூ.21 கோடி பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணமாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பணத்தை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். ரூ.40 கோடி பணத்தை தவிர மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் சுருட்டியிருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.
இதனால் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பான புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை.
- ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.
தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை கொடுக்காமல் ஒதுங்கிவிட்டனர்.
இதனால் காங்கிரசை நம்பி காத்திருந்த கமல்ஹாசனை யாருமே பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போய் சந்தித்தார்.
அப்போது போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் மேல்சபை எம்.பி. பதவி மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளராமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். நெல்லை மற்றும் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

கோவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராகுலுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி இருப்பதால் என்னால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி கமல்ஹாசன் புறக்கணித்துள்ளார்.
ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவரது செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியும் பேசி வந்துள்ளார். டெல்லியில் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று பேசியுள்ள அவர் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரமும் மேற்கொண்டார்.
ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது நடந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.
இப்படி தேர்தல் நேரத்தில் யாரோ ஒருவர் போல மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக காங்கிரசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதே, கமல்ஹாசனின் கோபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இப்படி காங்கிரஸ் கட்சி மீது கமல் கொண்டுள்ள கோபம் இன்னும் அடங்காமல் இருப்பதாலேயே ராகுல் பிரசாரக் கூட்டத்தை கமல் ஹாசன் புறக்கணித்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
ராகுலின் தமிழக சுற்றுப் பயணம் பற்றி கமல்ஹாசன் எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
- பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், தேசிய கட்சிகள் மற்றும் மாநிலத்தின் பிரதான கட்சிகளின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய கட்சியான பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வலுவான கூட்டணி அமைத்து பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு பரப்புரை செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி ஏற்கனவே 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா-கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய நிலையில் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை(திங்கட்கிழமை) தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார். அவர் நெல்லை மாவட்டம் அம்பையில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.
நாளை மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அம்பை வரும் பிரதமர் மோடி அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.

அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு குண்டு துளைக்காத காரில் செல்லும் பிரதமர் மோடி பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மேடைக்கு செல்கிறார். அங்கு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி அம்பை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருபுறம் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஹெலிபேடு உள்ள மைதானம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. அங்கு சுற்றிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு வெளியாட்கள் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அம்பை பொதுக்கூட்ட மேடையில் இருந்து சுற்றிலும் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு டிரோன்கள் பறப்பதற்கு இன்றும், நாளையும் தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி வருகைக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து நேற்று முதல் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் நாளையும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் அம்பையில் முகாமிட்டுள்ளனர். இதுதவிர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் பிரிவு அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மோடியின் வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகளும் 16-ந்தேதி அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், அன்னவாகன காட்சிகள் நடக்கிறது. 17-ந்தேதி கைலாச வாகன புஸ்ப விமானம் நிகழ்ச்சி நடக்கிறது.
18-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கரிவரதராஜ பெருமாள் கோவில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
19-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், வெள்ள யானை வாகன காட்சி நடைபெற உள்ளது. 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 21-ந்தேதி சிறிது தொலைவு தேர் இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.
மீண்டும் 22-ந்தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படுகிறது. 23-ந்தேதி அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்காக பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
சோபகிருது முடிந்து இன்று குரோதி வருடம் பிறந்ததைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குரோதி வருட தமிழ்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆன போதிலும் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கும், அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட நாணயங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நாணயங்களையும், பிரசாதங்களையும் பெற்றுச் சென்றனர்.
- குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 22.3 கிராம் கஞ்சா, குட்கா பொருட்கள் 136.6 கிலோ கிராம், மதுபான வகைகள் 276.2 லிட்டர், கள்-346லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு கட்சியினர் மீது 11 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 12,723 வழக்குகளும் ரூ.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மேற்பார்வையில், நிலையான கண்காணிப்பு குழு-19, பறக்கும்படை குழு-19, சோதனை சாவடிகள்-15 அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட எஸ்.பி வருண்குமார், மேற்பார்வையில் 3 கூடுதல் எஸ்பிக்கள், 11 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 253 எஸ்.ஐ, 1292துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் 9487464651 என்ற எண்ணில் 24மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
- நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நாள்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து நேற்று அவர் திறந்த ஜீப்பில் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தின் போது வேட்பாளர் விஜய் வசந்த் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-
கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வாயால் வடை சுட்டு வருகிறார். (அதனை வெளிப்படுத்தும் விதமாக வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வடையை பொதுமக்களிடம் காண்பித்து, இதுதான் மோடி சுட்ட வடை என்றனர்). நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான் வருகின்ற 19-ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்.
ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும், அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பா.ஜனதா அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும், விவசாயிகளின் விவசாய கடனையும் ரத்து செய்ய மறுத்த பா.ஜனதா அரசு, அதானிக்கும்- அம்பானிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை மேலும், மேலும் பணக்காரர்களாக மாற்றி வருகிறது.
ஆனால் நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும், நமது மண்ணில் ஒற்றுமையாக வாழ நினைக்கும் மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஏமாற்றுவாதிகளை விரட்டி அடிப்பதற்கும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
- முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
கம்பம்:
ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.
கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது.






