search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"

    • விஜய் வசந்த் எம்.பி.,மேயர் மகேஷ் பங்கேற்பு
    • 18 மாதங்களில் ரூ.134 கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    சுதந்திர தினத்தை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை மேயர் மகேஷ் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றை மேயர் மகேஷ் நட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- நாகர்கோ வில் மாநகராட்சி அலுவலகம் ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். சுதந்திரத்தை பெறுவதற்காக பல தியாகங்கள் இன்னுயிர் நீத்துள்ளார்கள்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த தியாகிகளும் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அந்த சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி ஆக விளங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 18 மாதங்களில் ரூ.134 கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம் பேணி பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெட்டூர்ணி மடத்தில் உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய் வசந்த் எம்.பி. கொடி ஏற்றி வைத்தார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோவில்கள் அலுவலகத்தில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் துளசிதரன், ராஜேஷ், சுந்தரி மற்றும் அதிகாரிகள் கலந்து

    கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    • தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு நல்ஆளுமை விருது வழங்கப்பட்டது.
    • சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது-கன்னியாகுமரி மாவட்டம் சாந்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

    தமிழ்நாட்டுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியதற்காக 2023-ம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கி.வீரமணிக்கு வழங்கினார்.

    வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் டபிள்யூ. பி.வசந்தா கந்தசாமிக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி துறையில் அவரது சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நா.முத்தமிழ்செல்விக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

    விருது பெற்ற முத்தமிழ்செல்வி ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். இவர் நேபாளத்தில் அமைந்துள்ள லொபுட்சே சிகரத்தை ஏறியுள்ளார். மேலும் இமாச்சலபிரதேசம் லடாக்கில் உள்ள "கங்கியாட்சே" மலையில் ஏறியுள்ளார். அத்துடன் 26.1.2022 அன்று வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூறும் விதமாக சென்னை வண்டலூர், மண்ணிவாக்கம் அரசு பள்ளி மைதானத்தில் வேலு நாச்சியார் அவதாரமேற்று, குதிரை மீது அமர்ந்து சுமார் 3 மணி நேரம் 1,389 அம்புகள் எய்து 87 சதவீத புள்ளிகள் பெற்று சாதனை செய்துள்ளார்.

    முத்தமிழ்செல்வி இமாச்சலபிரதேசம், குலாங்க் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் இருந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் வகையிலும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் 2-வது மகள் வித்திஷா (வயது9)வை தன் முதுகில் கட்டிக் கொண்டு, மூத்த மகள் தக்ஷாவை (வயது13) உடன் அழைத்துக் கொண்டு கண்களை கட்டிக் கொண்டு 165 அடி உயரத்தில் இருந்து 55 வினாடிகளில் இறங்கி சாதனை செய்துள்ளார்.

    மேலும் இவர் மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்கப்படுத்தவும் பெண்கள் சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்த தவறும் ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 155 அடி உயர மலைப்பட்டு மலையின் உச்சியில் இருந்து 58 வினாடிகளில் கண்களை கட்டிக்கொண்டு இறங்கி சாதனை செய்துள்ளார்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு நல்ஆளுமை விருது வழங்கப்பட்டது.

    ஆதரவற்ற நோயாளிகளுக்கான உரிய சிகிச்சை மேற்கொண்ட சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்ததற்காக சென்னை டாக்டர் செல்வ குமாருக்கு சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டது.

    சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது-கன்னியாகுமரி மாவட்டம் சாந்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது கோவை மாவட்டம் மயிலேரிபாளையம் உதவும் கரங்கள் நிறுவனத்தை சேர்ந்த ரத்தன் வித்யாகருக்கு வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்ததற்காக மதுரையை சேர்ந்த டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சிறந்த தனியார் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி அளிப்பதில் முன்னணியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேவையினை பாராட்டி சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது வழங்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கு மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த கிராமத்தின் ஒளி என்ற நிறுவனத்தின் சமூக சேவையை பாராட்டி சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது.

    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

    ஆண்கள் பிரிவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கோ.கோபி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ராஜ சேகர் (சாகச விளையாட்டு) மற்றும் பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சந்திரலேகா, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கவிதா தாந்தோணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க சிறப்பாக பணியாற்றிய தெற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றிய அஸ்ராகார்க் (வடசென்னை கூடுதல் கமிஷனர்) கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஆகியோருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு டோங்கரே பிரவின் உமேஷ், கோவை மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் குணசேகரன், நாமக்கல் மாவட்ட போலீஸ் உதவி ஆய்வாளர் முருகன், புதுச்சத்திரம் போலீஸ் ஏட்டு குமார் ஆகியோருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

    • நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது.
    • ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் பாத யாத்திரை என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பஸ் யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறார்.

    நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது. ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது. அண்ணாமலையின் கனவு புலியை நினைத்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கும்.

    அண்ணாமலை பாத யாத்திரையை நிறைவு செய்யும்போது அவர் பதவியில் இருக்க மாட்டார்.

    பதவியில் இருக்கிறாரோ இல்லையோ கர்நாடக மாநிலத்தில் அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய போது செய்த ஊழல்களுக்காக கைது செய்யப்படுவது உறுதி.

    இவ்வாறு இளங்கோவன் பரபரப்பாக பேசினார்.

    • யாத்திரை முன்னேறி சென்றபோது மக்கள் அதிகளவில் இணைந்தனர்.
    • வலி தொடர்ந்து இருந்தாலும் அது எனக்கு முன்னோக்கி செல்ல புதிய ஊக்கத்தை கொடுத்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, சுதந்திர தினத்தையொட்டி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் தனது இந்திய ஒற்றுமை யாத்திரை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு நான் 145 நாட்கள் யாத்திரை மேற்கொண்டேன். கடலின் ஓரத்தில் தொடங்கி வெப்பம், தூசி, மழை வழியாக நடந்தேன். காடுகள், நகரங்கள் மற்றும் மலைகள் வழியாக மென்மையான பனி விழும் காஷ்மீரை அடைந்தேன்.

    யாத்திரையில் சில நாட்கள் வலி வந்துவிட்டது. என் பழைய முழங்கால் காயம் காரணமாக அந்த வலி ஏற்பட்டது. சில நாட்கள் நடைபயணத்தில் என் பிசியோதெரபியும் எங்களுடன் சேர்ந்து அறிவுரை வழங்கினார்.

    ஆனால் வலி அப்படியே இருந்தது. ஒவ்வொரு முறை யாத்திரையை நிறுத்துவதை பற்றியும், விட்டுக் கொடுக்க நினைக்கும்போதும் யாரோ ஒருவர் வந்து, இந்த யாத்திரை தொடர எனக்கு ஆற்றலை பரிசளித்தார்.

    யாத்திரை முன்னேறி சென்றபோது மக்கள் அதிகளவில் இணைந்தனர். வலி தொடர்ந்து இருந்தாலும் அது எனக்கு முன்னோக்கி செல்ல புதிய ஊக்கத்தை கொடுத்தது. அவர்களை நான் கவனிக்கவும், அவர்கள் கூறுவதை கேட்கவும் தொடங்கினேன்.

    என் அன்பின் பொருளை திடீரென்று தன்னை வெளிப்படுத்தியது, என் அன்பிற்குரிய பாரத மாதா ஒரு நிலம் அல்ல. ஒரு எண்ணங்களின் தொகுப்பு அல்ல. அது ஒரு குறிப்பிட்ட கலாசாரம், வரலாறு அல்லது மதம் அல்ல. அது ஒரு சாதியும் அல்ல. எவ்வளவு பலவீனமானாலும் சரி, வலிமையானாலும், ஒவ்வொரு இந்தியனின் குரலாக இந்தியா இருந்தது. எல்லா குரல்களிலும் ஆழமாக மறைந்திருந்த மகிழ்ச்சியும், பயமும், வேதனையும் இந்தியாவாகவே இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் சாதனைகளை அடுத்த வருடம் இதே இடத்தில் பட்டியலிடுவேன்- மோடி
    • மோடி அவர் வீட்டில்தான் கொடியேற்றுவார்- கார்கே கிண்டல்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    அதன்பின் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, ''என்னுடைய 2-வது பிரதமர் பதவி காலத்தில் 10-வது முறையாக உரையாற்றியுள்ளேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை, அடுத்த வருடமும் இதே இடத்தில் மக்களிடம் பட்டியலிடுவேன்'' எனத் தெரிவித்தார்.

    இதன்மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை அடுத்த வருடம் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வருடம் அவரது வீட்டில் கொடியேற்றுவார்'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ''மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவது கடைசி இதுதான் முறை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ''சுதந்திரம் வாங்கி 75 வருடங்கள் ஆன நிலையில், இந்தியாவில் வளர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், விரும்பிய இலக்கை இன்னும் எட்டவில்லை'' என்றார்.

    26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி மோடியை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளது.

    • பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும்.
    • புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரியகாலாப்பட்டில் ரூ.20 கோடியிலும், நல்லவாடில் ரூ.19 கோடியிலும் மீன் இறங்கு தளம் அமைக்கவும், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை ரூ.54 கோடியில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும்.

    தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் சட்டசபை வளாகம், காலாப்பட்டில் ரூ.483 கோடியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது. பாண்டி மெரினா கடற்கரையில் ரூ.14½ கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல ரூ.12½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மழை காலத்திற்கு முன்பாக அனைத்து வாய்க்கால்களும் 190 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.4½ கோடியில் தூர்வாரப்படும்.

    பிள்ளையார்குப்பம் படுகை அணை ரூ.20 கோடியிலும், பாகூர் ஏரிக்கரையில் ரூ.8 கோடியில் ஒருவழிப் பாலம், கொம்பந்தான்மேடு அணைக்கட்டு ரூ.13 கோடியில் கரைகளை செம்மைப்படுத்துதல், குடுவையாற்றில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டுவது உள்ளிட்ட நீர் நிலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடல் கட்டுமான பணி முடிவடைந்து இந்த ஆண்டே திறக்கப்படும். சின்னையாபுரத்தில் ரூ.23 கோடியில் 220 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். ரூ.23 கோடியில் மின்சார பஸ்கள் வாங்கப்பட்டு இந்த நிதியாண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடிக்கு அருகில் ரூ.15 கோடியில் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்டு கட்டப்படும். தாவரவியல் பூங்கா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.5½ கோடியில் நகர காட்டுப் பகுதி பசுமை பூங்காவாக மேம்படுத்தப்படும். வ.உ.சி., கலவை கல்லூரி, பான்சியானா பள்ளிகள் பழமை மாறாமல் மீண்டும் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

    பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும். புதுவை நகர பகுதியில் ஒட்டுமொத்த பாதாள சாக்கடை திட்டமும் ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும். புதுவையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுவதால் கடந்த காலங்களைவிட குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

    சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுலா தலங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் படிப்படியாக செயல்படுத்துவோம்.

    புதுவையை முன்னேறிய மாநிலமாக மாற்ற எங்கள் அரசின் செயல்பாட்டிற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு, ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் எனக்கேட்டு அனைவருக்கும் உளம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • திறன் மிகுந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதும், அதற்கேற்ற பணி வாய்ப்புகளை அவர்கள் பெறுவதும்தான் எனக்கு முழுமையான மகிழ்ச்சியை தரும்.

    சென்னை:

    சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நாம் அனைவரும் இன்று விடுதலைக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக அமைந்த வீரத் தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தைச் சொல்லுவோம். அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குவோம்.

    இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய பெருமக்கள் அனைவரும் விடுதலை பெற்ற இந்திய நாடு எப்படி இருக்க வேண்டும்? இது யாருக்கான இந்தியாவாக அமைய வேண்டும் என்பதைக் கனவு கண்டார்கள்.

    அனைவரும் விரும்பியது சமத்துவ-சகோதரத்துவ-சமதர்ம இந்தியா. இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும் அத்தகைய ஒரு அரசைத்தான் நாங்கள் தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். சமூக நீதி-சமத்துவம்-சுயமரியாதை-மொழிப்பற்று-இனஉரிமை-மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் நமது ஆட்சியும் அமைந்துள்ளது.

    காலம் காலமாக குடும்ப பாரத்தை சுமக்கின்ற பெண்கள், தங்கள் உழைப்பிற்கு எந்த மதிப்பும் இன்றி இதுதான் தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று எண்ணியிருந்த நிலையை மாற்றிடும் வகையிலும் ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை உணர்ந்து கொள்ளும் வகையிலும், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத மகத்தானத் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

    ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் மாதந்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று தொடங்கப்பட இருக்கிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

    'விடியல் தரப் போகிறோம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். விடியல் வந்துவிட்டது என்பதன் அடையாளமாக மகளிருக்குக் கட்டணமில்லை என்பதை அறிவித்தாக வேண்டும் என்று நான் சொன்னேன்.

    பல்வேறு தரப்பு மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்து உள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 850-ரூபாய்க்கும் மேல் சேமிக்க முடிகிறது.

    இதே போன்ற ஒரு மகத்தான திட்டம்தான் பள்ளி மாணவர்களுக்கு தரப்படும் காலை உணவுத் திட்டம்.

    திராவிட மாடல் அரசு பிள்ளைகளுக்குத் தாயாக, தாய்மார்களுக்குப் பிள்ளையாக இருந்து செயலாற்றுகிற அரசு. அதனால்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு என்கிற வரலாறு தொடரட்டும் என்றேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. எதிர்கால சிற்பிகளாம் மாணவர்களின் உடல்நலனும் உள்ள வலிமையும் காத்திடும் வகையில் விரிவாக்கப்படும் காலை உணவு திட்டத்தை நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி எனப் போற்றக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் பயின்ற திருக்குவளைப் பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறேன். இதற்கென இந்த நிதியாண்டில் 404 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் குறித்த மாநிலம் முழுவதுக்குமான புள்ளி விவரத்தைக் கேட்டேன்.

    எனக்குக் கிடைத்த புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் வலிமை இருந்தால்தான் உள்ள வலிமையும் இருக்கும். சிறப்பான எதிர்காலமும் இருக்கும். சிறப்பான எதிர்காலமும் அமையும். எனவே ஊட்டச்சத்து வழங்க ஒரு திட்டத்தை உருவாக்கச் சொன்னேன்.

    இந்தத் திட்டத்தின் கீழ் பிறவியிலேயே குறைபாடுகள் கொண்ட 3 ஆயிரத்து 38 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.

    இதுபோலவே, ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய் மார்களுக்கு என சிறப்பு கூடுதல் சத்துணவு அளிக்கப்பட்டதால், சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.

    இந்தத் திட்டம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து இளம் தாய்மார்களுக்கு இடையே நல்லதொரு தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

    அடுத்து என்னுடைய கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களாகிய நீங்கள் தான் என்னை முதலமைச்சர் ஆக்கினீர்கள். நான் முதலமைச்சராக இருந்தாலும், என்னை முதலமைச்சராக்கிய உங்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் உள்ள பிள்ளைகள் தங்கள் திறனை மேம்படுத்தி, நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய வகையிலே சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

    இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டு அதில் மூன்றரை லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பல்வேறு பணிகளில் அரசின் உதவியுடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். திறன் மிகுந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதும், அதற்கேற்ற பணி வாய்ப்புகளை அவர்கள் பெறுவதும்தான் எனக்கு முழுமையான மகிழ்ச்சியை தரும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • செங்கோட்டையில் பிரதமர் மோடியின் 10-வது உரை இதுவாகும்
    • மீண்டும் பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

    அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை டெல்லி செங்கோட்டையில் இருந்து பட்டியலிடுவேன் எனக் கூறினார்.

    பிரதமர் மோடியின் 10 ஆண்டு பிரதமர் பதவி அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இது அவரது 10-வது சுதந்திர தின உரையாகும். அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே செங்கோட்டையில் கொடியேற்ற முடியும்.

    அந்த வகையில்தான் மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் என்பதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது ''மாற்றத்திற்கான உறுதி, என்னுடைய செயல்பாடு மீண்டும் ஒருமுறை என்னை இங்கே கொண்டு வந்துள்ளது. வரவிருக்கும் ஐந்தாண்டுகள் முன்எப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் 2047-க்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவை நனவாக்கும் பொன்னான தருணமாக இருக்கும். அடுத்த வருடம், ஆகஸ்ட் 15-ந்தேதி இதே செங்கோட்டையில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி சாதனைகளை பட்டியலிடுவேன்'' என்றார்.

    இந்திய மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதேவேளையில் 50 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது.

    • ஓலா, ஊபர், ஸ்விகி, சொமட்டோ பணியாளர்களுக்கு நல வாரியம்.
    • எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் ஆட்சியை நமது அரசு வழங்கி வருகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.

    சுதந்திர தின கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 8.48 மணிக்கு போலீசாரின் மோட்டார்சைக்கிள் புடைசூழ கோட்டை கொத்தளத்திற்கு வந்தார்.

    அவரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன் பிறகு போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆகியோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் ஏறி போலீசாரின் அணி வகுப்பை பார்வையிட்டார்.

    கோட்டை கொத்தளம் அருகே சென்றதும் ஜீப்பில் இருந்து இறங்கி கொத்தளத்திற்குள் படிகள் ஏறி விழா நடைபெறும் இடத்துக்கு சென்றார்.

    சரியாக 9 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.

    காவல் துறையினரின் கூட்டு குழல் இசைக்கப்பட்டது. அப்போது சுதந்திர தின விழாவை காண வந்த அனைவரும் எழுந்து நின்று தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்னொரு முன்னெடுப்பை இந்த விடுதலை நாளில் அறிவிக்கிறேன். தாய்நாட்டிற்காகத் தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, சொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.

    நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன்.

    ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    அதுமட்டுமல்ல, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

    திட்டங்கள் இல்லாத நாளே இல்லை என சொல்லக்கூடிய வகையில், அரசு அறிவிக்கும் திட்டங்களை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கின்ற பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் அரசு ஊழியர்கள்.

    ஆட்சி சக்கரம் சுழல்வதற்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள். அந்த சக்கரம் வேகமாக சுழல்வதும், மெதுவாக சுழல்வதும் அரசு ஊழியர்களின் கைகளில் தான் உள்ளது. அந்தக் கைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வேகம் அதிகமாகும் என்பதை எப்போதும் உணர்ந்திருப்பது திராவிட மாடல் அரசு.

    எனவே, நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்குமான அரசு என்பதன் அடையாளமாக இதுபோன்ற திட்டங்களைச் சிந்தித்து சிந்தித்து செயல்படுத்தி வருகிறோம்.

    எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் ஆட்சியை நமது அரசு வழங்கி வருகிறது.

    கூட்டாட்சி இந்தியாவில் இணைந்திருக்கும் மாநிலங்கள் சுயாட்சி உரிமை கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள். மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

    அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வுமுறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும்.

    கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது.

    எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சிமுறை இந்தியா முழுமைக்குப் பரவுமானால், அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது.

    மாநிலங்கள் ஒன்றிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம்-மொழி-மதம்-பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர வேண்டும்.

    சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம்-சமதர்மம்-மதச்சார்பின்மை-ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பது தான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

    ஒற்றுமையால் கிடைத்த விடுதலை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள்.

    விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவை புரிந்தோருக்கு பல்வேறு விருதுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வெளிநாட்டு தூதர்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது நமது அரசு.
    • கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது.

    சென்னை:

    சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்! அதன் நிழலில் வாழ்கின்ற நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வணக்கம்!

    400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

    இந்த கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

    இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவைப் பெருவிழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடினோம். அதற்கான நினைவுத்தான் நேப்பியர் பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

    பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ந் தேதியை 'மகாகவி நாள்' என அறிவித்தோம். அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம்.

    செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டி தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம்.

    அவரது படைப்புகளைத் தொகுத்து பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.

    அதுமட்டுமல்ல, அவர் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் இயங்கி வரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

    இந்த வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, இந்த ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க தலா 15 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டதையும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது. கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம் தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது தமிழக அரசு.

    கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

    அதேபோல் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது நமது அரசு.

    விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • இந்தியா நவீனத்துவத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது
    • உலகளவில் முன்பிருந்த நிலைமைகள் மாறிவிட்டன

    பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.

    பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:-

    * இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது.

    * வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களில் கூட டிஜிட்டல் வளர்ச்சி உள்ளது.

    * நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான திறன் நம்மிடம் உள்ளது.

    * சிறிய நகரங்களின் இளைஞர்கள் கூட தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என காட்டியுள்ளனர்.

    * இன்றைய உலகம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி உலகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அறிவியல் ஆராய்ச்சி குறித்த சாதனைகளிலும் நமது இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

    * நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றி.

    * நாட்டின் வளர்ச்சிக்கு உடல் உழைப்பு தொழிலாளர்களின் பங்கெடுப்பு மிகவும் முக்கியம்.

    * இந்தியாவின் உயர்வு, வளர்ச்சி நமது நாட்டின் மீதான உலகத்தின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

    * விழிப்புணர்வுதான் வன்முறைகளில் இருந்து நமக்கு விடுதலை தருகிறது.

    * இளையோர் சக்தியால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மக்களுக்கு நாட்டின் மீதுள்ள நம்பிக்கைதான் உலகிற்கு நம் நாட்டின் மீதான நம்பிக்கை தருகிறது.

    * இந்தியா நவீனத்துவத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.

    * ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் உன்னத வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மிகப்பெரிய இலக்கினை நாம் அடையப் போகிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 கூட்டம் நடத்தப்படுகிறது.

    * இன்று நாட்டின் ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது.

    * உலகளவில் புதிய அரசியல் சூழல் உருவாகி வருகிறது. மாறிவரும் சூழலில் நம் 140 கோடி மக்களின் திறமை உற்று நோக்கப்படுகிறது.

    * நமது வளர்ச்சி நமது கூட்டு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது.

    * உலகளவில் முன்பிருந்த நிலைமைகள் மாறிவிட்டன.

    * நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சமமாக வளர்ச்சியடைவதே சரியான முன்னேற்றம்

    * அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு

    * புதிய இந்தியா தடுக்க முடியாதது, வெல்ல முடியாதது. 

    • மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய மாநில அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது
    • உலகளவில் அளவில் இந்தியா ஒரு சக்தியாக உருவெடுத்து வருகிறது

    பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.

    பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்

    * என் அன்பிற்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு சுதந்திர தினவிழா கொண்டாடுகிறார்கள்.

    * உலகம் முழுவதும் இந்தியாவை விரும்புகின்ற மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    * தேசிய சுந்திரத்திற்காக யாரும் பங்களிக்காமல் இருந்திருக்க முடியாது. சுதந்திர தினத்தில் பங்கேற்றவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன்.

    * தற்போது இந்தியாவின் பல இடங்களில் மக்கள் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனவேதனையை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற்று, விரைவில் வளர்ச்சி அடைவீர்கள் என உறுதி அளிக்கிறேன்.

    * மணிப்பூரில் வன்முறை நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக கொடூமை நடந்துள்ளன. தற்போது அங்கு அமைதி நிலவி வருகிறது. அமைதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய மாநில அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.

    * ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாக அந்த ஆட்சிகள் நடத்தின. அந்த காலத்தில் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்ய அனைவரும் தயாராக இருந்தனர். இந்திய விடுதலைக்கான தியாக வேள்வியை நடத்திய வீரர்கள் 1947-ல் வெற்றி பெற்றார்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்து, கனவு நனவானது.

    * உலகளவில் அளவில் இந்தியா ஒரு சக்தியாக உருவெடுத்து வருகிறது. உலகிற்கு ஒரு நம்பிக்கை ஒளி ஏற்படுகிறது.

    * ஆயிரம் ஆண்டுகளுக்கு போற்றப்படுகிற காலமாக இந்த காலம் அமையும்

    * நம் நாட்டில் ஜனநாயகம் ஓங்கி ஒலிக்கிறது

    * வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா

    * உலகளவில் இந்தியா முன்னேற்றப்பாதையில் நடைபோடுகிறது. நாட்டின் கோடான கோடி நெஞ்சங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள்.

    * வரப்போகிற 100 ஆண்டுகளுக்கு நாட்டை சிறந்ததாக்க பணியாற்றி வருகிறோம்.

    * தற்போதைய செயல்பாடுகள் அடுத்த நூற்றாண்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும்

    * இந்த உலகம் தொழில் நுட்பத்தால் வழி நடத்தப்படுகிறது, தொழில் நுட்பத்தில இந்தியா உலகை வழி நடத்த இருக்கிறது.

    ×