search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தறிகெட்டு ஓடிய தனியார் பஸ்சில் இருந்து  குதித்த முதியவர் சாவு:15 பேர் படுகாயம்
    X

    விபத்தில் சேதமான தனியார் மொபைல் கடை

    தறிகெட்டு ஓடிய தனியார் பஸ்சில் இருந்து குதித்த முதியவர் சாவு:15 பேர் படுகாயம்

    • பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடியது.
    • பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் ஷேக் கவுஸ் பாஷா பஸ்சிலிருந்து கீழே குதித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூருக்கு இன்று காலை வந்தது. திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பை கடந்து 5 முனை சந்திப்பு சாலை அருகே வந்தபோது பஸ்சில் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி அந்த பகுதியில் இருந்த ஒரு செல்போன் கடையில் மோதியது. இதனால் கடையின் முன்பக்கம் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் பாஷா (வயது 60) என்பவர் பஸ்சிலிருந்து கீழே குதித்தார். செல்போன் கடையில் வேகமாக மோதிய பஸ் பின்னால் வந்ததுபோது ஷேக் பாஷா மீது மோதி கீழே விழுந்தார். இதில் சாலையில் கிடந்த கல் மீது விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சேக் பாஷா இறந்தார். பஸ்மோதி நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது.

    அதன் பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்றும் மோதியது. ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டி, சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் இறந்த ஷேக் கவுஸ் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் ஆட்டோ மற்றும் தனியார் பஸ் மோதி விபத்து நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×