search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரோ ரெயில் மகளிர் பெட்டியை ஆக்கிரமிக்கும் ஆண் பயணிகள்: பாதுகாப்புக்கு போலீசாரை ஈடுபடுத்த முடிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மெட்ரோ ரெயில் மகளிர் பெட்டியை ஆக்கிரமிக்கும் ஆண் பயணிகள்: பாதுகாப்புக்கு போலீசாரை ஈடுபடுத்த முடிவு

    • 4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை 2 வழித் தடத்தில் இயக்கப்படுகிறது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் தனியார் பாதுகாப்புக்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெண்கள் பயணம் செய்யக் கூடிய பெட்டியில் ஆண் பயணிகள் சமீப காலமாக ஆக்கிரமித்து பயணம் செய்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

    4 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரெயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவு மெட்ரோ ரெயிலில் இல்லாததால் ஆண்கள் அத்துமீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். தனியார் பாதுகாப்பு ஊழியர்களை பயணிகள் கண்டு கொள்வதில்லை.

    மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக தனியார் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று அதன் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    பெண்கள் பெட்டியில் ஆண் பயணிகள் அமர்ந்து கொண்டு செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பது, பெட்டியில் உணவு அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்ததையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழக அரசிடம் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி உள்ளது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் நேரங்களில் ஆண் பயணிகள் பெண் பயணிகள் பெட்டியில் பயணம் செய்கின்றனர். அதை தடுக்க கூடுதலாக போலீஸ் படை கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களிடமும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க கூறியுள்ளோம்.

    புறநகர் மின்சார ரெயில்களில் பாதுகாப்புபடை போலீசார் ஈடுபடுவது போல் கூடுதலாக மாநில போலீஸ் படை வழங்கினால் இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தற்போது பெட்டி மாறி பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் எதுவும் விதிப்பது இல்லை. பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்யக் கூடாது என தொடர்ச்சியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் ரூ.250 அபராதம் கடந்த மாதம் முதல் விதிக்கப்படுகிறது. அது போல சென்னை மெட்ரோ ரெயில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று பெண் பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

    Next Story
    ×