என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணக்குள விநாயகர்"
- உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.
சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.
- புதுச்சேரியில் மட்டும் கடல் உள் வாங்கி சென்று விட்டது.
- 5 உற்சவர்கள் உள்ளனர்
இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கிய போது தமிழக கடலோர பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனால் புதுச்சேரியில் மட்டும் கடல் உள் வாங்கி சென்று விட்டது.
பக்கத்து மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊருக்குள் கடல் தண்ணீர்பொங்கி வந்து விட்ட நிலையில் புதுச்சேரியில் மக்கள் சலனமின்றி இருந்தனர். புதுச்சேரியில் அன்று கடல் உள் வாங்கிச் சென்றதற்கு மணக்குள விநாயகரின் அருள்தான் காரணம் என்று புதுச்சேரி மக்கள் சொல்கிறார்கள்.
சுனாமி பேரழிவில் இருந்து விநாயகர் தங்களை காப்பாற்றியதாக இன்றும் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
கேது கிரகத்துக்கு உரியவர்
மணக்குள விநாயகர் கேது கிரகத்துக்கு உரியவர் ஆவார். கேது கிரக அமைப்பில் பிறந்த குழந்தைகளை இவரிடம் கொண்டு வந்து பிராத்தனை செய்வது வழக்கமாக உள்ளது. இப்படி பிரார்த்தனை செய்தால் அந்த குழந்தை நீண்ட ஆயுள் பெறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
5 உற்சவர்கள்
மணக்குள விநாயகர் ஆலயத்தில் இரு மூலவர்கள் இருப்பது போல 5 உற்சவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
1. மணக்குள விநாயகர்
2. லட்சுமி கணபதி
3. சித்தி-புத்தி விநாயகர்
4. நர்த்தன விநாயகர்
5. சக்தி விநாயகர்.
இந்த 5 உற்சவர்களில் மணக்குள விநாயகர்தான் அதிக உற்சவங்களில் கலந்து கொள்வார். மற்ற 4 உற்சவர்களும் அவர்களுக்குரிய விழாக்கள் வரும் போது வீதி உலா சென்று வருவார்கள். ஆவணி பிரம்மோற்சவத்தின் போது 5-ம் நாள் திருக்கல்யாணம் நடத்தப்படும். அப்போது சித்தி-புத்தி விநாயகர் வீதி உலா செல்வார்.
ஆவணி திருமஞ்சன நாளில் நர்த்தன விநாயகர் வீதி உலா செல்வார். தை, ஆடி, அமாவாசை நாட்களிலும், மாசி மகத்திலும் கடலில் தீர்த்தவாரி நடைபெறும். அதிலும் உற்சவர்கள் கலந்து கொள்வார்கள்.
- பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
- சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம்
மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பக்தர்கள் அதிகமாக வந்து வழிபடுகிறார்கள்.
பிரமோற்சவம்-ஆவணி மாதம் 25 நாட்கள் திருவிழா, பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
மாதந்தோறும் சங்கடகர சதூர்த்தி தினத்தில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
திருக்கல்யாணம்
பக்தர்கள் நேர்த்தி கடனாக சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள். இந்த கோவிலில்தான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வெள்ளித்தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.
தங்க கோபுரம்
மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கோபுரம் உள்ளது. அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருப்பது இங்கு மட்டும்தான். பக்தர்கள் செலுத்திய 10 கிலோ தங்கத்தால் இந்த தங்க கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை
விநாயகர் கோவிலில் எங்கும் பள்ளி அறை இருபதில்லை. ஆனால் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளியறை உள்ளது. தினமும் இரவு நைவேத்தியம் முடிந்தவுடன் பள்ளி அறைக்கு விநாயகர் செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டும் இருக்கும் உற்சவ விக்ரம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு விநாயகரோடு அவரது தாயார் சக்தி தேவியார் உடன் இருக்கிறார்.
சிறப்பு
மணக்குள விநாயகரை பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வழிபட்டார்கள். இந்த கோவிலில் தினம் தோறும் 3 வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைபோல் இங்கு நர்த்தன விநாயகர் உள்ளார்.
இந்த கோவில் புதுவை புதிய பஸ்நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது.
பக்தர்களின் பிரார்த்தனை
திருமண வரம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுகின்றனர். திருமணம் கூடி வந்ததும் திருமண பத்திரிக்கையை வைத்து வழிபட்டு செல்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் குழந்தையுடன் வந்து வழிபடுகிறார்கள். புது தொழில் தொடங்குவோர்.
புது கணக்கு தொடங்குவோர் வந்து வணங்கி செல்கிறார்கள். புதுவையை விட்டு வெளியூர் செல்வோர் மணக்குள விநாயகரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். விநாயகருக்கு அமெரிக்க வைரத்தாலே கவசம் செய்து கொடுத்துள்ளனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தொள்ளை காது சித்தர் சமாதி உள்ளது.
- காதில் பெரிய துளை இருந்ததால் தொள்ளை காது சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தொள்ளை காது சித்தர் சமாதி உள்ளது. இவரின் இயற்பெயர் தெரியாது. தாய்,தந்தை யார் என்றும் தெரியவில்லை.
இளம் வயதில் இவர் தந்தையை இழந்தார். தாயார் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதை விரும்பாத அவர் தன் குல தெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்போது அவரை அம்மன் அழைப்பது போல் குரல் வந்தது. அந்த வழியே நடந்து வந்தார். புதுவை அருகே உள்ள மொரட்டாண்டி பகுதிக்கு வந்தார். அங்கிருந்து முத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தார்.
அம்மனை வேண்டினார். அம்மனின் தரிசன காட்சியை கண்டார். அவருக்கு ஞானம் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து 5 மைல் தொலைவில் உள்ள புதுவைக்கு வந்தார். கடற்கரை அருகில் மணற்குளத்தின் கடற்கரையில் விநாயகரை வழிபட்டு வந்தார்.
விநாயகரை வழிபட்ட பின்னர் மொரட்டாண்டிக்கு சென்று வந்தார். அங்கு பிரெஞ்சு அதிகாரிகளின் தொல்லை அதிகம் ஆனது. எனவே அங்கிருந்து வெளியேறி புதுவை ஆனந்த ரங்க பிள்ளை தோட்டத்துக்கு வந்தார்.
அங்கு குடில் அமைத்து தங்கினார். அந்த இடம் அவருக்கு அமைதி தந்தது. அவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார்.
அவர்கள் குறைகள் கேட்டு தீர்த்துவைத்தார். சித்து வேலைகள் புரிந்தார். அவர் தங்கியிருந்த குடிசையை சித்தன் குடிசை என்று மக்கள் அழைத்தார்கள். இன்று வரை இந்த பகுதி சித்தன் குடிசை என்றே அழைக்கப்படுகிறது. அவரின் காதில் பெரிய துளை இருந்தது. எனவே அவர் தொள்ளை காது சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
தரிசன நேரம்
காலை 5.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை
விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரத்தில் மாற்றம் ஏற்படும்
தங்கத்தேர்
மணக்குள விநாயகர் கோவிலில் அழகான தங்கத்தேர் ஒன்று உள்ளது. பக்தர்களின் நன்கொடையால் இது உருவாக்கப்பட்டது.
தேர் செய்ய பயன்படுத்திய தங்கத்தின் மொத்த எடை 7.5 கிலோ
மதிப்பீடு-ரூ.35 லட்சம், தேரின் உயரம்-10 அடி, அகலம்-6 அடி
தங்கத்தேர் உருவாக்கி பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு-2006.
பவனிவரும் காலம்- ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று மேள தாளங்களுடன் ஊர்வலம் நடைபெறும்
குளத்தின் மீது விநாயகர்
மணக்குள விநாயகர்கோவிலில் மூலவர் ஒரு குளத்தின் மீது அமர்ந்திருக்கிறார். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்கிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இதில் எப்போதும் வற்றாத நீர் உள்ளது.
- புதுவையில் புகழ் பெற்று விளங்குகிறது மணக்குள விநாயகர்.
- மணக்குள விநாயகரை வெள்ளைக்கார பிள்ளையார் என்றும் அழைப்பர்.
புதுவை ஒரு ஆன்மீக பூமி. புதுமைகள் பல புரிந்த பல சித்தர்களின் பாதம் பட்ட அருள் பூமி. பூஜைகளும் மணி ஓசைகளும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் புண்ணிய பூமி
நாட்டில் எத்தனையோ பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. புதுவையில் புகழ் பெற்று விளங்குகிறது மணக்குள விநாயகர்.
இதன் பெயரிலே ஒரு புதுமை. அது மட்டுமா? இந்த விநாயகரோடு புதுவை வரலாறு பின்னிக்கிடக்கிறது.
இது ஆன்மீக தலம் மட்டும் அல்ல ஆன்றோர்கள் பலர் போற்றிப்புகழ்ந்த கோவிலாக திகழ்கிறது. நம் நாட்டினர் மட்டுமல்ல அயல்நாட்டினரையும் கவர்ந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
புதுவையில் மணக்குள விநாயகர் தெருவில் இந்த கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. நாள்தோ றும் இங்கு பக்தர்கள்கூட்டம் நிரம்பி வழிகிறது. . இந்த இடத்தில் மணக்குள விநாயகர் கோவில் எப்படி தோன்றியது? அதற்கு நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னால் செல்ல வேண்டும்.
புதுச்சேரி அந்த காலத்தில் மிகப்பெரிய நகரமாக திகழவில்லை. ஆனால் நாகரிகம் செழித்த, செல்வந்தர்கள் கொழித்த அழகான பேரூராக விளங்கியது. இன்று மணற்குள விநாயகர் கோவில் தெரு என்று அழைக்கப்படும் தெருவானது அன்று நெசவாளர் தெரு என்று அழைக்கப்பட்டது.
அழகான தெருக்கள் அதன் இரு பக்கங்களிலும் நிழல் தரும் அருமையான மரங்கள் இருந்தன. இந்த மரநிழலில் அதிகாலையிலே கைத்தறி பாவு நீட்டுதல் என்ற தொழில் நடைபெற்றது. ஏராளமான தொழிலாளர்கள் அதில் ஈடுபட்டனர். இங்கு நெய்யப்பட்ட துணிகள் மேல்நாட்டுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டன.
புதுவையில் கடற்கரையை யொட்டி பல உப்பங்கழிகள் இருந்தன. இன்று உப்பனாற்று கால்வாயாக உள்ள அவை செஞ்சி சாலையை யொட்டி அமைந்திருந்தது. இந்த உப்பனாற்றின் கீழ் மருங்கில் இன்றைய நேரு வீதி சந்திப்பில் மணல் நிரம்பிய குளக்கரை இருந்தது. அங்கு அரச மரத்தின் அடியில் ஒரு மகா ரிஷியால் மணக்குள விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
அந்த சிலைக்கு மேல் ஒரு கூரை அமைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் விநாயகபெருமானுக்கு கருவறை அமைத்து அதன் உள்ளே பெருமானை நிலை நிறுத்தி வழிபட்டார்கள். அக்காலத்தில் விநாயகர் கருவறை, முன் அர்த்த மண்டபம் மட்டுமே இருந்தன.
கோவிலை சுற்றி தோட்டம். நந்தவனம் அமைத்து மதில் சுவர் எழுப்பி வெளிக்கதவும் அமைத்திருந்தனர். அதிகாலையில் எழுந்து, குளங்களில் நீராடி விநாயகரை வழிபட்டு தங்கள் வேலைகளை மக்கள் தொடங்கினார்கள். இந்த விநாயகரின் வடிவம் தொன்மைகால சிற்ப கலை நுணுக்கங்களோடு மெலிந்த உடல் வாகுடன் காணப்பட்டது. 2 கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் விநாயகர் காணப்பட்டார்.
பிரெஞ்சுகாரர்கள் புதுவையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே இந்த கோவில் தோன்றி விட்டது. 1666-ம் ஆண்டுக்கு முன்பே இந்த கோவில் உருவாகி இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த கோவிலில் இருந்த விநாயக படிமத்தைத்தான் பிரெஞ்சுகாரர்கள்3 முறை கடலில் போட்டதாகவும் விநாயகரும் மறுநாள் காலையில் கருவறையில் இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
மணக்குள விநாயகர் கோவில் வழிபாட்டுக்கு பிரெஞ்சுக்காரர்கள் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்தார்கள். பின்னர் விநாயகரின் பெருமையை உணர்ந்தார்கள், வியந்தார்கள், பயந்தார்கள். இதையடுத்து விநாயகர் கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்து கொள்ளவும் உற்சவங்கள் நடத்திக்கொள்ளவும் பிரெஞ்சுகாரர்கள் அனுமதி வழங்கினர்.
கோவில் இருந்த இடத்தில் முன் மண்டபம் கட்டிக்கொள்ளவும் அனுமதி வழங்கினார்கள். பிற்காலத்தில் கோவில் மேலோங்குவதற்கும் துணை புரிந்தனர். இதனால் எளிமையாக குளக்கரையில் கீழ்கரையில் ஒரு அரச மரத்தின் கீழ் வீற்றிருந்த விநாயகர் கூரைவேயப்பட்ட நிழலில்அமர்ந்தார். கருவறை மண்டபம் ஏற்படுத்திக்கொண்டார்.
தனக்கு எதிராக செயல்பட்ட பிரெஞ்சுகாரர்களை கொண்டே தன் கோவில் முன் மண்டபம் அமைத்துக்கொண்டார். நாளும் சுடர்விட ஒளிவிளக்கு ஏற்றிக்கொண்டார். தெருவீதி உலா, உற்சவங்கள் நடைபெற வழிவகுத்துக்கொண்டார். இடையூறு கொடுத்த வெள்ளையர்களே பின்னர் மணக்குள விநாயகரை வணங்கினார்கள். எனவே மணக்குள விநாயகரை வெள்ளைக்கார பிள்ளையார் என்றும் அழைத்தனர்.
தொள்ளைக்காது சித்தர் இந்த மணக்குள விநாயகரை தினமும் வழிபட்டு வந்தார். அவர்மறைவுக்கு பின்னர் கோவிலில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின.
வழிபாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் இருக்க புதிய விநாயகர் சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி பழைய விநாயகர் சிலையின் அருகில் புதிய விநாயகர் சிலையை நிறுவினார்கள். 1930-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு முன்னர் இது நடந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
தற்போது கோவிலின் கருவறையில் மூல விநாயகருக்கு வலது பக்கம் நாக பந்தச்சிலையும் இடது பக்கம் மூத்த முதல்வனாகிய பழைய விநாயகர் சிலையும் இருப்பதை காணலாம். இன்றும் இந்த சாமி சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
விநாயகர் பெருமை
1.பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூயமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா!
-அவ்வையார்
2.வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம்: மாமலராள்
நோக்குண்டாம்: மேனி நுடங்காது பூக் கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
-அவ்வையார்
3.வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத மணிமலரே-!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
கண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்!
கிருத யுகந்தான் மேவுகவே!
-பாரதியார்
- மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது.
- தொள்ளை காது சித்தரே முதலில் சிறு குடில் அமைத்து விநாயகரை வழிபட்டு வந்துள்ளார்.
புதுவையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் ஒன்று மணக்குள விநாயகர். அந்த கோவில் பழமையும் பெருமையும் கொண்டது.
மணக்குள விநாயகர் கோவில் கி.பி 15-ம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டப்படிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
பிரெஞ்சுகாரர்கள் 1666-ம் ஆண்டில் புதுவைக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பே இந்த கோவில் இருந்ததாக கூறுகின்றனர். கணக்கிட்டு பார்த்தால் இந்த கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேன்றியது என்று அறிய முடிகிறது.
மணக்குள விநாயகர் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுகாரர்கள் ஆகியோர்களின் ஆட்சியை கண்ட பெருமான் என்றும் தம்மை கடலில் எறிந்தவர்களுக்கும் விழாக்கள் நடைபெறாமல் தடுத்து இன்னல் புரிந்தவர்களுக்கும் கருணை காட்டியவர் என்றும் போற்றப்படுகிறார். இந்த விநாயகரை வெள்ளைக்காரர்கள் வணங்கியதால் வெள்ளைக்காரப்பிள்ளையார் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விநாயகரை முதலில் தரிசித்த பெருமை மொரட்டாண்டி தொள்ளை காது சித்தருக்கே உரியதாகும். பின்னர் அக்கா சுவாமி, சித்தானந்தா சுவாமி, மகான் அரவிந்தர், அன்னை, தேசிய கவி பாரதியார், மற்றும் பல்வேறு பெரியோர்கள் மணக்குள விநாயகரை தரிசித்துள்ளனர்.
தொள்ளை காது சித்தரே முதலில் சிறு குடில் அமைத்து விநாயக பெருமானை வழிபட்டு வந்துள்ளார். அந்த கோவிலே படிப்படியாக இன்று வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது என்பர். தொள்ளைக்காது சித்தரின் சமாதி இக்கோவிலின் உள் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சித்தர் வாழ்ந்த பழமை வாய்ந்த தலமாக இந்த தலம் விளங்குகிறது.
திருபள்ளி எழுச்சி
மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது. இது வேறு எந்த விநாயகர் கோவிலிலும் கிடையாது. இக்கோவிலில் தங்க கோபுரம் மற்றும் தங்க தேர் உள்ளது சிறப்பு அம்சம் ஆகும். இந்துக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் மற்றும் வெளி நாட்டினரும் வழிபடும் பெருமையை பெற்றுள்ளது. இக்கோவிலுக்கு லட்சுமி என்ற யானை உள்ளது.
புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கை இனிதாக நடைபெற விநாயகரை வணங்கி செல்கின்றனர். குழந்தை பிறப்பு, பிறந்த நாள் போன்றவற்றின் போதும் கோவிலுக்கு வந்து அருள் பெற்றுசெல்கின்றனர். புதிதாக வாகனம் வாங்கியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்து செல்கின்றனர்.
வேலைவாய்ப்பு, திருமணம், உடல் நலம், பணம், செல்வாக்கு, குழந்தை வரம் ஆகியவைகள் கேட்டு பலர் வணங்கி செல்கின்றனர். புதுக்கணக்கு தொடங்குவோர், தொழில் செய்வோர் தங்கள் வாணிகம் சிறப்பாக நடக்க விநாயகரை வழிபடுகின்றனர். புதிய பணிகள் தொடங்குவோர் இக்கோவிலுக்கு வந்து வணங்கி பணிகளை தொடங்குகின்றார்கள். மொத்தத்தில் மன மகிழ்ச்சியை அள்ளி வழங்குபவராக மணக்குள விநாயகர் விளங்குகிறார்.
- மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது.
- தொள்ளை காது சித்தரே முதலில் சிறு குடில் அமைத்து விநாயகரை வழிபட்டு வந்துள்ளார்.
புதுவையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் ஒன்று மணக்குள விநாயகர். அந்த கோவில் பழமையும் பெருமையும் கொண்டது.
மணக்குள விநாயகர் கோவில் கி.பி 15-ம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டப்படிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
பிரெஞ்சுகாரர்கள் 1666-ம் ஆண்டில் புதுவைக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பே இந்த கோவில் இருந்ததாக கூறுகின்றனர். கணக்கிட்டு பார்த்தால் இந்த கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேன்றியது என்று அறிய முடிகிறது.
மணக்குள விநாயகர் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுகாரர்கள் ஆகியோர்களின் ஆட்சியை கண்ட பெருமான் என்றும் தம்மை கடலில் எறிந்தவர்களுக்கும் விழாக்கள் நடைபெறாமல் தடுத்து இன்னல் புரிந்தவர்களுக்கும் கருணை காட்டியவர் என்றும் போற்றப்படுகிறார். இந்த விநாயகரை வெள்ளைக்காரர்கள் வணங்கியதால் வெள்ளைக்காரப்பிள்ளையார் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விநாயகரை முதலில் தரிசித்த பெருமை மொரட்டாண்டி தொள்ளை காது சித்தருக்கே உரியதாகும். பின்னர் அக்கா சுவாமி, சித்தானந்தா சுவாமி, மகான் அரவிந்தர், அன்னை, தேசிய கவி பாரதியார், மற்றும் பல்வேறு பெரியோர்கள் மணக்குள விநாயகரை தரிசித்துள்ளனர்.
தொள்ளை காது சித்தரே முதலில் சிறு குடில் அமைத்து விநாயக பெருமானை வழிபட்டு வந்துள்ளார். அந்த கோவிலே படிப்படியாக இன்று வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது என்பர். தொள்ளைக்காது சித்தரின் சமாதி இக்கோவிலின் உள் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சித்தர் வாழ்ந்த பழமை வாய்ந்த தலமாக இந்த தலம் விளங்குகிறது.
திரு பள்ளி எழுச்சி
மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது. இது வேறு எந்த விநாயகர் கோவிலிலும் கிடையாது. இக்கோவிலில் தங்க கோபுரம் மற்றும் தங்க தேர் உள்ளது சிறப்பு அம்சம் ஆகும். இந்துக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் மற்றும் வெளி நாட்டினரும் வழிபடும் பெருமையை பெற்றுள்ளது. இக்கோவிலுக்கு லட்சுமி என்ற யானை உள்ளது.
புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கை இனிதாக நடைபெற விநாயகரை வணங்கி செல்கின்றனர். குழந்தை பிறப்பு, பிறந்த நாள் போன்றவற்றின் போதும் கோவிலுக்கு வந்து அருள் பெற்றுசெல்கின்றனர். புதிதாக வாகனம் வாங்கியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்து செல்கின்றனர்.
வேலைவாய்ப்பு, திருமணம், உடல் நலம், பணம், செல்வாக்கு, குழந்தை வரம் ஆகியவைகள் கேட்டு பலர் வணங்கி செல்கின்றனர். புதுக்கணக்கு தொடங்குவோர், தொழில் செய்வோர் தங்கள் வாணிகம் சிறப்பாக நடக்க விநாயகரை வழிபடுகின்றனர். புதிய பணிகள் தொடங்குவோர் இக்கோவிலுக்கு வந்து வணங்கி பணிகளை தொடங்குகின்றார்கள். மொத்தத்தில் மன மகிழ்ச்சியை அள்ளி வழங்குபவராக மணக்குள விநாயகர் விளங்குகிறார்.
- அருகம்புல்லும், தாமரையும்மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது.
- ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர்.
மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல்லும், தாமரை மலருமாகும். இவற்றை விற்பனை செய்ய கோவில் முன்பு பல கடைகள் உள்ளன. மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் பற்றி ஒரு கதை உள்ளது.
இந்திரன் முதலான தேவர்களை அப்படியே விழுங்கி விட வந்தான் எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன்.
தேவர்கள் பயந்து அலறியபடி ஸ்ரீவிநாயகப் பெருமானிடம் ஓடி வந்து முறையிட்டார்கள்.
விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். அதனால் ஜோதியே வடிவான அவருடய திருமேனி பெரும் வெப்பத்தால் தகித்தது.
ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு எழுந்த அந்த உஷ்ணத்தை போக்க சந்திரன் தம் ஒளிக்கதிர்களால் குளிர்ச்சியை ஏற்படுத்தினார்.
சித்தியும், புத்தியும் தம் குளிர் மேனியால் ஒத்தடம் கொடுத்தார்கள். திருமால் தாமரை மலர்களால் அர்ச்சித்தார்.
வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பலவிதமாக பணிவிடைகள் செய்தனர். ஆனாலும் விநாயகர் உடலில் ஏற்பட்ட வெப்பம் அகலவில்லை.
கடைசியாக மகிரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அருகம்புல்லை கட்டு கட்டாக படல் படலாக அமைத்து விநாயகர் மேல் சாற்றினார்கள். அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.
பின்பு இரண்டிரண்டு அருகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சித்தார்கள். அதனால் அவருக்கு அனலாசுரனை விழுங்கிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்கு பிரியமானது. அவர் அணியும் மலர்களில் முதலிடமும் பெற்றது.
பல பிறவிகளை கடந்த ஆத்மாக்கள் மழைவழியே வந்து அருகம்புல்லின் நுனியில் துளிநீரில் பொருந்தி, பசுவயிற்றுக்குள் சென்று, பின் எருவாகி, உரமாகி பயிர்பச்சைகளுக்குள் சென்று உணவாகி, மனிதர்கள் உண்ணும் உணவில் சென்று, ஆண்களின் உயிர்நிலையில் சென்றமர்ந்து உயிரணுவாகி, பின்பு பெண் கர்ப்பத்திற்குள் சென்று பிள்ளையாகி மனிதப்பிறவி பெறுகின்றது. இதற்கு அருகம்புல் காரணமாக இருப்பதால் அது விநாயகருக்கு அணிவிக்கப்படுகிறது.
குண்டலின் யோகத்தில் அருகு
ஓரிடத்தில் முளைத்து கொடிபோல் நீண்டு, ஆறு இடங்களில் கிளைத்து வேரூன்றி வாழும் தன்மையுள்ளது `அருகு' இந்த தன்மையால்தான் அது `அருகு' என்றே அழைக்கப்பட்டது.
அதுபோல் மூலவாயுவானது மூலாதாரத்தில் இருந்து எழுந்து, ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு இடங்களில் படிப்படியாக பிரவேசித்து இறுதியாக சஹஸ்ராம் என்ற இடத்தில் சென்று முழு நிலையை அடைகின்றது. இதுவே குண்டலினி சக்தி.
ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர் என்பதால், ஆறு இடங்களில் களைத்து எழும் அருகு அவருக்கு அணிவிக்கப்படுகிறது.
விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அவர் யோக நிலையில் நம்மை முன்னேறச் செய்வார் என்பது யோக நூல்களின் கருத்து. எனவே மணக்குள விநாயகரை தரிசிக்க செல்லும்போது மறக்காமல் அருகம்புல் வாங்கிச் செல்லுங்கள்.
கஜபூஜை
மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது. அதன் பெயர் லட்சுமி. இந்த யானையை வைத்து பக்தர்கள் அடிக்கடி கஜபூஜை நடத்துக்கிறார்கள். கஜபூஜை செய்வதால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.
இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது. லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்லக்கூடிய ஒரு நிலை இன்று உள்ளது. மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயலில் முன் லட்சுமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும். பல குழந்தைகள் லட்சுமியை காண்பதற்காக இங்கு வருகின்றனர்.
- சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் மணக்குள விநாயகர்.
- ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி அன்று உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கம்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. திருச்சி என்றதும் உச்சிப் பிள்ளையார் நினைவுக்கு வருவார். மதுரை என்றதும் தாய் மீனாட்சி கண்முன் வந்து நிற்பாள்.
அது போலத்தான் புதுச்சேரி என்று சொன்னதுமே மணக்குள விநாயகர் `பளீர்' என எல்லாரது மனதிலும் தோன்றுவார். புதுச்சேரியின் நாயகனே இவர்தான்.
புதுச்சேரி மக்களின் உயிரோடும், உணர்வோடும் இவர் இரண்டற கலந்துள்ளார். இதனால் புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் மணக்குள விநயாகரை தங்கள் குல தெய்வமாகவும், கண் கண்ட தெய்வமாகவும் கருதுகிறார்கள்.
மணக்குள விநாயகருக்கு முதல் வழிபாடு செய்யாமல் அவர்கள் எதையுமே செய்வதில்லை. குடும்பத்தில் திருமணம் நடைபெற இருந்தால் முதல் அழைப்பிதழை மணக்குள விநாயகருக்குத்தான் கொடுப்பார்கள்.
குழந்தை பிறந்தால் தீட்டுக் காலம் முடிந்ததும், கோவிலுக்கு தூக்கி வந்து விடுவார்கள். மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கடலை போன்றவற்றை படைத்து வழிபடுவார்கள். பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டி மணக்குள விநாயகர் சன்னதி முன்பு படுக்க வைப்பார்கள். இதன் மூலம் தங்கள் குழந்தைக்கு விநாயகர் அருளாசி கிடைத்து விடுவதாக நம்புகிறார்கள்.
இது மட்டுமல்ல புதிதாக வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, நிலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வணிக ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தாலும் சரி, புதிதாக கடை தொடங்குவதாக இருந்தாலும் சரி, மணக்குள விநாயகர் முன்பு ஆஜராகி விட்டுத்தான் எதையும் செய்வார்கள்.
விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர் கள், பெண்கள் என்று எல்லாருமே மணக்குள விநாயகரை முன் வைத்தே எதையும் செய்வது உண்டு. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளும் விலக்கல்ல.
புதுச்சேரி அரசியல்வாதிகளில் 99 சதவீதம் பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்வதில் தொடங்கி பதவி ஏற்பது வரை ஒவ்வொரு தடவையும் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வந்து ஆசி பெற்ற பின்பே செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
அது போல புதுச்சேரியில் முதல்-மந்திரியாக இருப்பவர்கள் தலைமை செயலகத்துக்கு செல்லும் போது, மணக்குள விநாயகரை பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு போக தவறுவது இல்லை.
புதுச்சேரியில் உள்ள இந்துக்கள் மட்டும்தான் இப்படி மணக்குள விநாயகரிடம் மனதை பறிகொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களுக்கு நிகராக மணக்குள விநாயகரை வணங்கி ஆசி பெற்று செல்வது மிகச் சிறந்த மத ஒற்றுமைக்கு எடுத்துக் கட்டாக உள்ளது.
மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வரும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அர்ச்சனை செய்தும் வழிபட தவறுவதில்லை. சில கிறிஸ்தவர்கள் சூறைத் தேங்காய் எல்லாம் உடைப்பது உண்டாம்.
புதுச்சேரி முதல்-மந்திரியாக இருந்த ஒரு தலைவர் தான் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், முக்கிய நாட்களில் தன் மகளை மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு அனுப்பி வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். இதன் மூலம் மணக்குள விநாயகர் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொருவரையும் சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் என்பது புரிகிறது.
அதனால்தான் புதுச்சேரியில் வாகனம் வாங்குபவர்கள் முதலில் அதை நேராக மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு ஓட்டி வந்து பூஜை போடுவார்கள். அந்த வகையில் தினமும் குறைந்தபட்சம் 100 மோட்டார் சைக்கிள்களுக்கு பூஜை போடப்படுகிறது.
விசேஷ நாட்களில் 200-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக் கிள்கள், 50-க்கும் மேற்பட்ட கார்கள் வந்து விடும் என்று கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
அவ்வளவு ஏன்.... வெளியூருக்கு அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செய்வதாக இருந்தாலும் புதுச்சேரி மக்கள் மணக்குள விநாயகரைப் பார்த்து வணங்கி விடைபெற்றுச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மணக்குள விநாயகரை நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தும்பிக்கையானும் புதுச்சேரி வாழ் மக்களை கண்ணை, இமை காப்பது போல காத்து வருகிறார்.
திருத்தங்கத்தேர்
5-10-2004ல் சுமார் 70 லட்சம் மதிப்பில் நகாசு வேலைப்பாடுடன் கூடிய புதிய தங்கத் தேர் செய்யப்பட்டு விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி தினத்தில் ஸ்ரீவிநாயகர் உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கமாக இருக்கிறது. உபயதாரர் விரும்பும் நாட்களில் கட்டணம் செலுத்தினால் வெள்ளித்தேரும், தங்கத் தேரும் கோவிலின் உட்பிரகாரத்தில் மூன்று முறை உலா வரும் உற்சவம் நடைபெறுகின்றது.
விநாயகர் அந்த நேரங்களில் வீதியுலா வந்து விண்ணவரையும், மண்ணவரையும் மகிழ்விக்கின்றார். விக்கினங்கள் நீக்கும் விநாயகரை நினைத்து எந்த நற்காரியங்கள் செய்தாலும் இடையூறு நீங்கப் பெற்று, காரிய சித்தி ஏற்படும் என்பது திண்ணம்.
மூலவர் தங்க கவசம்
13-06-2008 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் அருள்மிகு மணக்குள விநாயகர் மூலவருக்குத் தங்கக் கவசம் சார்த்தும் விழா முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.
மூலவருக்கு `தங்கக் கவசம்' சுமார் 10 கிலோ எடையில் உருவானது. 916.7 தங்கத்தில், ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களால் அது அமையும் பக்தர்கள் விருப்பத்திற்கிணங்க ரூ.3 ஆயிரம் மட்டும் செலுத்தி தமது குடும்பத்தாருடன் தனியே நவகலாசாபிஷேகம் செய்து மூலவர் தங்கக் கவசம் சார்த்தி வழிபடவும் வகை செய்யப்பட்டுள்ளது.
உற்சவர் தங்க கவசம்
02-03-2011 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மணக்குள விநாயகர் உற்சவ மூர்த்திக்கு தங்கக் கவசம் சார்த்தும் விழா பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. உற்சவருக்கு தங்கக் கவசம் சுமார் 5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டது. கூடுதாக ஒரு வில்வமாலை சுமார் 1 கிலோ எடையில் உருவாக்கப்பட்டது. 916.7 தங்கத்தில் ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களாக அந்தக் கவசம் இருக்கிறது.
- மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.
- மூல விநாயகரின் வலது பக்கத்தில் நாகபந்த சிலை உள்ளது.
விதர்ப்ப தேசத்தில் ஆதேயம் என்ற நகரம் இருந்தது. அங்கே வீமன் என்ற வேடன் வசித்து வந்தான்.
தீமைகளையே தொழிலாகக் கொண்டிருந்த அவன் கொலை, கொள்ளை போன்ற கெட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தான். இந்நிலையில் ஒருநாள் வெளியூர் பிராமணர்கள் சிலர் ஆதேயம் நகரில் நடந்த கோவில் திருவிழாவை காண வந்தனர்.
வீமன் அவர்களிடமிருந்த பொருட்களைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை கொலையும் செய்து விட்டான். அதனால் வீமனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
வீமனைப் போல கொலை, கொள்ளையில் தேர்ந்த ராட்சதன் வீமனிடம் பொருட்களைக் கொள்ளையடிக்க வந்தான். அவனைக் கண்டு வீமன் பயந்து காட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வன்னிமரம் ஒன்றில் ஏறி ஒளிந்து கொண்டான். அந்த மரத்தின் அடியில் விநாயகர் இருந்தார்.
வீமன் ஏறிய வேகத்தில் வன்னிமர இலை ஒன்று உதிர்ந்து விநாயகரின் காலடியில் விழுந்தது. இதனிடையே வீமனைத் துரத்தி வந்த ராட்சதனும் மரத்தில் ஏறினான்.
இதனால் மரத்தின் கிளைகள் அசைந்து மேலும் வன்னி இலைகள் விநாயகர் காலில் விழுந்தன. மேலும் மரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கை கலப்பின்போது மரத்தில் இருந்து இலைகள் கீழே இருந்த விநாயகர் மீது விழுந்தன.
பின்னர் அவர்கள் இருவருமே மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார்கள். அப்போது வன்னி இலைகள் விநாயகரின் மேல் பட்டதனால் அவர்கள் செய்த திவினைகள் அழிந்து போய் தெய்வ உருவம் பெற்றனர்.
விநாயகப் பெருமானின் அருளால் தெய்வலோகத்தில் இருந்து தங்க விமானம் வந்தது. அதில் ஏறி கணேசருலகத்தை அடைந்து பெரு வாழ்வு பெற்றனர்.
தொப்பை இல்லாத ஆதி விநாயகர்
விநாயகர் என்றதும் யானைத்தலை, பானை வயிறு இந்த இரண்டும்தான் நமக்கு நினைவுக்கு வரும். நன்கு உன்னிப்பாக பார்த்தால் யானைக்கு இருப்பது போன்று சிறிய கண்கள், விசிறி போன்று காது, ஒடிந்த நிலையில் ஒரு தந்தம், திறனை வெளிப்படுத்தும் துதிக்கை, கொஞ்சமாக பேச வேண்டும் என்பதை உணர்த்தும் சிறிய வாய் போன்றவற்றை பார்க்கலாம்.
விநாயகரின் தோற்றத்தை மேலும் ரசித்தால் அவரது நான்கு கரங்கள் என்னென்ன சுமந்து கொண்டிருக்கிறது? துதிக்கை இடம் சுழியாக உள்ளதா அல்லது வலஞ்சுழியாக உள்ளதா என்பதை எல்லாம் பார்த்து கண்டு களிக்கலாம்.
இத்தகைய வித்தியாசமான உருவமைப்புடன் உள்ள விநாயகரைப் பார்க்கும் போது அவரை கொஞ்ச வேண்டும் போல் தோன்றும். மணக்குள விநாயகரும் இப்படித்தான் இருப்பார் என்று நீங்கள் நினைத்தால், அது தவறாகும்.
ஏனெனில் மணக்குள விநாயகருக்கு தொப்பை கிடையாது. அவரது உருவமும் மற்ற விநாயகர் சிலை அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
இதுபற்றி ஆலய குருக்களில் ஒருவர் கூறியதாவது:-
மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் உருவ அமைப்பு எங்களுக்கே ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மிக அருகில் இருந்து நுட்பமாக பார்த்தால்தான் அந்த வித்தியாசம் தெரியும்.
அந்த விநாயகரின் வடிவம் தொன்மைக் கால சிற்பக் கலை நுணுக்கத்தோடு உள்ளது. விநாயகர் உடல் மெலிந்த உடல்வாகு போன்றிருக்கும்.
தன் இரண்டு கால்களையும் மடக்கி சப்பணம் போட்டு அமர்ந்த கோலத்தில் அவர் உள்ளார். இத்தகைய உருவ அமைப்பில் உலகில் வேறு எங்கும் விநாயகர் சிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இவர் குறிப்பிடும் விநாயகர் தற்போது ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் கருவறையில் இருந்து பெயர்த்து படகில் எடுத்துச் சென்று கடலில் தூக்கி வீசினார்கள். ஆனால் அவர் கரை திரும்பி இருந்த இடத்துக்கே வந்து விட்டார்.
வெள்ளைக்காரர்களின் கை, இவர் மீது பட்டதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக நீண்ட நாட்களாக பக்தர்களும், சமயப் பெரியவர்களும் கூறி வந்தனர். அதற்கான பரிகாரங் கள் செய்யப்பட்டாலும் அந்த விநாயகரை மீண்டும் வெள்ளைக் காரர்கள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் புதுச்சேரி மக்களிடம் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில்தான் தொள்ளைக் காது சித்தர் ஜீவசமாதி ஆனார். அவரது உடல் மணல் குளத்தின் மேற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதும் விநாயகர் கோவில் வழிபாடுகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற தொடங்கின.
அப்போது ஆகம விதிப்படி வெளிநாட்டவர் கைபட்ட சிலை தீட்டுப்பட்டது என்றும் எனவே வேறொரு புதிய விநாயகர் சிலையை கருவறையில் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்றும் சமயச் சான்றோர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து வழிபாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு நேராத வண்ணம் மற்றொரு விநாயகர் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்ததாக கருதப்படுகிறது. அன்று முதல் ஆலய கருவறையில் இரண்டு விநாயகர்கள் உள்ளார்கள். பிரெஞ்சுக்காரர்களால் கடத்தப்பட்டு மீண்டு வந்த விநாயகர் ஆதி விநாயகர் என்றும், புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட விநாயகர் மூல விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
கருவறையில் உள்ள இந்த இரு விநாயகர்களுக்கும் ஒரே மாதிரி அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த தடவை நீங்கள் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு செல்லும் போது உன்னிப்பாகப் பாருங்கள். அருகருகே இரு விநாயகர்கள் இருப்பது தெரியும்.
மூல விநாயகராக எழுந்தருளி உள்ள புதிய விநாயகரின் இடது கைப்பக்கம் ஆதிவிநாயகர் உள்ளார். இவரை முதன்மை முதல்வன் என்றும் அழைத்து சிறப்பிக்கிறார்கள்.
மூல விநாயகரின் வலது பக்கத்தில் நாகபந்த சிலை உள்ளது. இந்த சிலையும் பல நூற்றாண்டுகளாக நெசவாளர்களால் மணல் குளத்தங்கரை ஒரத்தில் இருந்த அரச மரத்தடியில் வைத்து வணங்கப்பட்ட சிலையாகும். இந்த மூவருக்கும் ஒரே மாதிரி அபிஷேகம் நடத்தப்படுகிறது.
- இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.
- பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் கோவில் அமைக்கப்பட்டது.
கோவில் முன்புறம் கோவில் நுழைவில் மண்டபம் சிறப்புற அமைக்கப்பட்டு அங்கே கோவில் யானை கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் மேல் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு அதன் இருபுறமும் காளை சிலைகள் மற்றும் பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்புறம் மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
முந்நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் அமைக்க, பிரெஞ்சு ஆதிக்கத்தால், பாண்டிச்சேரி மக்கள் மிகுந்த தொல்லைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் இக்கோவில் அமைக்கப்பட்டது.
ராஜகோபுர நுழைவாயிலுக்கு நேரரே தங்கமுலாம் பூசிய கொடி மரமும் மணக்குள விநயாகர் கருவறையும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் மூன்றடக்கில் சிலைகள் அமைந்துள்ளன. மல்புறத்தில் இருந்து முதல் வரிசையில் இடப்புறம் முருகப்பெருமான் தன் வாகனமாகிய மயிலுடன் நின்கிறார். வலதுபுறம் விநாயகர் நின்ற கோலத்தில் உள்ளார்.
முருகன் அருகிலும் ஒரு மூசிகம். விநாயகர் அருகிலும் ஒரு மூசிகம் மூன்றாவது அடுக்கில் இருபுறமும் காளையும் பூதகணங்களும் உள்ளன. நடுப்பகுதியில், நடுநாயகமாக, வட்டவடிவ பின்னணி அமைப்பில், நர்த்தன விநாயகர் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளார்.
ராஜகோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய வாயிலின் மேல்புறம், அமர்ந்த கோலத்தில் விநாயகரும் பூதகணங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
உள்ளே நுழைந்து வரிசையில் சென்று மூலவர் மணக்குள விநாயகரை தரிசிக்க வேண்டும். மூலவரை தரிசிக்க நுழையவும் வெளியில் வரவும் தனித்தனி வழிகள் உள்ளன.
மூலவர் இருக்கும் கருவறை சுமார் இருபது இருபந்தைந்து சதுர அடியில் அமைந்திருக்கிறது. விமானம் தங்கத்தால் ஆனது. மணக்குள விநாயகர் அமர்ந்த நிலையில் மேல்புறமுள்ள இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.
கீழே உள்ள இரு கரங்களில், வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கையில் விரதன முத்திரையுடனும் விளங்குகிறார். கருவறையில் மற்றுமொரு சிறிய கணபதியையும் நாகர்களின் திருவுருவங்களையும் காணலாம்.
மூலவர் மணக்குள விநாயகருக்கு தங்க கவசமும், வெள்ளி கவசமும் சாத்தி முக்கிய விழா நாட்களில் வழிபாடு செய்யப்படுகிறது.
- பிரெஞ்சு கவர்னர் துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார்.
- 1400-களில் நெசவாளர்கள் கருவறை மட்டும் கட்டி இருந்தனர்.
புதுச்சேரியை ஆண்டு வந்த பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களை சமமாக நடத்தவில்லை. அடிமைகள் போலவே நடத்தினார்கள். அப்படிப்பட்டவர்கள் `சுவாமி வீதி உலா' என்ற பெயரில் மணக்குள விநாயகர் உற்சவர் சிலையை தெருத் தெருவாக எடுத்துச் சென்றதை பிரெஞ்சுக்காரர்கள் தொடர்ந்து எரிச்சலாகவே பார்த்து வந்தனர்.
எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஈஸ்டர் தின நாட்களிலும் விநாயகர் உற்சவர் வீதி உலா நடத்தக் கூடாது என்று சேசு அடியார்கள் கூறினார்கள். இதை ஏற்று 1701ல் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் புதுச்சேரி கவர்னர் ஒரு உத்தரவை வெளியிட்டார்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் மணக்குள விநாயகர் கோவிலை இடிக்க முயன்றனர். விநாயகர் சிலையை உடைக்கவும் சதி திட்டம் தீட்டப்பட்டது.
இதை அறிந்ததும் புதுச்சேரியில் உள்ள சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். பிறகு அவர்கள் நாங்கள் எங்கள் விநாயகருடன் இந்த ஊரை விட்டே வெளியேறி சென்னைக்கு சென்று விடுவோம் என்று அறிவித்தனர்.
இதனால் தொழில்கள் முடங்கி, ஆட்சிக்கே ஆபத்து வந்து விடும் என்று பயந்த புதுச்சேரி கவர்னர் பிரான்ஸ்வா மர்த்தேன், யாரும் ஊரை விட்டு வெளியேற வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி தடுத்து நிறுத்தினார். பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்திய கவர்னர், விநாயகர் வீதி உலா செல்ல தடை இல்லை என்று அறிவித்தார்.
ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணக்குள விநாயகருக்கு திருவிழா நடத்தவும், வீதி உலா நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் 1706-ம் ஆண்டு மணக்குள விநாயகர் கோவிலில் முன்பு போல விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மறுநாளே நெசவாளர்கள், விநாயகர் உற்சவரை மணல் குளத்துக்கு எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டி, திருமஞ்சனம் செய்தனர். என்றாலும் மணக்குள விநாயகர் கோவிலை சிதைப்பதில் சில பிரெஞ்சுக்காரர்கள் தீவிரம் காட்டினார்கள். ஆனால் மணக்குள விநாயகரை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இதையடுத்து வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் ஆராதனையை நடத்தக் கூடாது என்றனர். மேளதாள வாத்தியங்கள் முழங்கக் கூடாது. கொம்பு ஊதக் கூடாது. தேவதாசிகள் நடனம் இடம் பெறக்கூடாது என்று அடுக்கடுக்காக தடை உத்தரவிட்டனர்.
பக்தர்கள் நடத்திய பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கான தடை நீங்கியது. பிறகு நாட்கள் செல்ல, செல்ல பிரெஞ்சுக்காரர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. மணக்குள விநாயகரை அப்புறப்படுத்தும் முயற்சியை முழுமையாக கை விட்டனர். மணக்குள விநாயகர் கோவில் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கினார்கள்.
பிறகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் அவர்களது மனதிலும் மணக்குள விநாயகர் இடம் பிடித்தார். அர்த்த மண்டபத்துக்கு அடுத்தப்படியாக கோவில் முன்பு மகாமண்டபம் கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தனர்.
மணக்குள விநாயகரின் மகிமைகளை ஒவ்வொன்றாக அறிந்து, கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். விநாயகர் சிலையை உடைக்க உத்தரவிட்டவர்களே, அந்த விநாயகரை கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர்.
கோவிலை இடிக்க நினைத்தவர்களே, கோவில் திருப்பணிகளை முன்நின்று செய்தனர். பிரெஞ்சு கவர்னராக இருந்த துப்லெக்ஸ் மணக்குள விநாயகரின் தீவிர பக்தராகவே மாறினார். துப்லெக்ஸ் கவர்னராக இருந்த ஆட்சிக்காலத்தில் மணக்குள விநாயகர் கோவில் மீது யாரும் எந்த ஒரு சிறு தாக்குதலும் நடத்தவில்லை. மணக்குள விநாயகரை வணங்கிய பிறகே எதையும் செய்யத் தொடங்கினார். மணக்குள விநாயகரின் மகிமைக்கு இது ஒரு சான்றாகும்.
ஆலயம் அன்றும் - இன்றும்
மணக்குள விநாயகர் எந்த காலக்கட்டத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார் என்ற குறிப்பு எங்குமே இல்லை. அது போல அரச மரத்தடியில் இருந்த விநாயகருக்கு 1400-களில் நெசவாளர்கள் சிறு கருவறை மட்டும் கட்டியது மட்டுமே தெரிகிறது.
15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகளில் மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரி கடலோரத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
16-ம் நூற்றாண்டில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் பலர் திருப்பணி செய்துள்ளனர். தொள்ளைக்காது சித்தர் ஜீவ சமாதி ஆன பிறகு மணக்குள விநாயகர் வழிபாடுகள் ஆகம விதிமுறைகளுக்கு மாறின.
1900-களின் தொடக்கத்தில் புதிய மூலவர் சிலை வைக்கப்பட்டது. மூல விநாயகர் இடது பக்கம் வைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த காலக் கட்டத்தில்தான் பாரதியார் மணக்குள விநாயகரை 8 ஆண்டுகள் வழிபட்டார்.
பிரெஞ்சு ஆட்சியாளர்களிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு மணக்குள விநாயகர் ஆலத் திருப்பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மறு ஆண்டே 1955-ல் மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை அவர்களால் தேக்கு கொடி மரம் நிறுவப்பட்டது.
1957-ம் ஆண்டு முதல் ஆவணி மாதம் ஆண்டு பெரு விழாவான பிரம்மோற்சவம் நடத்துவது தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆவணி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவம் 58-வது பிரம்மோற்சவமாகும்.
1956-ம் ஆண்டு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு 1966-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
1986-ம் ஆண்டு புதிய உற்சவமூர்த்தி உருவாக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு வெள்ளித்தேர் ஓடியது. 1986-ம் ஆண்டு தங்கத்தேர் விடப்பட்டது.
1994-ம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டது. 1999-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
2004-ம் ஆண்டு ரூ.70 லட்சம் செலவில் புதிய தங்கத் தேர் அர்ப்பணிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் செய்து சார்த்தப்பட்டது.
2009-ம் ஆண்டு இத்தலத்துக்கு என இணையத்தளம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஆலயம் முழுவதும் குளிரூட்டப்பட்டது.
2011-ம் ஆண்டு உற்சவருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக திருப்பணி செய்து கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆலயம் தரை முழுவதும் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது. கருவறை தவிர ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்