search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே  2 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பெரம்பலூர் அருகே 2 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    • 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது.
    • இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எசனை மற்றும் கீழக்கரை கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் கற்கள் மிக அதிக அளவில் வெடிவைத்து வெட்டி எடுக்கப்படுகிறது.

    இப்படி வெட்டி எடுக்கப்படும் ஜல்லிகள், கிரஷர் பவுடர்கள், சிப்ஸ்கள் பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை உள்பட வெளிமாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகளில் எசனை-ஆலங்கிளி சாலை வழியாக எடுத்து செல்லப்படுகிறது.

    இப்படி செல்லும் லாரிகள் அதிவேகமாகவும் ஜல்லிகற்கள் சாலை முழுவதும் சிதறி பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.

    மேலும் 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் இன்று காலை எசனை குவாரியிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்த 2 லாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்கிளி சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    இதனை அறிந்த அதிகாரிகள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் கூச்சலிட்டனர்.

    உங்களுடைய கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் சாலையில் சிதறிக்கிடக்கும் கற்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

    மேலும் இது போல் கற்களை சிதறி செல்லும் லாரிகள் குறித்து புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×