search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீதி உலா"

    • மேல்மலையனூரில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
    • 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட 6 விதமான அசுத்த மலங்கள் சுரந்த வண்ணமாக உள்ளதாகவும் இந்த 6 அசுத்த மலங்களில் ஒவ்வொருநாளும் 3 வித அசுத்த மலங்களே களையப்படுவதாகவும், சுத்தம் செய்யப்படுகிறது.

    மீதமுள்ள உட்புற 3 மலங்களான ஆணவ மலம், கண்ம மலம், மாயை மலம் ஆகிய ஆணவம், இறுமாப்பு, தலைக்கணம், அகங்காரம் போன்ற தீய எண்ணங்களான குணங்கள் அங்காளம்மனை தியானம் செய்வதாலும், வழிபாடு செய்வதாலுமே சிறிது சிறிதாக உடலைவிட்டு விலகி தூய சிந்தனை ஏற்படுவதாகவும் அதற்காகவே தினந்தோறும் வீடுகளில் விளக்கேற்றி வைத்தே தியானம் செய்யப்படுவதாகவும் வருடத்திற்கு ஒருமுறையாகிலும் இக்குணங்கள் ஏற்படா வண்ணம் அறவே அழித்து ஒழிக்கவுமே இவற்றை தலைமையிட அங்காளம்மன் கோவிலிலே அழித்து ஒழிப்பதாகவே கருதப்படுகிறது.

    மனித இயக்க 5 செயல்களுக்கும் முக்கிய இடமாகிய ஐம்பொறி என்ற கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய அனைத்தையும் தாங்கி நிற்கும் தலைமை இடமான தலையையே! அங்காளம்மன் தலைமையிட கோவிலிலே தலையில் தாங்கியுள்ள முடிகளையே அகற்றும் வண்ணம் தலையை மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    அங்காளம்மன் திருக்கோவிலில் இருந்து தெளிவான ஞானத்தையும் அம்மன் பேரில் தூய அன்பையும் அவளின் அருளையும் தான் மொட்டைத் தலை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்காகவே அங்காளம்மனுக்கு வேண்டுதல் பெயரில் மொட்டை அடிக்கப்படுவதாகவே வழக்கத்தில் உள்ளதற்கு உண்மை விளக்கமாகவே அமைகிறது.

    குலதெய்வ கோவில் ஜடாமுனீஸ்வரன்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக பெரிய ஏரிக்கரையின் கீழ் அமைந் துள்ள ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார். இந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு இக்கோவிலில்தான் முடி காணிக்கை செலுத்தி காது குத்துவார்கள். ஆடி மாதம் வெகு விமரிசையாக இங்கு விழா நடத்துவார்கள்.

    • தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது.
    • மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும்.

    தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களுக்கு எல்லாம் தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது. பிற ஊர்களில் அங்காள பரமேஸ்வரி கோவில் கட்ட விரும்புகிறார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு வந்து மண் எடுத்து எந்த ஊரில் கோவில் கட்டுகிறார்களோ அந்த ஊரில் கோவில் கட்டுவதற்கு முன்பு இந்த மண்ணை போட்டு அதன் பிறகு கட்டிட வேலைகளை தொடங்குவார்கள்.

    அதேபோல் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் இருந்து தீர்த்தங்களையும் எடுத்து செல்வார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா தொடங்கும் போது, பிற ஊர்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள் மேல் மலையனூர் வந்து அக்னி தீர்த்தத்தில் தீர்த்தம் எடுத்துச்சென்று அன்னையிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தங்கள் ஊரில் திருவிழாவுக்கு கொடி ஏற்றுவார்கள்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து உருவான முக்கியமான கோவில்களில் பாண்டிச்சேரி சின்ன சுப்பராய வீதியில் உள்ள அங்காள பரமஸ்வரி கோவில் முக்கியமானதாகும். மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும். இத்திருவிழா தொடர்ந்து 24 நாட்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும்.
    • பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும்

    சில கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல், குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல்மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு, மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்திக் கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    • சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும்.
    • ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

    சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும். அன்றைய தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    வைகாசி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் இரவு ஊஞ்சல் உற்சவம் நடை பெறும்.

    ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஆடிமாதம் முழுவதும் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலிப்பர்.

    ஆவணி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    புரட்டாசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மறுநாளில் இருந்து நவராத்திரி கொலுவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். விஜயதசமி அன்று மாலையில் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் கையில் வில், அம்புடன் குதிரை வாகனத்தில் மந்தைவெளியில் எழுந்தருள்வார். பின்பு வன்னிமரத்தின் மீது அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஐப்பசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தீபாவளி அன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    கார்த்திகை மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    திருவண்ணாமலை தீபத் திருநாள் அன்று உற்சவ அம்மன் மாலை நேரத்தில் பல்லக்கில் வந்து தென்மேற்கு மூலையில் இருந்து திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மனுக்கு தீபாரதனை நடைபெறும்.

    மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    தை மாதம் பொங்கல் அன்று வடக்கு வாசல் அருகில் பெரிய பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கும் அம்மனுக்கும் படைப்பார்கள். அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் நடைபெறும்.

    மாசி மாதம் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறும். இம்மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    பங்குனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    • 9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்பர்.
    • பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம்.

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆலயங்களை கட்டிய நம் முன்னோர்கள், அந்த ஆலயங்களில் தினமும் எத்தனை தடவை பூஜை செய்ய வேண்டும்? எப்போது பூஜை செய்ய வேண்டும்? வாரத்துக்கு ஒரு தடவை எத்தகைய பூஜை முறைகளை கடைபிடிக்க வேண்டும்? மாதத்துக்கு ஒரு தடவை என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று கணித்து நடைமுறைப்படுத்தினார்கள்.

    அது மட்டுமின்றி எந்தெந்த மாதங்களில் விழாக்கள் நடத்த வேண்டும் என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள். இந்த விழாக்கள் எல்லாம் பக்தர்களை ஆலயத்துடன் நெருங்க வைக்கும் இயல்பு கொண்டவை. அதோடு இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் இறைவன் மீதுள்ள ஆத்மார்த்தமான பக்தியை மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட செய்து விட்டவையாகும்.

    இந்த விழாக்களில் முதன்மையானது உற்சவங்களில் ஒன்றான பிரம்மோற்சவம் ஆகும்.

    தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு ஒரு தடவை மிக விமரிசையாக பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த விழா அந்தந்த ஆலய தல வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கும்.

    பொதுவாக உற்சவங்கள் என்பது இந்த உலகில் உள்ள உயர்வான படைப்புகளின் விருத்திக்காகவே நடத்தப்படுவதாக கூறப்படுவதுண்டு. எனவே உற்சவங்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த உற்சவங்கள் ஒவ்வொன்றும் ஆலய வழிபாட்டின் சூட்சுமத்தை பொதிந்து வைத்துள்ளது.

    ஆகையால் சக்தி வாய்ந்த ஆலயங்களில் முறைப்படி பிரம்மோற்சவம் நடத்தப்படா விட்டால் அது ஆட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் தீய விளைவுகளை கொடுத்து விடும் என்று ஞானோத்திர ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோற்சவம் நடத்தப்படாவிட்டால் அந்த பகுதி மக்களுக்கு கிரகபீடை, நோய்கள், ஆயுள் குறைவு போன்றவை ஏற்படும் என்றும் அந்த ஆகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    நம் முன்னோர்கள் ஆலயங்களில் நடக்கும் உற்சவங்களை ஆறு வகையாக பிரித்துள்ளனர் அவை வருமாறு:-

    1. பைத்ருகம் எனும் உற்சவம், 12 நாட்கள் நடைபெறும்.

    2. சவுக்கியம் எனும் உற்சவம், 9 நாட்கள் நடைபெறும்

    3. ஸ்ரீகரம் என்ற உற்சவம், 7 நாட்கள் நடைபெறும்.

    4. பார்த்திவம் எனப்படும் உற்சவம், 5 நாட்கள் நடைபெறும்.

    5. சாத்வீகம் எனும் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும்.

    6. சைவம் என்ற உற்சவம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடக்கும்.

    9 நாட்களுக்கு மேல் நடக்கும் உற்சவங்களையே பிரம்மோற்சவம் என்று சொல்வார்கள். மிகப்பெரிதாக இருப்பதை `பிரம்மா' என்பார்கள். எனவே நீண்ட நாட்கள் நடக்கும் உற்சவத்தை பிரம்மோற்சவம் என்கிறார்கள்.

    பிரம்மோற்சவத்துக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அதாவது திருப்பதி உள்ளிட்ட சில தலங்களில் உற்சவத்தை பிரம்மனே முன் நின்று நடத்துவதாக ஐதீகம் உண்டு. பிரம்மன் நடத்தும் உற்சவம் என்பதால் அதற்கு பிரம்மோற்சவம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்வார்கள்.

    இவை தவிர 5 வகை சிருஷ்டி தொழிலை குறிக்கும் உற்சவத்துக்கும் பிரம்மோற்சவம் என்று பெயராகும். இதை `பஞ்ச கிருத்யம்' என்றும் சொல்வார்கள்.

    உற்சவ காலத்தில் மேற்கொள்ளபடும் ம்ருதசங்கரஹனம், அங்குரார்ப்பனம், கல்யாணம், த்வஜாரோஹனம், ரட்சாபந்தனம் ஆகிய ஐந்தும்தான் பஞ்ச கிருத்யங்கள் என்று கூறப்படுகின்றன.

    பிரம்மோற்சவ கொண்டாட்டம் ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். திருப்பதியில் ஒரு காலத்தில் புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றும் என 2 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டன.

    திருப்பதி ஆலயத்தின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் ஆண்டு 11 தடவை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாக பொறிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பழமை, வருவாய் மற்றும் மரபுகளை பொருத்தே பிரம்மோற்சவ கொண்டாட்டங்கள் அமையும்.

    பிரம்மோற்சவங்கள் ஆலயத்துக்கு ஆலயம் வித்தியாசப்பட்டாலும் வார உற்சவம், மாத உற்சவம், பட்ச உற்சவம் என்ற விதமாகவே நடத்தப்படும்.

    சிவனுக்கு ஒருநாள் உற்சவமே உகந்ததாகும். கிராமத்தின் நன்மைக்காக 3 நாள் உற்சவத்தை நடத்தினார்கள்.

    பூதங்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள 5 நாட்கள் உற்சவம் நடத்தப்பட்டது. அம்பாளுக்கு உகந்தது 7 நாட்கள் உற்சவமாகும். உலக நன்மைக்காக 9 நாட்கள் உற்சவம் நடத்தப்படுகிறது.

    ஆனால் தற்போது பெரும்பாலான சைவ தலங்களிலும், வைணவ ஆலயங்களிலும் 9 அல்லது 10 நாட்களாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த நாட்களில் ஆலயத்தில் இருக்கும் உற்சவ மூர்த்தி காலையும், மாலையும் வீதியுலா வருவார். இதன் மூலம் ஆலயத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் உற்சவரை வழிபட்டு பலன் பெறுவார்கள்.

    இறைவனே தம் வீட்டு வாசல் வரை வந்து விடுவதால் பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களிடம் மகிழ்ச்சி பொங்கி வழியும். உற்சவரை வரவேற்று இறையருள் பெறுவார்கள்.

    சைவ ஆலயங்களில் பிரம்மோற்சவ விழாவின் தொடக்கமாக புற்றுமண் எடுத்து முளையிடும் நிகழ்ச்சி நடைபெறும். இது சிருஷ்டி தொழிலை குறிக்கும்.

    அடுத்தது கொடி ஏற்றம். அதில் ஈசனுக்குரிய ரிஷபக்கொடி ஏற்றப்படும்.

    இரண்டாம் நாள் சூரிய, சந்திர பிரபைகளில் உற்சவர் எழுந்தருள்வார். இறைவன் சூரிய, சந்திரர்கள் மூலம் உலகத்துக்கு தனது கருணை ஒளியைப் பரப்புகிறான் என்பதை இந்த நடைமுறை உணர்த்தும்.

    மூன்றாம் நாள் அதிகார நந்தி, பூதவாகனம். இது இறைவனின் அழித்தல் தொழிலை குறிக்கும். 4-ம் நாள் நாக வாகனம், 5-ம் நாள் ரிஷப வாகனம், 6-ம் நாள் யானை வாகனம், 7-ம் நாள் திருக்கல்யாணம், 8-ம் நாள் கயிலாய வாகனம், 9-ம் நாள் பிட்சாடனர் திருவீதியுலா நடைபெறும். பிறகு கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

    வைணவத் தலங்களிலும் பிரம்மோற்சவத்தின்போது காலை, மாலை இரு நேரமும் உற்சவ மூர்த்தி பல வகை வாகனங்களில், விசேஷ அலங்காரத்துடன் உலா வருவார். கொடியேற்றம் நடந்த பிறகு 2-ம் நாள் காலையில் சின்ன சேஷ வாகனம், இரவில் அன்ன வாகனத்தில் உற்சவர் வீதியுலா வருவார்.

    3-ம் நாள் காலையில் சிம்ம வாகனம், மாலையில் முத்துப் பல்லக்கு சேவை, 4-ம் நாள் காலையில் கல்ப விருட்ச வாகனம், இரவில் சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்தி உலா வருவார்.

    ஐந்தாம் நாள் காலை உற்சவர் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வருவார். அன்றிரவு கருட சேவை நடைபெறும். பிரம்மோற்சவத்தின் மிக முக்கியமான தினமாக இந்த சேவை நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருட சேவையை தரிசனம் செய்வார்கள். இந்த வழிபாடு பிறவிப் பிணியை நீக்கவல்லது.

    6-ம் நாள் காலையில் அனுமன் வாகனம், இரவில் கஜ வாகனம், 7-ம் நாள் காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை உற்சவம் நடைபெறும். 8-ம் நாள் தேரோட்டம் நடத்துவார்கள்.

    பிரம்மோற்சவ நாட்களில் தினமும் மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இந்த ஊஞ்சல் சேவையை காண்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பம் பெருகும்.

    பிரம்மோற்சவ நாட்களில் கலசங்கள் நிறுவப்படுதல், ஹோமம் செய்தல் ஆகியவையும் நடத்தப்படும். சில தலங்களில் பெரிய புஷ்கரணி இருக்கும். பிரம்மோற்சவ நாட்களில் அங்கு தெப்ப உற்சவம் நடத்துவார்கள்.

    அதுபோல பிரம்மோற்சவ தேரோட்டம் பிரமாண்டமாக நடைபெறும். தேரோட்டத்தின் போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதி வித்தியாசம் பார்க்காமல் தேர் இழுப்பார்கள். இப்படி மக்களை மனதால் ஒருங்கிணைக்க செய்யும் விழாவாகவும், இறை உணர்வில் மனதை மூழ்க செய்யும் விழாவாகவும் பிரம்மோற்சவம் அமையும்.

    அது மட்டுமின்றி பக்தர்களின் மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் பிரம்மோற்சவத்துக்கு உண்டு. பிரம்மோற்சவத்துக்கு உள்ள மகத்துவம், சிறப்பும் ஆலயத்தில் நடக்கும் கும்பாபிஷேகத்துக்கும் உண்டு.

    • சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் மணக்குள விநாயகர்.
    • ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி அன்று உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கம்.

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. திருச்சி என்றதும் உச்சிப் பிள்ளையார் நினைவுக்கு வருவார். மதுரை என்றதும் தாய் மீனாட்சி கண்முன் வந்து நிற்பாள்.

    அது போலத்தான் புதுச்சேரி என்று சொன்னதுமே மணக்குள விநாயகர் `பளீர்' என எல்லாரது மனதிலும் தோன்றுவார். புதுச்சேரியின் நாயகனே இவர்தான்.

    புதுச்சேரி மக்களின் உயிரோடும், உணர்வோடும் இவர் இரண்டற கலந்துள்ளார். இதனால் புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் மணக்குள விநயாகரை தங்கள் குல தெய்வமாகவும், கண் கண்ட தெய்வமாகவும் கருதுகிறார்கள்.

    மணக்குள விநாயகருக்கு முதல் வழிபாடு செய்யாமல் அவர்கள் எதையுமே செய்வதில்லை. குடும்பத்தில் திருமணம் நடைபெற இருந்தால் முதல் அழைப்பிதழை மணக்குள விநாயகருக்குத்தான் கொடுப்பார்கள்.

    குழந்தை பிறந்தால் தீட்டுக் காலம் முடிந்ததும், கோவிலுக்கு தூக்கி வந்து விடுவார்கள். மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கடலை போன்றவற்றை படைத்து வழிபடுவார்கள். பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டி மணக்குள விநாயகர் சன்னதி முன்பு படுக்க வைப்பார்கள். இதன் மூலம் தங்கள் குழந்தைக்கு விநாயகர் அருளாசி கிடைத்து விடுவதாக நம்புகிறார்கள்.

    இது மட்டுமல்ல புதிதாக வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, நிலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வணிக ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தாலும் சரி, புதிதாக கடை தொடங்குவதாக இருந்தாலும் சரி, மணக்குள விநாயகர் முன்பு ஆஜராகி விட்டுத்தான் எதையும் செய்வார்கள்.

    விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர் கள், பெண்கள் என்று எல்லாருமே மணக்குள விநாயகரை முன் வைத்தே எதையும் செய்வது உண்டு. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளும் விலக்கல்ல.

    புதுச்சேரி அரசியல்வாதிகளில் 99 சதவீதம் பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்வதில் தொடங்கி பதவி ஏற்பது வரை ஒவ்வொரு தடவையும் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வந்து ஆசி பெற்ற பின்பே செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    அது போல புதுச்சேரியில் முதல்-மந்திரியாக இருப்பவர்கள் தலைமை செயலகத்துக்கு செல்லும் போது, மணக்குள விநாயகரை பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு போக தவறுவது இல்லை.

    புதுச்சேரியில் உள்ள இந்துக்கள் மட்டும்தான் இப்படி மணக்குள விநாயகரிடம் மனதை பறிகொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களுக்கு நிகராக மணக்குள விநாயகரை வணங்கி ஆசி பெற்று செல்வது மிகச் சிறந்த மத ஒற்றுமைக்கு எடுத்துக் கட்டாக உள்ளது.

    மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வரும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அர்ச்சனை செய்தும் வழிபட தவறுவதில்லை. சில கிறிஸ்தவர்கள் சூறைத் தேங்காய் எல்லாம் உடைப்பது உண்டாம்.

    புதுச்சேரி முதல்-மந்திரியாக இருந்த ஒரு தலைவர் தான் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், முக்கிய நாட்களில் தன் மகளை மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு அனுப்பி வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். இதன் மூலம் மணக்குள விநாயகர் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொருவரையும் சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் என்பது புரிகிறது.

    அதனால்தான் புதுச்சேரியில் வாகனம் வாங்குபவர்கள் முதலில் அதை நேராக மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு ஓட்டி வந்து பூஜை போடுவார்கள். அந்த வகையில் தினமும் குறைந்தபட்சம் 100 மோட்டார் சைக்கிள்களுக்கு பூஜை போடப்படுகிறது.

    விசேஷ நாட்களில் 200-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக் கிள்கள், 50-க்கும் மேற்பட்ட கார்கள் வந்து விடும் என்று கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    அவ்வளவு ஏன்.... வெளியூருக்கு அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செய்வதாக இருந்தாலும் புதுச்சேரி மக்கள் மணக்குள விநாயகரைப் பார்த்து வணங்கி விடைபெற்றுச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மணக்குள விநாயகரை நம்புகிறார்கள்.

    அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தும்பிக்கையானும் புதுச்சேரி வாழ் மக்களை கண்ணை, இமை காப்பது போல காத்து வருகிறார்.

    திருத்தங்கத்தேர்

    5-10-2004ல் சுமார் 70 லட்சம் மதிப்பில் நகாசு வேலைப்பாடுடன் கூடிய புதிய தங்கத் தேர் செய்யப்பட்டு விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி தினத்தில் ஸ்ரீவிநாயகர் உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கமாக இருக்கிறது. உபயதாரர் விரும்பும் நாட்களில் கட்டணம் செலுத்தினால் வெள்ளித்தேரும், தங்கத் தேரும் கோவிலின் உட்பிரகாரத்தில் மூன்று முறை உலா வரும் உற்சவம் நடைபெறுகின்றது.

    விநாயகர் அந்த நேரங்களில் வீதியுலா வந்து விண்ணவரையும், மண்ணவரையும் மகிழ்விக்கின்றார். விக்கினங்கள் நீக்கும் விநாயகரை நினைத்து எந்த நற்காரியங்கள் செய்தாலும் இடையூறு நீங்கப் பெற்று, காரிய சித்தி ஏற்படும் என்பது திண்ணம்.

    மூலவர் தங்க கவசம்

    13-06-2008 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் அருள்மிகு மணக்குள விநாயகர் மூலவருக்குத் தங்கக் கவசம் சார்த்தும் விழா முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.

    மூலவருக்கு `தங்கக் கவசம்' சுமார் 10 கிலோ எடையில் உருவானது. 916.7 தங்கத்தில், ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களால் அது அமையும் பக்தர்கள் விருப்பத்திற்கிணங்க ரூ.3 ஆயிரம் மட்டும் செலுத்தி தமது குடும்பத்தாருடன் தனியே நவகலாசாபிஷேகம் செய்து மூலவர் தங்கக் கவசம் சார்த்தி வழிபடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

    உற்சவர் தங்க கவசம்

    02-03-2011 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மணக்குள விநாயகர் உற்சவ மூர்த்திக்கு தங்கக் கவசம் சார்த்தும் விழா பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. உற்சவருக்கு தங்கக் கவசம் சுமார் 5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டது. கூடுதாக ஒரு வில்வமாலை சுமார் 1 கிலோ எடையில் உருவாக்கப்பட்டது. 916.7 தங்கத்தில் ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களாக அந்தக் கவசம் இருக்கிறது.

    • பிரெஞ்சு கவர்னர் துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார்.
    • 1400-களில் நெசவாளர்கள் கருவறை மட்டும் கட்டி இருந்தனர்.

    புதுச்சேரியை ஆண்டு வந்த பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களை சமமாக நடத்தவில்லை. அடிமைகள் போலவே நடத்தினார்கள். அப்படிப்பட்டவர்கள் `சுவாமி வீதி உலா' என்ற பெயரில் மணக்குள விநாயகர் உற்சவர் சிலையை தெருத் தெருவாக எடுத்துச் சென்றதை பிரெஞ்சுக்காரர்கள் தொடர்ந்து எரிச்சலாகவே பார்த்து வந்தனர்.

    எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஈஸ்டர் தின நாட்களிலும் விநாயகர் உற்சவர் வீதி உலா நடத்தக் கூடாது என்று சேசு அடியார்கள் கூறினார்கள். இதை ஏற்று 1701ல் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் புதுச்சேரி கவர்னர் ஒரு உத்தரவை வெளியிட்டார்.

    இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் மணக்குள விநாயகர் கோவிலை இடிக்க முயன்றனர். விநாயகர் சிலையை உடைக்கவும் சதி திட்டம் தீட்டப்பட்டது.

    இதை அறிந்ததும் புதுச்சேரியில் உள்ள சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். பிறகு அவர்கள் நாங்கள் எங்கள் விநாயகருடன் இந்த ஊரை விட்டே வெளியேறி சென்னைக்கு சென்று விடுவோம் என்று அறிவித்தனர்.

    இதனால் தொழில்கள் முடங்கி, ஆட்சிக்கே ஆபத்து வந்து விடும் என்று பயந்த புதுச்சேரி கவர்னர் பிரான்ஸ்வா மர்த்தேன், யாரும் ஊரை விட்டு வெளியேற வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி தடுத்து நிறுத்தினார். பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்திய கவர்னர், விநாயகர் வீதி உலா செல்ல தடை இல்லை என்று அறிவித்தார்.

    ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணக்குள விநாயகருக்கு திருவிழா நடத்தவும், வீதி உலா நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் 1706-ம் ஆண்டு மணக்குள விநாயகர் கோவிலில் முன்பு போல விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    மறுநாளே நெசவாளர்கள், விநாயகர் உற்சவரை மணல் குளத்துக்கு எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டி, திருமஞ்சனம் செய்தனர். என்றாலும் மணக்குள விநாயகர் கோவிலை சிதைப்பதில் சில பிரெஞ்சுக்காரர்கள் தீவிரம் காட்டினார்கள். ஆனால் மணக்குள விநாயகரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

    இதையடுத்து வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் ஆராதனையை நடத்தக் கூடாது என்றனர். மேளதாள வாத்தியங்கள் முழங்கக் கூடாது. கொம்பு ஊதக் கூடாது. தேவதாசிகள் நடனம் இடம் பெறக்கூடாது என்று அடுக்கடுக்காக தடை உத்தரவிட்டனர்.

    பக்தர்கள் நடத்திய பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கான தடை நீங்கியது. பிறகு நாட்கள் செல்ல, செல்ல பிரெஞ்சுக்காரர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. மணக்குள விநாயகரை அப்புறப்படுத்தும் முயற்சியை முழுமையாக கை விட்டனர். மணக்குள விநாயகர் கோவில் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கினார்கள்.

    பிறகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் அவர்களது மனதிலும் மணக்குள விநாயகர் இடம் பிடித்தார். அர்த்த மண்டபத்துக்கு அடுத்தப்படியாக கோவில் முன்பு மகாமண்டபம் கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தனர்.

    மணக்குள விநாயகரின் மகிமைகளை ஒவ்வொன்றாக அறிந்து, கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். விநாயகர் சிலையை உடைக்க உத்தரவிட்டவர்களே, அந்த விநாயகரை கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர்.

    கோவிலை இடிக்க நினைத்தவர்களே, கோவில் திருப்பணிகளை முன்நின்று செய்தனர். பிரெஞ்சு கவர்னராக இருந்த துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார். துப்லெக்ஸ் கவர்னராக இருந்த ஆட்சிக்காலத்தில் மணக்குள விநாயகர் கோவில் மீது யாரும் எந்த ஒரு சிறு தாக்குதலும் நடத்தவில்லை. மணக்குள விநாயகரை வணங்கிய பிறகே எதையும் செய்யத் தொடங்கினார். மணக்குள விநாயகரின் மகிமைக்கு இது ஒரு சான்றாகும்.

    ஆலயம் அன்றும் - இன்றும்

    மணக்குள விநாயகர் எந்த காலக்கட்டத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார் என்ற குறிப்பு எங்குமே இல்லை. அது போல அரச மரத்தடியில் இருந்த விநாயகருக்கு 1400-களில் நெசவாளர்கள் சிறு கருவறை மட்டும் கட்டியது மட்டுமே தெரிகிறது.

    15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகளில் மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரி கடலோரத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    16-ம் நூற்றாண்டில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் பலர் திருப்பணி செய்துள்ளனர். தொள்ளைக்காது சித்தர் ஜீவ சமாதி ஆன பிறகு மணக்குள விநாயகர் வழிபாடுகள் ஆகம விதிமுறைகளுக்கு மாறின.

    1900-களின் தொடக்கத்தில் புதிய மூலவர் சிலை வைக்கப்பட்டது. மூல விநாயகர் இடது பக்கம் வைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த காலக் கட்டத்தில்தான் பாரதியார் மணக்குள விநாயகரை 8 ஆண்டுகள் வழிபட்டார்.

    பிரெஞ்சு ஆட்சியாளர்களிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு மணக்குள விநாயகர் ஆலத் திருப்பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மறு ஆண்டே 1955-ல் மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை அவர்களால் தேக்கு கொடி மரம் நிறுவப்பட்டது.

    1957-ம் ஆண்டு முதல் ஆவணி மாதம் ஆண்டு பெரு விழாவான பிரம்மோற்சவம் நடத்துவது தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆவணி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவம் 58-வது பிரம்மோற்சவமாகும்.

    1956-ம் ஆண்டு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு 1966-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    1986-ம் ஆண்டு புதிய உற்சவமூர்த்தி உருவாக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு வெள்ளித்தேர் ஓடியது. 1986-ம் ஆண்டு தங்கத்தேர் விடப்பட்டது.

    1994-ம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டது. 1999-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    2004-ம் ஆண்டு ரூ.70 லட்சம் செலவில் புதிய தங்கத் தேர் அர்ப்பணிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் செய்து சார்த்தப்பட்டது.

    2009-ம் ஆண்டு இத்தலத்துக்கு என இணையத்தளம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஆலயம் முழுவதும் குளிரூட்டப்பட்டது.

    2011-ம் ஆண்டு உற்சவருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக திருப்பணி செய்து கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    ஆலயம் தரை முழுவதும் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது. கருவறை தவிர ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    • மருதுபாண்டியர்கள் அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வந்தார்.
    • ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மதுரை ஆதீனம் மடத்தை நிறுவியவர் திருஞான சம்பந்தர். இவரது குருபூஜை விழா வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டா டப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்கள் மதுரை ஆதீனத்திற்கு காணிக்கை யாக அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வெள்ளி தேர் கோ ரதம் என அழைக்கப்படுகிறது.

    இந்த தேர் முன்பு 2 மாடுகள் பூட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் தேரில் திருஞான சம்பந்தர் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாயில் மண்டபத்தில் இருந்து கீழ ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனம் மடம் தெற்கு நுழைவுவாயிலை அடைந்தது. தொடர்ந்து மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், சேர்வைக்கார மண்டகப்படி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
    • வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.7-ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் மாலை6மணிக்கு சமய உரையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு 10 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்துக்கு முன்னால் செண்டை மேளம், சிங்காரி மேளம், கேரள தையம் ஆட்டம், கேரளாவைச் சேர்ந்த கலைஞர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்ச்சி, பெண்களின் நாதஸ்வர கச்சேரி, பூ கரக காவடி ஆட்டம் போன்றவை இடம் பெற்று இருந்தன.

    இதில் 100-க்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கு இருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர். இந்த7-ம்நாள் திருவிழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, 7-ம் திருவிழா மண்டகப்படி கட்டளை தாரர்கள் அய்யப்பன், சந்திரன், கண்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    8-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்குபகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11.30 மணிக்குஅலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்குமண்டகப்படி நிகழ்ச்சியும் 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் நடக்கிறது அதன் பின்னர் 8-30 மணிக்கு சன்னதி தெருவில் அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்தார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    புதுக்கோட்டை:

    திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நான்காவது நாளான நேற்று சத்தியமூர்த்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
    • முருகனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார். இங்கு நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவின் 4-ம் நாள் மண்டகப்படியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருவரங்குளத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதக்கோட்டை திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதையடுத்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் சிம்ம வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×