search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரத்து செய்யப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
    X

    கன்னியாகுமரி நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரத்து செய்யப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

    • பாரபட்சம் காட்டப்படுவதாக பயணிகள் புகார்
    • 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி ெரயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரெயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 2 நடைமேடைகள், சுற்றுலா பயணிகள் வரும் ரெயில்கள் நிறுத்தி வைப்பதற்கு ஒரு நடைமேடை என்று மொத்தம் 3 புதிய நடைமேடைகள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ள புதிய இருப்பு பாதைகள் தற்போது ரெயில்கள் இயங்கும் பழைய இருப்பு பாதையுடன் இணைக்கப்பட உள்ளன. இதற்காக வேண்டி வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நாகர்கோவில்-கன்னியாகுமரி, திருநெல்வேலி-நாகர்கோவில், திருவனந்தபுரம்-நாகர்கோவில் மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இந்த பணிகள் பகல் நேரத்தில் நடக்க இருப்பதால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து பகல் நேரத்தில் இயங்கும் சில ரெயில்கள் மாற்றங்கள் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து காலை, மாலை, இரவு நேரங்களில் இயங்கும் ரெயில்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கும்.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி (எண் 06643) பயணிகள் ரெயில் 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரெயில் இரு மார்க்கங்களிலும் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும், டிசம்பர் 2 முதல் 4-ந் தேதி வரை என மொத்தம் 8 நாட்களுக்கு முழுமையாக இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. புனே-கன்னியாகுமரி (எண் 16381) ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களுர்-கன்னியாகுமரி (எண் 16526) ரெயில் 8 நாட்களுக்கு நாகர்கோவில்-கன்னியாகுமரி வரை பகுதியாக 8 நாட்களுக்கும், திருவனந்தபுரம்-கன்னியாகுமரிக்கு ஒரு நாளும் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாகவும் இவ்வாறு அதே நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-புனலூர் ரெயில் நாகர்கோவில் டவுண்- கன்னியாகுமரி இடையே 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி-கன்னியாகுமரி ரெயில் திருநெல்வேலி-– கன்னியாகுமரி இடையே 26-ம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரி ரெயில் 27-ந் தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி மார்க்கமாக ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    ஹவுரா-கன்னியாகுமரி ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 27-ந் தேதி ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி-– நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-கத்ரா ரெயில் டிசம்பர் 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ெரயில் 3-ந் தேதி ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி ரெயில் 3-ந் தேதி பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ம் தேதி கன்னியாகுமரிக்கு பதிலாக நாகர்கோவிலிருந்து புறப்படும். நிஜாமுதீன்-கன்னியாகுமரி ரெயில் வருகிற 2-ந் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-நாகர்கோவில் ரெயில் ஒரு நாள் மட்டும் 4-ந் தேதி பகுதியாக திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். கன்னியாகுமரி- புனே ரெயில் 4-ம் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக புதிய ரெயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அறிவித்து இயக்காத காரணத்தால் சாதாரண மக்கள் தங்கள் பயணங்களை குறிப்பாக சென்னைக்கு பயணம் செய்ய சுமார் 60 முதல் 100 நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து விடுகின்றனர். இவ்வாறு முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பாக ரெயில்வே துறை திடீரென ரெயில்களை பகுதியாகவோ அல்லது முழு ரெயிலும் ரத்து என அறிவிப்பு செய்வது, முன்பதிவு செய்த பயணிகளுக்கு வேண்டும் என்றே மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ரத்து செய்யப்படும் ரெயில்களில், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய 3 ரெயில்களும் திருநெல்வேலியுடன் ஒருநாள் நிறுத்தப்படுகின்றது. இந்த ரெயில்களில் குமரி மாவட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும் இங்கிருந்து தங்கள் மாநில தலைநகர் சென்னைக்கும் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

    கேரளா மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்களான கன்னியாகுமரி – புனே, கன்னியாகுமரி-பெங்களுர், கன்னியாகுமரி-திப்ருகார், புனலூர்-நாகர்கோவில் ஆகிய ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி வைத்து விட்டு தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா, தாம்பரம் - நாகர்கோவில் ஆகிய 2ரெயில்களையும் நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து செய்வதில் அதிக அளவில் ரெயில்கள் டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 4-ம் தேதி திங்கட்கிழமை ஆகும். ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலிருந்து புறப்படும் நாகர்கோவில் -ஷாலிமார் ரெயில் திருவனந்தபுரத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு ரெயில்களை பகுதியாக ரத்து செய்வதற்கு முன்பு அதிக அளவில் பயணிகள் பயணிக்கும் ெரயில்களை ரத்து செய்யாமல் மிகவும் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்யும் ரெயில்களை முதலில் ரத்து செய்துவிட்டு பின்னர் இடபற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் இந்த ரெயில்களை ரத்து செய்வது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ரத்து செய்யப்பட்ட ெரயில்கள் ஒரே ஒரு ெரயில் ஒரே ஒருநாள் மட்டும் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலியில் நிறுத்தப்படும் படியாக மூன்று ெரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பாரபட்சமானது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளை பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்து செய்யப்படும் ரெயில்களில் அதிக அளவில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயங்கும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா மற்றும் ஆன்மீகத்துக்கு என்று செல்லும் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக தனியாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து ரயில்கள் வரும் கால அட்டவணையை வைத்து கன்னியாகுமரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரயில்வே துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய ரெயில்கள் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ள நாட்களில் சென்னையிலிருந்து இந்த ரெயில்களில் திருநெல்வேலி வரும் பயணிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவதற்கு வசதியாக திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லத்தக்க வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து இன்னமும் தொடர்ந்து வர இருக்கிறது. அடுத்த மாதம் ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படும். இது முடிந்த பிறகு திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே அமைக்கப்பட்டுள்ள 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் இவ்வாறு பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது. கடைசியாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×