search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரானைட் குவாரி"

    • மீண்டும் கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
    • பெண்கள் வீட்டுக்கு செல்லாமல் மந்தையில் கூடி கும்மிப்பாட்டு பாடி கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலைகளை குடைத்து அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டது. இதனை கடந்த 2011-ல் கண்டறிந்த அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் விரிவான விசாரணை நடத்தினார். இதில் கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல்களால் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கிரானைட் முறைகேடு விவகாரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டு நடந்து வருகிறது.

    இந்த முறைகேட்டை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட அரசு தடைவிதித்தது.

    இதனை மேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் வரவேற்றனர். கிரானைட் குவாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் இல்லாததால் அப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்தனர். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது.

    இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏல அறிவிப்பு வெளியானது. இது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் பலனில்லை. இந்த நிலையில் குவாரிகளை ஏலம் விடுவதற்கான பணிகள் மும்முரமடைந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சேக்கிபட்டி கிராம மக்கள் நேற்று ஊர் மந்தையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அய்யாபட்டி, திருச்சுனை, அலங்கம்பட்டி, ஒட்டக்கோவில்பட்டி என 15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோார் பங்கேற்றனர். அப்போது கிரானைட் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இந்த நிலையில் போராட்டம் குறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. ஜெயந்தி, போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, தாசில்தார் செந்தாமரை மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. ஏலம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் நடக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை தொடங்கிய போராட்டம் விடிய, விடிய நடந்தது. இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்லாமல் மந்தையில் கூடி கும்மிப்பாட்டு பாடி கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றும் திரளானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தை முன்னிட்டு சேக்கிபட்டியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது.
    • கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகளை குடைந்து கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் அரசுக்கு தெரிவிக்காமல் சட்ட விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட மலைகளை பெயர்த்து எடுத்து கிரானைட் கற்களை வியாபாரம் செய்து வந்தது. இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், கிரானைட் குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது சட்டவிதிகள் மீறப்பட்டு இயற்கை வளங்களை சுரண்டி கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து சகாயம் தீவிர விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீசார் கனிம வளங்களை கொள்ளையடித்ததாக கிரானைட் நிறுவனங்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை தாக்கல் செய்தனர். சகாயம் அளித்த ஆய்வறிக்கை எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வந்த கிரானைட் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு கிராம மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் உள்ள சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது. இதற்கு புவியியல் மற்றும் சுங்கத்துறையும் அனுமதி அளித்திருந்தது.

    இந்த அறிவிப்பு ஏற்கனவே கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடக்க நிலையில் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது

    கிரானைட் குவாரிகளால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். எனவே கிரானைட் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர். கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் அய்யாபட்டி, திருச்சுனை, கம்பூர், ஒட்டகோவில்பட்டி, அலங்கம்பட்டி உள்பட 15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கிரானைட் குவாரிகளை மீண்டும் இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் தொடக்கத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரிவலப்பாதை அருகே 17.9 ஹெக்டோ் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் குவாரி உள்ளது.
    • அரசு விதிகளின்படி உள்ள 40 வகையான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் அடிவாரப் பகுதியில் உள்ள கிரிவலப்பாதை அருகே 17.9 ஹெக்டோ் (சுமாா் 45 ஏக்கா்) அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் குவாரி உள்ளது.தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு சொந்தமான இந்த குவாரியில் கலா் கிரானைட் துண்டுகளை வெட்டி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட நிா்வாகம் திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு கனிமவள நிறுவன துணை மேலாளா் கணேசன், திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    பொதுமக்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் மற்றும் சிவன்மலை பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    கனிம வள நிறுவன துணை மேலாளா் கணேசன், மேற்கண்ட குவாரியில் கலா் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கும் திட்டம் குறித்தும், அதனுடைய செயல்பாடு குறித்தும் குறும்படம் மூலம் விளக்கினாா்.

    அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, முகிலன் உள்ளிட்டோா் எழுந்து இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.அரசு விதிகளின்படி உள்ள 40 வகையான ஆவணங்கள் இதில் இணைக்கப்படவில்லை என்றும், இங்குள்ள இயற்கை வளத்தை எடுத்துச் செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினா்.

    தொடா்ந்து கிரானைட் கல் குவாரியில் கல் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, முழக்கமிட்டனா். கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களும் கல்குவாரி திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ் குமாா் பேசியபோது, காங்கயம் ஒன்றியக் குழு, சிவன்மலை ஊராட்சி கூட்டங்களைக் கூட்டிஇதற்கு எதிராக தீா்மான நிறைவேற்றப்படும் எனவும், இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

    இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், பாதியில் கூட்டத்தை விட்டு எழுந்து சென்றாா். இவரைத் தொடா்ந்து மற்ற அலுவலா்களும் சென்று விட, பொதுமக்களும் எந்தவித முடிவும் தெரியாமல் கலைந்து சென்றனா்.

    ×