search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியம்பட்டி அருகே வேகமாக வருவதாக கூறி டிப்பர் லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    புளியம்பட்டி அருகே வேகமாக வருவதாக கூறி டிப்பர் லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

    • லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.
    • வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி உக்கரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோட்டில் இருந்து மில்மேடு செல்லும் தார் சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த சாலை வழியாக அதிக பாரத்துடன் ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு கனரக மற்றும் டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இந்த வழியாக வரும் கனரக டிப்பர் லாரிகளால் தார் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    மேலும் டிப்பர் லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு செல்வதால் சாலை வளைவுகளில் ஜல்லி கல் கீழே கொட்டி சாலையில் பரவலாக சிதறி கிடைக்கிறது.

    இதனால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் டிப்பர் லாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பகல் மற்றும் இரவு முழுவதும் அதிக வேகமாக செல்கிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இது குறித்து மக்கள் லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த சாலை வழியாக வந்த 6-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து மக்கள் கூறும் போது, இந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வர வேண்டும். வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

    இதை தொடர்ந்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் பேரூராட்சி தலைவர் இளங்கோ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் போலீசார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

    இதை தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவர்களிடம் இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்டிருக்கிறது. இது போன்ற கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. எனவே இனிமேல் நீங்கள் இந்த சாலை வழியாக டிப்பர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு வரக்கூடாது. மீண்டும் கனரக டிப்பர் லாரிகள் இந்த சாலையில் வந்தால் பறிமுதல் செய்ய நேரிடும் என யூனியன் சேர்மன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த போராட்டம் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×