search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை
    X

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை

    கரூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே தாளியம்பட் டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கோபி (வயது 22). கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதா (19), கரூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரின் பெற்றோர்களுக்கும் அவர்களின் காதல் விவகாரம் தெரிய வரவே, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் தாங்கள் இணைந்து வாழ முடியாது என நினைத்த கோபி, கவிதா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் லாலாப்பேட்டை அருகே உள்ள சிம்மாச்சிப்பட்டியில் உள்ள கோபியின் உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்தனர்.

    இந்தநிலையில் கவிதா மற்றும் உறவினர் வெளியே சென்றிருந்த சமயத்தில் கோபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த கவிதா முன்னதாக வீட்டிற்கு வந்து பார்த்த போது கோபி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். இனிமேலும் வாழ முடியாது என்று எண்ணிய அவரும் வி‌ஷம் குடித்து காதலன் அருகேயே தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே கோபியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, லாலாப்பேட்டை போலீசிலும் புகார் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடலையும் மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×