search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பஸ்"

    • பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடியது.
    • பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் ஷேக் கவுஸ் பாஷா பஸ்சிலிருந்து கீழே குதித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூருக்கு இன்று காலை வந்தது. திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பை கடந்து 5 முனை சந்திப்பு சாலை அருகே வந்தபோது பஸ்சில் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி அந்த பகுதியில் இருந்த ஒரு செல்போன் கடையில் மோதியது. இதனால் கடையின் முன்பக்கம் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் பாஷா (வயது 60) என்பவர் பஸ்சிலிருந்து கீழே குதித்தார். செல்போன் கடையில் வேகமாக மோதிய பஸ் பின்னால் வந்ததுபோது ஷேக் பாஷா மீது மோதி கீழே விழுந்தார். இதில் சாலையில் கிடந்த கல் மீது விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சேக் பாஷா இறந்தார். பஸ்மோதி நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது.

    அதன் பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்றும் மோதியது. ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டி, சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் இறந்த ஷேக் கவுஸ் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் ஆட்டோ மற்றும் தனியார் பஸ் மோதி விபத்து நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது.

    கோவை:

    சில பல வருடங்களுக்கு முன்பு வரை கடைகள், ஓட்டல்கள், பெரிய அங்காடிகள் ஆகியவற்றிற்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் கைகளில் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.

    வங்கி கணக்கு வைத்திருக்கும் பலரும், வங்கிகளுக்கு சென்றே பணம் எடுப்பதும், பணம் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நாகரீகம் வளர, வளர அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வங்கிகளில் பணம் போடுவது மற்றும் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றை செய்து விடுகின்றனர்.

    அதுபோன்று தற்போது ஓட்டல்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கையில் பணத்தை எடுத்து செல்வது கிடையாது.

    கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணத்தை செலுத்தி வருகின்றனர். அனைத்து கடைகளிலும் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்காரர்களுக்கு சில்லரை மீதி கொடுப்பது போன்ற பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளன.

    இதுவரை கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பஸ் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்து அதிகம் நிறைந்த கோவை மாநகரில் அரசு பஸ்சுக்கு நிகராக எண்ணற்ற தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலரிடம் சில்லறை இருக்காது. அப்படி கொடுப்பவர்களுக்கு, சில கண்டக்டர்கள் மீதி சில்லறையை கொடுத்து விடுவார்கள். சிலர் சரியான சில்லறை எடுத்து வர வேண்டியதானே என கடிந்து கொள்வதும் உண்டு. கடிந்து கொண்டாலும் சில்லறையை கொடுத்து விடுவார்கள்.

    இதனால் அனைத்து பஸ்களிலும் சில்லறை பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருக்கும். இதன் காரணமாக பல நேரங்களில் பெரிய அளவிலான தகராறுகள் கூட ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

    அதற்கு எல்லாம் ஒரு தீர்வு காணும் விதமாக கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பஸ்களை இயக்கி வருகிறது.

    இந்த 5 பஸ்களிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.

    3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பஸ்களில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.

    இதுகுறித்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளரான கார்த்திக் பாபு கூறியதாவது:-

    பஸ்களில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பஸ்களிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

    உடனே ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பஸ்களிலும் ஒட்டினோம்.

    இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பஸ்சில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கு என அவருக்கு ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது.

    மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் முதல் முறையாக தனியார் டவுன் பஸ்சில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பயணிகள், இதுபோன்ற மற்ற பஸ்களிலும் செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி பயணி பலியானார்.
    • தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே 42 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்ேபாது அந்த வழியாக வந்த தனியார் பஸ் கவனக்குறைவாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தர். உடனே அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் பஸ் மோதி இறந்தவர் டேனியல் ஜேசுதாஸ்(47) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது. இதையடுத்து திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார். மேலும், அதில் வந்த பயணிகள் வேறு பஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

    • முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.
    • புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம் , சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    கடலூர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்கத்திற்க்கு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. இதனால் புதுவையில் இருந்து கடலூருக்கு பஸ்கள் இயக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன்படி புதுவை பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள் புதுவை-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.

    ஆட்டோவில் செல்ல முடியாதவர்கள் நடந்தே கடலூருக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது.

    மேலும் புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    • 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.
    • உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

    8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் மேலும் 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான பஸ்களை இயக்கவும் அதற்கான செலவை ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

    "உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 பஸ்களும் 2025-ம் ஆண்டில் 500 பஸ்களும் தனியார் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

    'கிராஸ் காஸ்ட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஸ்களை தனியார் வழங்கவும், டிரைவர், கண்டக்டர் மற்றும் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    சென்னையில் பஸ்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யவும் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் வழி வகுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் ஆலோசனை குழு அமைக்க டெண்டர் விடப்படுகிறது. இக்குழு இத்திட்டத்தில் உள்ள சாதக-பாதகங்களை ஆய்வு செய்து போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு தான் எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது தெளிவாக தெரியவரும் என்றனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்குவரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்நிலை தமிழகத்தில் வேண்டாம் என்றார்.

    • அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு தினமும் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பஸ்களும் பெரும் அளவில் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கால அட்டவணையை பின்பற்றா மல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவதாக தனியார் பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் வழக்கம்போல் சென்னிமலை பஸ் நிலை யத்துக்கு வந்தது. அந்த பஸ் கண்டக்டர் அங்கு பயணி களை ஏற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அதே நேர த்தில் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.

    இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தனியார் பஸ்சை வழிமறித்து ஏன் முன் கூட்டியே செல்கிறீர்கள் என டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ் டிரைவரிடம் நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் காலை, மாலையில் முன்கூட்டியே செல்கிறீர்கள் என்றும், உங்கள் பஸ்சின் கால அட்டவணையை கொடுங்கள் என்றும் கேட்டனர்.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 2 பஸ்களும் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    இதுபோன்ற நேர பிரச்சனை காரணமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் அடிக்கடி அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரின் பக்கவாட்டில் மோதியது.
    • பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோப் கட்டி பஸ்சை பின்னோக்கி கொண்டு வந்தனர்.

    மங்கலம் :

    சோமனூர் பகுதியில் இருந்து திருப்பூர் வரை மங்கலம் வழியாக தனியார்பஸ் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று சோமனூரில் இருந்து மங்கலம் நோக்கி தனியார்பஸ் வந்துகொண்டிருந்தது.பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    மாலை 6:30 மணியளவில் தனியார்பஸ் பரமசிவம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரின் பக்கவாட்டில் மோதியது.இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது பற்றி தகவல் அறிந்து மங்கலம் போலீசார்,மின்வாரிய அதிகாரிகள்,சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி,பள்ளபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோப் கட்டி பஸ்சை பின்னோக்கி கொண்டு வந்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.  

    • ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
    • நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்றவர்கள் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சென்னை திரும்புகிறார்கள்.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 5 லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

    கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது தவிர சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், ரெயில் நிலையங்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பயணம் செய்தனர். மேலும் ஆம்னி பஸ்களிலும் கடைசி நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தி பலர் பயணம் செய்தனர்.

    இந்த நிலையில் பண்டிகை விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் 1-ந் தேதி புத்தாண்டு முடித்து விட்டு பலர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்கள்.

    அனைத்து ரெயில்களிலும், எல்லா வகுப்பு பெட்டிகளும் நிரம்பிவிட்ட நிலையில் சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை. அதனால் மக்கள் கூடுதல் பஸ் சேவைக்காக காத்து உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30, 31-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடஏற்பாடு செய்யப்படுகிறது.

    மேலும் ஆம்னி பஸ்களில் அந்த தேதியில் பயணம் செய்ய இடங்கள் நிரம்பி வருகின்றன. ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை, திருப்பூர் நகரங் களில் இருந்து சென்னைக்கு சங்கம் நிர்ணயித்த கட்ட ணத்தை விட அதிகமாக கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.

    மதுரை, கோவையில் இருந்து ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.2581 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.3500 வரை வசூலிக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே நிர்ணயித்து இயக்குகிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பது முறையற்ற செயல். தேவையை அறிந்து அதற்கேற்ப பல மடங்கு கட்டணம் உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும்.

    இதே போல பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ. 2700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை விட கூடுதலாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கின்றனர்.

    • சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் . தனியார் பஸ் டிரைவர்.
    • முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). தனியார் பஸ் டிரைவர்.

    தகராறு

    இவர் நேற்று இரவு பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு தனியார் பஸ் டிரைவரான சேரன்மகா தேவி பட்டன்காடு பகுதியை சேர்ந்த முத்துவேல்(34) மற்றும் அதே பஸ் கண்டக்டரான மேலசெவலை சேர்ந்த முத்துமாரியப்பன்(34) ஆகியோருக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி யதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த பாளை சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    • இரு மாணவி–களையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.
    • இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள் நேற்று மாலை திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் ஏறி வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் செல்ல பயணச்சீட்டு கேட்டுள்ளனர்.

    அப்போது கண்டக்டர் இளநகரில் பஸ் நிற்காது என கூறி அந்த இரு மாணவிகளையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து அந்த மாணவிகள் இளநகரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இனி இளநகரில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
    • வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சம்பவத்தன்று தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது‌. அப்போது கடலூர் அடுத்த பெத்த நாயக்கன் குப்பம் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு நபர்கள் பஸ்சை வழிமறித்து சரமாரியாக கல் வீசி தாக்கியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி கத்தினர். இதனைத் தொடர்ந்து 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் டிரைவர் ராஜவன்னியன், நடத்துனர் பாலமுருகன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 2 நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×