search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் போராட்டம்"

    • பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
    • 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி அருகே காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 26 சக்கரங்கள் கொண்ட 13 கனரக லாரிகள் வந்தன. இந்த லாரிகளால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில்,

    தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மூலனூர், கன்னி வாடி மற்றும் குடிமங்கலம் ,கோவிந்தாபுரம், சத்திரம், குண்டடம், மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவிலான காற்றாடிகள் அமைக்கப்பட்டு வந்தது.

    இப்பொழுது ஒரு காற்றாடி ரூ.8 கோடி முதல் 12 கோடி வரை பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது . ஆலைகளில் அமைக்கப்படும் காற்றாடி இறக்கைகள் மற்றும் உபகரணங்கள் 200 அடி நீளமுள்ள லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.

    தாராபுரத்தில் இருந்து பகவான் கோவில் , பொன்னிவாடி செல்லும் சாலையானது 7 மீட்டர் கொண்ட சாலை ஆகும் .இதில் 6 மீட்டர் அகலமுள்ள லாரிகள் வருகின்றன. அதுவும் இந்த லாரிகளானது ஒவ்வொரு லாரியாக வராமல் தொடர்ச்சியாக 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவில் மட்டும் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மூலனூர் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.
    • தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமத்திற்கு உட்பட்ட பந்தம்பாளையத்தில் ஒரு தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் இடையூறாக உள்ளது. ஏற்கனவே இந்த மதுபான கூடம் அமைவதற்கு முன்பு வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் ஆகிய 3 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த மதுபான கூடம் அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மதுபான கூடத்தை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடமும் மனு அளித்து உள்ளோம். இதையும் மீறி அந்த மதுபான கூட நிர்வாகத்தினர், வேறொரு மாவட்டத்தில் அனுமதி உரிமம் பெற்று இங்கு மதுபான கூடத்தை அமைத்தனர். இதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முதல் முறையாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றோம்.

    பின்னர் சுமார் ஒரு வாரம் பூட்டி இருந்த அந்த மதுபான கூடம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையறிந்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போதும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு அதிகாரிகள் இந்த கடை இனி இங்கே திறக்கப்படாது என்று மீண்டும் உறுதி அளித்தனர். இதனால் கலைந்து சென்றோம்.

    இந்நிலையில் தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள். அப்படி மீண்டும் திறக்கப்பட்டால் அது பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே விவசாயிகளின் நலன் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுபான கூடத்தை இங்கிருந்து முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.
    • வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காக்களூர் ஊராட்சி ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா ஆகிய பகுதி களில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் காக்களூர் ஏரி நிரம்பி தண்ணீர் புகுந்தது. இன்னும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த காக்களூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ண சாமி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டனர். அப்போது பொது மக்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். உடனடியாக அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்ற அமைச்சர் மூர்த்தி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் திருமழிசை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருமழிசையில் ஆவின் பால் வழக்கத்தை விட ரூ.5 கூடுதலாகவும், குடிநீர் கேன்கள் ரூ.10 கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டது. வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.
    • பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் பழைய பேட்டையை அடுத்த கண்டியப்பேரி பகுதியில் ஊய்காட்டு சுடலை மாடசாமி கோவில் இருக்கிறது.

    கோடகன் கால்வாய் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் பின்புறமாக தற்போது அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இந்த இடத்தில் பொதுப்பணி துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்திய நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்த நிலையில் அளவீடு செய்ததில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று டவுன் தாசில்தார் விஜய லட்சுமி முன்னிலையில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட்டுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்ததால் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது
    • தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது.சமீப காலமாக தனியார் பஸ் தங்கள் பகுதிக்கு வருவதில்லை எனக்கூறி நேற்று மாலை வி.அய்யம்பாளையம் பகுதிக்கு வந்த தனியார் பஸ்சை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மங்கலம் போலீசார் தனியார் பஸ்சை சிறை பிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியார் பஸ் நிர்வாகத்தினர் வி.அய்யம்பாளையம் பகுதிக்கு பஸ் இயக்கப்படும் என பொதுமக்களுக்கு எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்ததைத் தொடர்ந்து வி.அய்யம்பாளையம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குளத்துபாளையம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு கடந்த 23 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அவதிக்கு உள்ளாகினர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் ஊத்துக்குளி போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். ஆனால் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அப்புறப்படுத்திய விநாயகர் சிலையை திண்டிவனம் நகராட்சி விநாயகர் கோவிலில் துணி போட்டு மூடி பத்திரமாக வைத்துள்ளனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மகாத்மா காந்தி நகரில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி பொது இடத்தில் விநாயகர் சிலையை கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வணங்கி வந்தனர்.

    இந்த சிலை வைத்ததற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற நகராட்சி நிர்வாகம் 3 முறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இது சம்பந்தமாக இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் விநாயகர் சிலையை அகற்றக்கூடாது என மனு அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து விநாயகர் சிலையை கொட்டும் மழையில் அகற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மீண்டும் அந்த பகுதியில் சிலை வைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என கூறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

    சிலையை அகற்றுவதற்கு முன்னதாக ஐயரை வைத்து பூஜை செய்து சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்புறப்படுத்திய விநாயகர் சிலையை திண்டிவனம் நகராட்சி விநாயகர் கோவிலில் துணி போட்டு மூடி பத்திரமாக வைத்துள்ளனர்.

    • கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார் தலைமையில் நேற்று கூட்டம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனாலும் தொடர்ந்து சாயகழிவு நீர் வந்து கொண்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட கலெக்டர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நடக்க இருந்த கிராமசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று புஞ்சை பால தொழுவு ஊராட்சி துணைத்தலைவர் பிரியாவின் கணவர் சுப்பிரமணி, சென்னிமலை யூனியன் 11-வது வார்டு கவுன்சிலர் தங்கவேல், சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் மக்கள் நல சங்கம் சார்பில் பிரபு, மணி உட்பட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திரண்டு கிராம சபை கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டும் என்று மாலை 5 மணி வரை போராடினர்.

    இது சம்பந்தமாக சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினை நடத்தினர். நடந்த கூட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை, கிராம சபை கூட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என கூறி புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து பொது மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி வரை பேராட்டம் நடந்தது.

    அதன் பின்பு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.
    • வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி உக்கரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோட்டில் இருந்து மில்மேடு செல்லும் தார் சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த சாலை வழியாக அதிக பாரத்துடன் ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு கனரக மற்றும் டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இந்த வழியாக வரும் கனரக டிப்பர் லாரிகளால் தார் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    மேலும் டிப்பர் லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு செல்வதால் சாலை வளைவுகளில் ஜல்லி கல் கீழே கொட்டி சாலையில் பரவலாக சிதறி கிடைக்கிறது.

    இதனால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் டிப்பர் லாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பகல் மற்றும் இரவு முழுவதும் அதிக வேகமாக செல்கிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இது குறித்து மக்கள் லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த சாலை வழியாக வந்த 6-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து மக்கள் கூறும் போது, இந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வர வேண்டும். வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

    இதை தொடர்ந்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் பேரூராட்சி தலைவர் இளங்கோ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் போலீசார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

    இதை தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவர்களிடம் இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்டிருக்கிறது. இது போன்ற கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. எனவே இனிமேல் நீங்கள் இந்த சாலை வழியாக டிப்பர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு வரக்கூடாது. மீண்டும் கனரக டிப்பர் லாரிகள் இந்த சாலையில் வந்தால் பறிமுதல் செய்ய நேரிடும் என யூனியன் சேர்மன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த போராட்டம் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மீண்டும் கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
    • பெண்கள் வீட்டுக்கு செல்லாமல் மந்தையில் கூடி கும்மிப்பாட்டு பாடி கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலைகளை குடைத்து அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டது. இதனை கடந்த 2011-ல் கண்டறிந்த அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் விரிவான விசாரணை நடத்தினார். இதில் கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல்களால் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கிரானைட் முறைகேடு விவகாரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டு நடந்து வருகிறது.

    இந்த முறைகேட்டை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட அரசு தடைவிதித்தது.

    இதனை மேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் வரவேற்றனர். கிரானைட் குவாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் இல்லாததால் அப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்தனர். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது.

    இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏல அறிவிப்பு வெளியானது. இது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் பலனில்லை. இந்த நிலையில் குவாரிகளை ஏலம் விடுவதற்கான பணிகள் மும்முரமடைந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சேக்கிபட்டி கிராம மக்கள் நேற்று ஊர் மந்தையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அய்யாபட்டி, திருச்சுனை, அலங்கம்பட்டி, ஒட்டக்கோவில்பட்டி என 15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோார் பங்கேற்றனர். அப்போது கிரானைட் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இந்த நிலையில் போராட்டம் குறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. ஜெயந்தி, போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, தாசில்தார் செந்தாமரை மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. ஏலம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் நடக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை தொடங்கிய போராட்டம் விடிய, விடிய நடந்தது. இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்லாமல் மந்தையில் கூடி கும்மிப்பாட்டு பாடி கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றும் திரளானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தை முன்னிட்டு சேக்கிபட்டியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது.
    • இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எசனை மற்றும் கீழக்கரை கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் கற்கள் மிக அதிக அளவில் வெடிவைத்து வெட்டி எடுக்கப்படுகிறது.

    இப்படி வெட்டி எடுக்கப்படும் ஜல்லிகள், கிரஷர் பவுடர்கள், சிப்ஸ்கள் பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை உள்பட வெளிமாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகளில் எசனை-ஆலங்கிளி சாலை வழியாக எடுத்து செல்லப்படுகிறது.

    இப்படி செல்லும் லாரிகள் அதிவேகமாகவும் ஜல்லிகற்கள் சாலை முழுவதும் சிதறி பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.

    மேலும் 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் இன்று காலை எசனை குவாரியிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்த 2 லாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்கிளி சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    இதனை அறிந்த அதிகாரிகள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் கூச்சலிட்டனர்.

    உங்களுடைய கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் சாலையில் சிதறிக்கிடக்கும் கற்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

    மேலும் இது போல் கற்களை சிதறி செல்லும் லாரிகள் குறித்து புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது.
    • கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகளை குடைந்து கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் அரசுக்கு தெரிவிக்காமல் சட்ட விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட மலைகளை பெயர்த்து எடுத்து கிரானைட் கற்களை வியாபாரம் செய்து வந்தது. இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், கிரானைட் குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது சட்டவிதிகள் மீறப்பட்டு இயற்கை வளங்களை சுரண்டி கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து சகாயம் தீவிர விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீசார் கனிம வளங்களை கொள்ளையடித்ததாக கிரானைட் நிறுவனங்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை தாக்கல் செய்தனர். சகாயம் அளித்த ஆய்வறிக்கை எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வந்த கிரானைட் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு கிராம மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் உள்ள சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது. இதற்கு புவியியல் மற்றும் சுங்கத்துறையும் அனுமதி அளித்திருந்தது.

    இந்த அறிவிப்பு ஏற்கனவே கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடக்க நிலையில் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது

    கிரானைட் குவாரிகளால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். எனவே கிரானைட் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர். கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் அய்யாபட்டி, திருச்சுனை, கம்பூர், ஒட்டகோவில்பட்டி, அலங்கம்பட்டி உள்பட 15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கிரானைட் குவாரிகளை மீண்டும் இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் தொடக்கத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×