search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல் கூட்டத்தை புறக்கணித்த கமல்ஹாசன்
    X

    ராகுல் கூட்டத்தை புறக்கணித்த கமல்ஹாசன்

    • காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை.
    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை கொடுக்காமல் ஒதுங்கிவிட்டனர்.

    இதனால் காங்கிரசை நம்பி காத்திருந்த கமல்ஹாசனை யாருமே பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போய் சந்தித்தார்.

    அப்போது போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் மேல்சபை எம்.பி. பதவி மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளராமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். நெல்லை மற்றும் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.


    கோவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராகுலுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி இருப்பதால் என்னால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி கமல்ஹாசன் புறக்கணித்துள்ளார்.

    ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவரது செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியும் பேசி வந்துள்ளார். டெல்லியில் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று பேசியுள்ள அவர் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரமும் மேற்கொண்டார்.

    ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது நடந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.

    இப்படி தேர்தல் நேரத்தில் யாரோ ஒருவர் போல மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக காங்கிரசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதே, கமல்ஹாசனின் கோபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படி காங்கிரஸ் கட்சி மீது கமல் கொண்டுள்ள கோபம் இன்னும் அடங்காமல் இருப்பதாலேயே ராகுல் பிரசாரக் கூட்டத்தை கமல் ஹாசன் புறக்கணித்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    ராகுலின் தமிழக சுற்றுப் பயணம் பற்றி கமல்ஹாசன் எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×