search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர் எதிர்ப்பு"

    கரூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே தாளியம்பட் டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கோபி (வயது 22). கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதா (19), கரூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரின் பெற்றோர்களுக்கும் அவர்களின் காதல் விவகாரம் தெரிய வரவே, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் தாங்கள் இணைந்து வாழ முடியாது என நினைத்த கோபி, கவிதா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் லாலாப்பேட்டை அருகே உள்ள சிம்மாச்சிப்பட்டியில் உள்ள கோபியின் உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்தனர்.

    இந்தநிலையில் கவிதா மற்றும் உறவினர் வெளியே சென்றிருந்த சமயத்தில் கோபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த கவிதா முன்னதாக வீட்டிற்கு வந்து பார்த்த போது கோபி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். இனிமேலும் வாழ முடியாது என்று எண்ணிய அவரும் வி‌ஷம் குடித்து காதலன் அருகேயே தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே கோபியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, லாலாப்பேட்டை போலீசிலும் புகார் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடலையும் மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தது.

    வடமதுரை:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் கவுதமி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வடமதுரை அருகே ஆர்.கோம்பையைச் சேர்ந்தவர் மோகன் (22), காங்கேயம் பகுதியில் வேலைக்கு சென்றார்.

    அப்போது கவுதமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

    இந்த வி‌ஷயம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்பு கரூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசினர். ஆனால் இருவரும் காதல் ஜோடியை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

    மோகன், தனது காதல் மனைவியை தானே காப்பாற்றிக் கொள்வேன் எனக் கூறி காதல் ஜோடி தனியாக சென்று விட்டனர்.

    தூத்துக்குடியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை ரெயில்வே ஒப்பந்த ஊழியர் திருமணம் செய்துகொண்டார். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #TransgenderMarriage
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

    இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.

    அதன்படி, அக்டோபர் 31-ந் தேதி (நேற்று) தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

    இதையடுத்து, மணமக்கள் நேற்று காலை சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.

    மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.

    ஆனால், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று கூறினார்.

    ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் முறைப்படி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அருண்குமாரிடம், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருணிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை.

    அதே நேரத்தில் முகூர்த்த நேரம் முடியும் சூழல் உருவானது. எனவே திருமணத்தை முதலில் முடித்துவிட்டு, சான்றிதழ் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மணமக்கள் முடிவு செய்தனர்.



    அதன்படி காலை 11.40 மணிக்கு மணமக்கள் மாலை மாற்றினர். பின்னர் திருநங்கை ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த திருநங்கைகள் உற்சாகமாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ‘தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர்.  #TransgenderMarriage

    தஞ்சையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவரும், பாபநாசம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சரண்யா (29) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போதே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சுரேசும், சரண்யாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு சரண்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனால் நேற்றுமுன் தினம் சரண்யா தனது வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதலன் சுரேசுடன் தஞ்சையில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட சுரேஷ், தனது காதல் மனைவி சரண்யாவுடன் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது தங்களது காதலுக்கு சரண்யா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணை நடத்தினார். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.

    சுஷ்மிதா இந்த ஆண்டு தான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.

    இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதியில் சுஷ்மிதாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த சுஷ்மிதா திருமணம் செய்த 2-வது நாளான நேற்று திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார். மயங்கி கிடந்த சுஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் கல்லூரி மாணவி தஞ்சம் அடைந்தார்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபின் பிராங்க் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரும், பொன்மனை பெருவள்ளிக்கடவு பகுதியைச் சேர்ந்த அனிஷா (19) என்பவரும் காதலித்து வந்தனர். அனிஷா கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது சுபின் பிராங்குடன் அனிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்தனர். 

    இந்த விவகாரம் அனிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்ற அனிஷா, தனது காதலன் சுபின் பிராங்குடன் மாயமானார். 

    இதுகுறித்து அனிஷாவின் பெற்றோர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் கல்லூரிக்கு சென்ற தங்கள் மகள் அனிஷா மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தனர். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிஷாவை தேடி வந்தனர். 

    போலீசார் தேடுவதை அறிந்து அனிஷாவும், அவரது காதலன் சுபின் பிராங்கும் நேற்று இரவு குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரவழைத்து சமரசப்பேச்சு நடத்தினர். அப்போது சுபின் பிராங்கை, அனிஷாவின் உறவினர்கள் தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து போலீசார் சுபின் பிராங்கை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனிஷாவிடம் அவரது தாயார் பேசினார். தங்களுடன் வந்து விடும்படி கூறி அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அனிஷா தாயின் கண்ணீரை பெரிதுபடுத்தவில்லை. காதலனுடன் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனிஷாவை காதலன் சுபின் பிராங்குடன் அனுப்பி வைத்தனர்.
    போலீசார் அலைக்கழித்ததால் உடல் முழுவதும் மின் வயரை சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும் ஒருமகளும் உள்ளனர். முதல் மகன் ரெங்கசாமி. இவர் படித்து முடித்து விட்டு விழுப்புரத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருந்தனர்.

    இதனால் மனம் வேதனையடைந்த குமரேசன் போலீசாரிடம் தனது சார்பில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் அவரது மனுவை வாங்காமல் அலைக்கழித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமரேசன் இன்று தனது வீட்டில் உடல் முழுவதும் மின்சார வயர்களை சுற்றிக் கொண்டு வாயில் வயரை பிடித்தவாறே மின்சாரத்தை தன் உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம் அடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அருண்குமார் (வயது26). பி.பி.ஏ. படித்து முடித்துள்ள இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    காவாராப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் மகள் சிந்து(21). இவர் பி.டெக். படித்து முடித்துள்ளார். அருண்குமாரும், சிந்துவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயம் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு சிந்து வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அருண்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சிந்து பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது.

    இந்த தகவலை தனது காதலன் அருண்குமாரிடம் சிந்து கூறி, உன்னை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியாது என்று கதறி அழுதார். இதனால் சிந்துவை அழைத்து கொண்டு கடலூருக்கு சென்ற அருண்குமார் அங்கு பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் தம்பதியினர் நேற்று தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இது குறித்து சிந்து கூறும்போது, நான் பள்ளியில் படிக்கும் போதே அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தோம். அருண்குமாரை காதலிப்பதாக எனது தந்தையிடம் நான் கூறியபோது, கத்தியால் குத்தியோ அல்லது விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள் என்று கொடுமைப்படுத்தினார். நாங்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்தவுடன் அருண்குமாரின் வீட்டை எனது தந்தை அடித்து நொறுக்கியதுடன் அங்குள்ளவர்களை மிரட்டினார். மேலும் நான் காணாமல் போய்விட்டதாக ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். எனது தந்தையால் எனக்கும், அருண் குமாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளோம் என்றார். 
    திருவட்டாரில் ஒரே பள்ளியில் பணியாற்றியபோது ஆசிரியரை காதலித்த ஆசிரியைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
    தக்கலை:

    திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தக்கலை பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்தார்.

    இதே பள்ளியில் வெண்டலிக்கோடு பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பணி நிமித்தம் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதில் ஆசிரியருக்கும், ஆசிரியைக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் பள்ளிக்கு வெளியே அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

    ஆசிரியரும், ஆசிரியையும் காதலிக்கும் தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதில் ஆசிரியையின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனை சந்திக்கவும் அனுமதி மறுத்தனர்.இதனால் மனமுடைந்த ஆசிரியை நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் நேராக காதலனை சந்தித்து அவரையும் அழைத்துக் கொண்டு தக்கலை போலீஸ் நிலையம் சென்றார்.

    அங்கு போலீசாரிடம் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் காதலிக்கிறோம். இதை பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களை போலீஸ் நிலையம் வரவழைத்து சமரச பேச்சு நடத்தினர். இதில் ஆசிரியரின் காதலை அவரது பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். ஆசிரியையின் காதலை ஏற்க அவரது பெற்றோர் மறுத்தனர். ஆனால் ஆசிரியை பெற்றோருடன் செல்ல மறுத்ததோடு, காதலருடன்தான் செல்வேன் என உறுதியாக கூறினார்.

    இருவரும் மேஜர் என்பதால் போலீசார் காதல் ஜோடியின் முடிவை ஏற்று அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
    பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பன அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது #PuneSchool #BizarreOrder
    புனே :

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தில் இருந்து நேற்று முன்தினம் பெற்றோர்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

    அதில், இனி மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் வெளியில்  அணியும் ஸ்கர்ட்டின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை.

    இதற்கிடையே, பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் நேரில் சென்று விசாரிக்க மாநில கல்வித்துறை துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, அக்குழு விசாரித்துக் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.

    இந்நிலையில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது

    பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம் நடத்தினர். சமூக வலை தளங்களிலும் இந்த அறிவிப்பு குறித்து விவாதம் நடத்தினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    #PuneSchool #BizarreOrder
    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தாராபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராரபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் கடந்த 10 வருடமாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் லதா என்கிற மகேஸ்வரி (24). என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் மகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த தேவராஜ் மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதனையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தேவராஜ்-மகேஸ்வரியின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். மேலும் அவர்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறி விட்டு சென்றனர்.

    பின்னர் காதல் ஜோடி திருப்பூரில் நண்பர்கள் உதவியுடன் வாடகை வீட்டில் குடியேறினர்.

    பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பட்டதாரி இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அன்னை ஆரோக்கியராஜ் (வயது 25). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் மதுக்கூர் அருகே உள்ள மண்டலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பிரியா (22) என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்னை ஆரோக்கிய ராஜிம், பிரியாவும் உறவினர்கள். பிரியா பி.எஸ்சி படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, தனது பெற்றோரிடம் தான் அன்னை ஆரோக்கியராஜை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இதை கேட்டு திடுக்கிட்ட அவரது பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாங்கள் பார்த்தும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று உறவினர்கள் பிரியாவை மிரட்டி வந்ததாத கூறப்படுகிறது.

    இதுபற்றி சிங்கப்பூரில் உள்ள காதலன் அன்னை ஆரோக்கியராஜிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சிங்கப்பூரில் இருந்து கடந்த 4-ந் தேதி இந்தியா திரும்பினார்.

    பின்னர் ஊருக்கு வந்த அன்னை ஆரோக்கியராஜ், தனது உறவினர்களுடன் பிரியா வீட்டுக்கு சென்று முறைப்படி திருமணம் செய்து வைக்க பெண் கேட்டார். அப்போது பிரியாவின் உறவினர்கள் மறுத்து தெரிவித்து அனுப்பி விட்டனர்.

    பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரியா கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் காதலன் அன்னை ஆரோக்கியராஜை சந்தித்தார். பிறகு இருவரும் வேளாங்கண்ணி சென்றனர். அங்கு நண்பர்கள் முன்னிலையில் பிரியா கழுத்தில் அன்னை ஆரோக்கியராஜ் தாலி கட்டினார்.

    இதற்கிடையே திருமணம் நடந்து விட்டதால் பிரியாவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இன்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிரியாவின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி தஞ்சை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×