search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி கோவிலில்"

    • 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
    • வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.7-ம் திருவிழாவான நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் மாலை6மணிக்கு சமய உரையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு 10 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்துக்கு முன்னால் செண்டை மேளம், சிங்காரி மேளம், கேரள தையம் ஆட்டம், கேரளாவைச் சேர்ந்த கலைஞர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்ச்சி, பெண்களின் நாதஸ்வர கச்சேரி, பூ கரக காவடி ஆட்டம் போன்றவை இடம் பெற்று இருந்தன.

    இதில் 100-க்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கு இருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர். இந்த7-ம்நாள் திருவிழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, 7-ம் திருவிழா மண்டகப்படி கட்டளை தாரர்கள் அய்யப்பன், சந்திரன், கண்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    8-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்குபகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11.30 மணிக்குஅலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்குமண்டகப்படி நிகழ்ச்சியும் 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் நடக்கிறது அதன் பின்னர் 8-30 மணிக்கு சன்னதி தெருவில் அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ×