search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேலூர் அருகே கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்கள் போராட்டம்
    X

    மேலூர் அருகே கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்கள் போராட்டம்

    • சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது.
    • கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகளை குடைந்து கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் அரசுக்கு தெரிவிக்காமல் சட்ட விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட மலைகளை பெயர்த்து எடுத்து கிரானைட் கற்களை வியாபாரம் செய்து வந்தது. இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், கிரானைட் குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது சட்டவிதிகள் மீறப்பட்டு இயற்கை வளங்களை சுரண்டி கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து சகாயம் தீவிர விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீசார் கனிம வளங்களை கொள்ளையடித்ததாக கிரானைட் நிறுவனங்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை தாக்கல் செய்தனர். சகாயம் அளித்த ஆய்வறிக்கை எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வந்த கிரானைட் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு கிராம மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் உள்ள சில கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது. இதற்கு புவியியல் மற்றும் சுங்கத்துறையும் அனுமதி அளித்திருந்தது.

    இந்த அறிவிப்பு ஏற்கனவே கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடக்க நிலையில் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது

    கிரானைட் குவாரிகளால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். எனவே கிரானைட் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர். கிரானைட் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேக்கிப்பட்டியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் அய்யாபட்டி, திருச்சுனை, கம்பூர், ஒட்டகோவில்பட்டி, அலங்கம்பட்டி உள்பட 15 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கிரானைட் குவாரிகளை மீண்டும் இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் தொடக்கத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×