search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veethi Ula"

    • மாசித் திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், உருகு சட்ட சேவை நடந்தது.

    பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காலை 8.30 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார்.

    தொடர்ந்து சுவாமி- அம்பாள்களுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    10-ம் திருநாள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் வீதிஉலா
    • சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா

    சித்தூர்:

    காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் வீதிஉலா வந்து அருள் பாலித்தார்.

    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 18-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவின்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 19-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. அதன்பிறகு பூலங்கி சேவை வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • சுப்பிரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
    • தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவில் காலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாகவும், பிற்கபலில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாகவும் எழுந்தருளினார். 9-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.

    இதில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பிரெஞ்சு கவர்னர் துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார்.
    • 1400-களில் நெசவாளர்கள் கருவறை மட்டும் கட்டி இருந்தனர்.

    புதுச்சேரியை ஆண்டு வந்த பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களை சமமாக நடத்தவில்லை. அடிமைகள் போலவே நடத்தினார்கள். அப்படிப்பட்டவர்கள் `சுவாமி வீதி உலா' என்ற பெயரில் மணக்குள விநாயகர் உற்சவர் சிலையை தெருத் தெருவாக எடுத்துச் சென்றதை பிரெஞ்சுக்காரர்கள் தொடர்ந்து எரிச்சலாகவே பார்த்து வந்தனர்.

    எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஈஸ்டர் தின நாட்களிலும் விநாயகர் உற்சவர் வீதி உலா நடத்தக் கூடாது என்று சேசு அடியார்கள் கூறினார்கள். இதை ஏற்று 1701ல் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் புதுச்சேரி கவர்னர் ஒரு உத்தரவை வெளியிட்டார்.

    இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் மணக்குள விநாயகர் கோவிலை இடிக்க முயன்றனர். விநாயகர் சிலையை உடைக்கவும் சதி திட்டம் தீட்டப்பட்டது.

    இதை அறிந்ததும் புதுச்சேரியில் உள்ள சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். பிறகு அவர்கள் நாங்கள் எங்கள் விநாயகருடன் இந்த ஊரை விட்டே வெளியேறி சென்னைக்கு சென்று விடுவோம் என்று அறிவித்தனர்.

    இதனால் தொழில்கள் முடங்கி, ஆட்சிக்கே ஆபத்து வந்து விடும் என்று பயந்த புதுச்சேரி கவர்னர் பிரான்ஸ்வா மர்த்தேன், யாரும் ஊரை விட்டு வெளியேற வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி தடுத்து நிறுத்தினார். பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்திய கவர்னர், விநாயகர் வீதி உலா செல்ல தடை இல்லை என்று அறிவித்தார்.

    ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணக்குள விநாயகருக்கு திருவிழா நடத்தவும், வீதி உலா நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் 1706-ம் ஆண்டு மணக்குள விநாயகர் கோவிலில் முன்பு போல விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    மறுநாளே நெசவாளர்கள், விநாயகர் உற்சவரை மணல் குளத்துக்கு எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டி, திருமஞ்சனம் செய்தனர். என்றாலும் மணக்குள விநாயகர் கோவிலை சிதைப்பதில் சில பிரெஞ்சுக்காரர்கள் தீவிரம் காட்டினார்கள். ஆனால் மணக்குள விநாயகரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

    இதையடுத்து வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் ஆராதனையை நடத்தக் கூடாது என்றனர். மேளதாள வாத்தியங்கள் முழங்கக் கூடாது. கொம்பு ஊதக் கூடாது. தேவதாசிகள் நடனம் இடம் பெறக்கூடாது என்று அடுக்கடுக்காக தடை உத்தரவிட்டனர்.

    பக்தர்கள் நடத்திய பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கான தடை நீங்கியது. பிறகு நாட்கள் செல்ல, செல்ல பிரெஞ்சுக்காரர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. மணக்குள விநாயகரை அப்புறப்படுத்தும் முயற்சியை முழுமையாக கை விட்டனர். மணக்குள விநாயகர் கோவில் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கினார்கள்.

    பிறகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் அவர்களது மனதிலும் மணக்குள விநாயகர் இடம் பிடித்தார். அர்த்த மண்டபத்துக்கு அடுத்தப்படியாக கோவில் முன்பு மகாமண்டபம் கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தனர்.

    மணக்குள விநாயகரின் மகிமைகளை ஒவ்வொன்றாக அறிந்து, கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். விநாயகர் சிலையை உடைக்க உத்தரவிட்டவர்களே, அந்த விநாயகரை கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர்.

    கோவிலை இடிக்க நினைத்தவர்களே, கோவில் திருப்பணிகளை முன்நின்று செய்தனர். பிரெஞ்சு கவர்னராக இருந்த துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார். துப்லெக்ஸ் கவர்னராக இருந்த ஆட்சிக்காலத்தில் மணக்குள விநாயகர் கோவில் மீது யாரும் எந்த ஒரு சிறு தாக்குதலும் நடத்தவில்லை. மணக்குள விநாயகரை வணங்கிய பிறகே எதையும் செய்யத் தொடங்கினார். மணக்குள விநாயகரின் மகிமைக்கு இது ஒரு சான்றாகும்.

    ஆலயம் அன்றும் - இன்றும்

    மணக்குள விநாயகர் எந்த காலக்கட்டத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார் என்ற குறிப்பு எங்குமே இல்லை. அது போல அரச மரத்தடியில் இருந்த விநாயகருக்கு 1400-களில் நெசவாளர்கள் சிறு கருவறை மட்டும் கட்டியது மட்டுமே தெரிகிறது.

    15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகளில் மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரி கடலோரத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    16-ம் நூற்றாண்டில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் பலர் திருப்பணி செய்துள்ளனர். தொள்ளைக்காது சித்தர் ஜீவ சமாதி ஆன பிறகு மணக்குள விநாயகர் வழிபாடுகள் ஆகம விதிமுறைகளுக்கு மாறின.

    1900-களின் தொடக்கத்தில் புதிய மூலவர் சிலை வைக்கப்பட்டது. மூல விநாயகர் இடது பக்கம் வைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த காலக் கட்டத்தில்தான் பாரதியார் மணக்குள விநாயகரை 8 ஆண்டுகள் வழிபட்டார்.

    பிரெஞ்சு ஆட்சியாளர்களிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு மணக்குள விநாயகர் ஆலத் திருப்பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மறு ஆண்டே 1955-ல் மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை அவர்களால் தேக்கு கொடி மரம் நிறுவப்பட்டது.

    1957-ம் ஆண்டு முதல் ஆவணி மாதம் ஆண்டு பெரு விழாவான பிரம்மோற்சவம் நடத்துவது தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆவணி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவம் 58-வது பிரம்மோற்சவமாகும்.

    1956-ம் ஆண்டு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு 1966-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    1986-ம் ஆண்டு புதிய உற்சவமூர்த்தி உருவாக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு வெள்ளித்தேர் ஓடியது. 1986-ம் ஆண்டு தங்கத்தேர் விடப்பட்டது.

    1994-ம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டது. 1999-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    2004-ம் ஆண்டு ரூ.70 லட்சம் செலவில் புதிய தங்கத் தேர் அர்ப்பணிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் செய்து சார்த்தப்பட்டது.

    2009-ம் ஆண்டு இத்தலத்துக்கு என இணையத்தளம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஆலயம் முழுவதும் குளிரூட்டப்பட்டது.

    2011-ம் ஆண்டு உற்சவருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக திருப்பணி செய்து கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    ஆலயம் தரை முழுவதும் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது. கருவறை தவிர ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    • இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடந்தது.
    • சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

    அய்யம்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த சக்கராப்பள்ளியில் உள்ள தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் கோவிலில் சப்தஸ்தான விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அய்யம்பேட்டை சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில்இருந்து புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டைஎல்லை வரை சென்று மாகாளி புரம், வழுத்தூர், சரபோஜிரா ஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய கிராமங்களில் வீதிஉலா சென்றது.

    இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.

    தொடர்ந்து, இன்று இலுப்பக்கோரை கிராமத்திற்கு சென்று மீண்டும் பசுபதிகோவில், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் வீதிஉலா வந்தது.

    பின்னர், மாலை அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராமமக்கள் செய்துள்ளனர்.

    ×