search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேலூர் அருகே 2-வது நாளாக தொடரும் போராட்டம்: கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய 15 கிராம மக்கள் கோரிக்கை
    X

    மேலூர் அருகே 2-வது நாளாக தொடரும் போராட்டம்: கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய 15 கிராம மக்கள் கோரிக்கை

    • மீண்டும் கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
    • பெண்கள் வீட்டுக்கு செல்லாமல் மந்தையில் கூடி கும்மிப்பாட்டு பாடி கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலைகளை குடைத்து அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டது. இதனை கடந்த 2011-ல் கண்டறிந்த அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் விரிவான விசாரணை நடத்தினார். இதில் கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல்களால் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கிரானைட் முறைகேடு விவகாரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டு நடந்து வருகிறது.

    இந்த முறைகேட்டை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட அரசு தடைவிதித்தது.

    இதனை மேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் வரவேற்றனர். கிரானைட் குவாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் இல்லாததால் அப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்தனர். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது.

    இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏல அறிவிப்பு வெளியானது. இது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் பலனில்லை. இந்த நிலையில் குவாரிகளை ஏலம் விடுவதற்கான பணிகள் மும்முரமடைந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சேக்கிபட்டி கிராம மக்கள் நேற்று ஊர் மந்தையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அய்யாபட்டி, திருச்சுனை, அலங்கம்பட்டி, ஒட்டக்கோவில்பட்டி என 15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோார் பங்கேற்றனர். அப்போது கிரானைட் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இந்த நிலையில் போராட்டம் குறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. ஜெயந்தி, போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, தாசில்தார் செந்தாமரை மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. ஏலம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் நடக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை தொடங்கிய போராட்டம் விடிய, விடிய நடந்தது. இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்லாமல் மந்தையில் கூடி கும்மிப்பாட்டு பாடி கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றும் திரளானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தை முன்னிட்டு சேக்கிபட்டியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×