search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள்"

    • சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன.

    அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது.

    இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர்.

    பின்னர் சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் இது போன்ற செயல்களில் பஸ் டிரைவர்கள், பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    • பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    • தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது.
    • சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது.

    தக்கலை, நவ.24-

    தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. கன மழையின் காரணமாக உதயகிரி கோட்டை பகுதி யில் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது. மேலும் மான்கள் நின்று கொண்டிருக்கும் பகுதி யிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு நின்ற மான்கள் கடும் அவதிக்கு ஆளானது. சிறுவர் பூங்காவிலும் தண்ணீர் புகுந்து சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையில் அந்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. மான்களில் நின்று கொண்டிருக்கும் பகுதியில் இருந்து தண்ணீர் மட்டும் சிறிது வடிந்துள்ளது. ஆனால் அந்த பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சிறுவர் பூங்கா மற்றும் செல்பி பாயிண்ட் பகுதியில் தண்ணீர் வடியாத நிலை யிலேயே இருந்து வருகிறது. இன்று காலையில் உதயகிரி கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    ஆனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். உதயகிரி கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே உடனடியாக உதயகிரி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மாற்ற நடவ டிக்கை எடுப்பதுடன் நிரந்தரமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண் ணம் வடிகால்களை அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • பாரபட்சம் காட்டப்படுவதாக பயணிகள் புகார்
    • 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி ெரயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரெயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 2 நடைமேடைகள், சுற்றுலா பயணிகள் வரும் ரெயில்கள் நிறுத்தி வைப்பதற்கு ஒரு நடைமேடை என்று மொத்தம் 3 புதிய நடைமேடைகள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ள புதிய இருப்பு பாதைகள் தற்போது ரெயில்கள் இயங்கும் பழைய இருப்பு பாதையுடன் இணைக்கப்பட உள்ளன. இதற்காக வேண்டி வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நாகர்கோவில்-கன்னியாகுமரி, திருநெல்வேலி-நாகர்கோவில், திருவனந்தபுரம்-நாகர்கோவில் மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இந்த பணிகள் பகல் நேரத்தில் நடக்க இருப்பதால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து பகல் நேரத்தில் இயங்கும் சில ரெயில்கள் மாற்றங்கள் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து காலை, மாலை, இரவு நேரங்களில் இயங்கும் ரெயில்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கும்.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி (எண் 06643) பயணிகள் ரெயில் 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரெயில் இரு மார்க்கங்களிலும் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும், டிசம்பர் 2 முதல் 4-ந் தேதி வரை என மொத்தம் 8 நாட்களுக்கு முழுமையாக இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. புனே-கன்னியாகுமரி (எண் 16381) ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களுர்-கன்னியாகுமரி (எண் 16526) ரெயில் 8 நாட்களுக்கு நாகர்கோவில்-கன்னியாகுமரி வரை பகுதியாக 8 நாட்களுக்கும், திருவனந்தபுரம்-கன்னியாகுமரிக்கு ஒரு நாளும் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாகவும் இவ்வாறு அதே நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-புனலூர் ரெயில் நாகர்கோவில் டவுண்- கன்னியாகுமரி இடையே 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி-கன்னியாகுமரி ரெயில் திருநெல்வேலி-– கன்னியாகுமரி இடையே 26-ம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரி ரெயில் 27-ந் தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி மார்க்கமாக ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    ஹவுரா-கன்னியாகுமரி ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 27-ந் தேதி ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி-– நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-கத்ரா ரெயில் டிசம்பர் 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ெரயில் 3-ந் தேதி ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி ரெயில் 3-ந் தேதி பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ம் தேதி கன்னியாகுமரிக்கு பதிலாக நாகர்கோவிலிருந்து புறப்படும். நிஜாமுதீன்-கன்னியாகுமரி ரெயில் வருகிற 2-ந் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-நாகர்கோவில் ரெயில் ஒரு நாள் மட்டும் 4-ந் தேதி பகுதியாக திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். கன்னியாகுமரி- புனே ரெயில் 4-ம் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக புதிய ரெயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அறிவித்து இயக்காத காரணத்தால் சாதாரண மக்கள் தங்கள் பயணங்களை குறிப்பாக சென்னைக்கு பயணம் செய்ய சுமார் 60 முதல் 100 நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து விடுகின்றனர். இவ்வாறு முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பாக ரெயில்வே துறை திடீரென ரெயில்களை பகுதியாகவோ அல்லது முழு ரெயிலும் ரத்து என அறிவிப்பு செய்வது, முன்பதிவு செய்த பயணிகளுக்கு வேண்டும் என்றே மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ரத்து செய்யப்படும் ரெயில்களில், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய 3 ரெயில்களும் திருநெல்வேலியுடன் ஒருநாள் நிறுத்தப்படுகின்றது. இந்த ரெயில்களில் குமரி மாவட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும் இங்கிருந்து தங்கள் மாநில தலைநகர் சென்னைக்கும் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

    கேரளா மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்களான கன்னியாகுமரி – புனே, கன்னியாகுமரி-பெங்களுர், கன்னியாகுமரி-திப்ருகார், புனலூர்-நாகர்கோவில் ஆகிய ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி வைத்து விட்டு தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா, தாம்பரம் - நாகர்கோவில் ஆகிய 2ரெயில்களையும் நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து செய்வதில் அதிக அளவில் ரெயில்கள் டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 4-ம் தேதி திங்கட்கிழமை ஆகும். ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலிருந்து புறப்படும் நாகர்கோவில் -ஷாலிமார் ரெயில் திருவனந்தபுரத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு ரெயில்களை பகுதியாக ரத்து செய்வதற்கு முன்பு அதிக அளவில் பயணிகள் பயணிக்கும் ெரயில்களை ரத்து செய்யாமல் மிகவும் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்யும் ரெயில்களை முதலில் ரத்து செய்துவிட்டு பின்னர் இடபற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் இந்த ரெயில்களை ரத்து செய்வது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ரத்து செய்யப்பட்ட ெரயில்கள் ஒரே ஒரு ெரயில் ஒரே ஒருநாள் மட்டும் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலியில் நிறுத்தப்படும் படியாக மூன்று ெரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பாரபட்சமானது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளை பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்து செய்யப்படும் ரெயில்களில் அதிக அளவில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயங்கும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா மற்றும் ஆன்மீகத்துக்கு என்று செல்லும் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக தனியாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து ரயில்கள் வரும் கால அட்டவணையை வைத்து கன்னியாகுமரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரயில்வே துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய ரெயில்கள் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ள நாட்களில் சென்னையிலிருந்து இந்த ரெயில்களில் திருநெல்வேலி வரும் பயணிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவதற்கு வசதியாக திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லத்தக்க வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து இன்னமும் தொடர்ந்து வர இருக்கிறது. அடுத்த மாதம் ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படும். இது முடிந்த பிறகு திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே அமைக்கப்பட்டுள்ள 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் இவ்வாறு பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது. கடைசியாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர்.
    • ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    நாகர்கோவில்:

    பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    இன்று அதிகாலையில் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ஏராளமான பயணிகள் நாகர்கோவிலுக்கு வருவதற்காக ரெயிலில் ஏறினர். அதிகாலை நேரம் என்பதால் வெளியூர்களில் இருந்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர்.

    அந்த ரெயிலின் எஸ்-1 பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒரு வரும் பயணம் செய்தனர். நெல்லை வரை மேலடுக்கு படுக்கையில் (இருவரும் ஒரே இருக்கையில் வந்தனர்) வந்த ஜோடி, சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் ஆட்கள் இல்லாத இருக்கைக்கு சென்றது.

    பின்பு இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து சில்மிஷத்தை தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல அந்த ஜோடியினர் எல்லை மீறி சென்றனர். இருவரும் மாறி மாறி முத்தமழை பொழிந்தனர். ஓடும் ரெயிலில் மாறி மாறி கட்டி அணைப்பது, முத்த மழை பொழிவது என சல்லாப்பத்தை தொடர்ந்தனர்.

    அந்த பெட்டியில் மற்ற பயணிகள் இருப்பதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் அத்துமீறல் எல்லை மீறி செல்லவே, அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் முகம் சுளித்தனர். மேலும் அந்த ஜோடியை எச்சரித்தனர்.

    ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர். இதனால் அந்த ஜோடி முகத்தை மறைந்தபடி அமர்ந்து கொண்டது. இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோதே பெங்களூரு ரெயில், நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    இதையடுத்து அந்த ஜோடி ரெயிலை விட்டு இறங்கி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது. அந்த ஜோடி நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு வரும் போது ஓடும் ரெயிலில் எல்லை மீறியதும் தெரிய வந்தது.

    ரெயில்களில் இது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது.
    • பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது . இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெளியூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்வதற்கு தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி,சிதம்பரம் ,விருத்தாச்சலம், நெய்வேலி, காட்டுமன்னானர்கோவில் உட்பட 11 பஸ் டெப்போ செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இருக்கக்கூடிய பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக 200 பஸ்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றது.

    இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ,விருத்தாச்சலம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி கிராமப்புற பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கும் கூடுதல் நேரமாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் நாளை வரை3 நாட்களுக்கு கூடுதலாக தினந்தோறும் 200 பஸ்களும் தீபாவளி முடிந்து அடுத்த2 நாட்களுக்கு இதே போல் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் கூடுதலாக இயக்கப்படும் பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம் .மேலும் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • பள்ளி மாணவர்கள், பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இரணியல், நவ.9-

    கருங்கல், திங்கள் நகர், இரணியல், தோட்டியோடு வரை உள்ள நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலை யில் இருந்து வந்தது. தற்போது மழைக்காலம் தொடங்கிய பின்னர் இந்தச் சாலைகள் மேலும் மோச மடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் பல்லாங் குழி சாலை யாக உள்ளது. இரணி யல் மேலத்தெரு, ஆமத்தான் பொத்தை, காற்றாடி மூடு ஆகிய இடங்களில் ஆங்காங்கே மரணக்குழிகள் காணப்படுகிறது.

    இந்த நிலையில் கருங்கலில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ், திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் வந்த போது, எதிரே வந்த லாரிக்கு வழி விட முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் பஸ் சரிந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அதில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் மோசமான நிலையில் உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, கருங்கல், திங்கள் நகர், இரணியல் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது.
    • தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, காரைக்கால் வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், காரைக்கால் எல்லைக்கு வந்த பொழுது, சாலையில் அங்குமிங்கும் அலைந்த வாரும், ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது. தொடர்ந்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர்.

    ஒரு சில பயணிகள் காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை 300கி.மீ தூரம் பயணம் செல்லும் பஸ் டிரைவராக நாகை டெப்போ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பதும் அவரை காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேறு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்து டிரைவர் செல்வராஜை காரைக்காலில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.

    • வட்டகோட்டைக்கு 4 ஆயிரம் பேர் உல்லாச படகு சவாரி
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.

    அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் கன்னியாகுமரி யில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னி யாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகு மரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 34 ஆயிரத்து 175 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். வாரத்தின் இறுதி விடுமுறை நாளான கடந்த 21-ந்தேதி சனிக்கிழமை அன்று 8 ஆயிரத்து 100 பேரும், 22-ந்தேதி 9 ஆயிரத்து 925 பேரும், ஆயுத பூஜை தினமான 23-ந்தேதி 10 ஆயிரத்து 100 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையை யொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 6 ஆயிரத்து 50 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    அதேபோல கடந்த 4 நாட்களாக வட்ட கோட்டைக்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். ஆயுத பூஜைதொடர் விடுமுறையையொட்டி பட்டுக்கோட்டைக்கு கடந்த 4 நாட்களாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 சொகுசு படகுகளும் இயக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
    • பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்:, அக்.18-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 தேதிகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி சென்னையிலிருந்து அக்டோபர் 20-ம் தேதி 200 சிறபபுப் பஸ்கள், 21-ம் தேதி 250 சிறப்பு பஸ்கள், 22-ம் தேதி 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போன்று ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அக்டோபர் 24-ம் தேதி 200 சிறப்பு பஸ்களும், 25-ம் தேதி 150 சிறப்பு பஸ்களும், மேலும் பயணிகளின் தேவைக்கற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது.
    • இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    2 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. உதான்-5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணியளவில் பெங்களூரில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 34 பயணிகள் வந்தனர். தொடர்ந்து இங்கிருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு செல்லும் விமான சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த விமானத்தில் சேலத்தில் இருந்து 16 பயணிகள் கொச்சின் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ஓசூர் பிரகாஷ், சேலம் கலெக்டர் கார்மேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, செல்வகணபதி, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறும்போது விமானம் கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும். இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29-ம் தேதி பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்த டத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஐதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என கூறினார்

    பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த பயணி வக்கீல் மணிகண்டன் கூறும்போது, முதல் நாள் விமானத்தில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உதான் திட்டத்தின் மூலம் விமான சேவையை சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார். மேலும் விமான சேவை மீண்டும் செயல்படுத்திய விமான நிறுவனம், எம்.பி. உள்ளிட்டவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை 2 வழித் தடத்தில் இயக்கப்படுகிறது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் தனியார் பாதுகாப்புக்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெண்கள் பயணம் செய்யக் கூடிய பெட்டியில் ஆண் பயணிகள் சமீப காலமாக ஆக்கிரமித்து பயணம் செய்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

    4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். தனியார் பாதுகாப்பு ஊழியர்களை பயணிகள் கண்டு கொள்வதில்லை.

    மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக தனியார் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று அதன் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    பெண்கள் பெட்டியில் ஆண் பயணிகள் அமர்ந்து கொண்டு செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பது, பெட்டியில் உணவு அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்ததையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழக அரசிடம் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி உள்ளது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் நேரங்களில் ஆண் பயணிகள் பெண் பயணிகள் பெட்டியில் பயணம் செய்கின்றனர். அதை தடுக்க கூடுதலாக போலீஸ் படை கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களிடமும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க கூறியுள்ளோம்.

    புறநகர் மின்சார ரெயில்களில் பாதுகாப்புபடை போலீசார் ஈடுபடுவது போல் கூடுதலாக மாநில போலீஸ் படை வழங்கினால் இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தற்போது பெட்டி மாறி பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் எதுவும் விதிப்பது இல்லை. பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்யக் கூடாது என தொடர்ச்சியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் ரூ.250 அபராதம் கடந்த மாதம் முதல் விதிக்கப்படுகிறது. அது போல சென்னை மெட்ரோ ரெயில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று பெண் பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

    ×