search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • திறன் மிகுந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதும், அதற்கேற்ற பணி வாய்ப்புகளை அவர்கள் பெறுவதும்தான் எனக்கு முழுமையான மகிழ்ச்சியை தரும்.

    சென்னை:

    சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நாம் அனைவரும் இன்று விடுதலைக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக அமைந்த வீரத் தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தைச் சொல்லுவோம். அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குவோம்.

    இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய பெருமக்கள் அனைவரும் விடுதலை பெற்ற இந்திய நாடு எப்படி இருக்க வேண்டும்? இது யாருக்கான இந்தியாவாக அமைய வேண்டும் என்பதைக் கனவு கண்டார்கள்.

    அனைவரும் விரும்பியது சமத்துவ-சகோதரத்துவ-சமதர்ம இந்தியா. இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும் அத்தகைய ஒரு அரசைத்தான் நாங்கள் தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். சமூக நீதி-சமத்துவம்-சுயமரியாதை-மொழிப்பற்று-இனஉரிமை-மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் நமது ஆட்சியும் அமைந்துள்ளது.

    காலம் காலமாக குடும்ப பாரத்தை சுமக்கின்ற பெண்கள், தங்கள் உழைப்பிற்கு எந்த மதிப்பும் இன்றி இதுதான் தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று எண்ணியிருந்த நிலையை மாற்றிடும் வகையிலும் ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை உணர்ந்து கொள்ளும் வகையிலும், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத மகத்தானத் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

    ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் மாதந்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று தொடங்கப்பட இருக்கிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

    'விடியல் தரப் போகிறோம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். விடியல் வந்துவிட்டது என்பதன் அடையாளமாக மகளிருக்குக் கட்டணமில்லை என்பதை அறிவித்தாக வேண்டும் என்று நான் சொன்னேன்.

    பல்வேறு தரப்பு மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்து உள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 850-ரூபாய்க்கும் மேல் சேமிக்க முடிகிறது.

    இதே போன்ற ஒரு மகத்தான திட்டம்தான் பள்ளி மாணவர்களுக்கு தரப்படும் காலை உணவுத் திட்டம்.

    திராவிட மாடல் அரசு பிள்ளைகளுக்குத் தாயாக, தாய்மார்களுக்குப் பிள்ளையாக இருந்து செயலாற்றுகிற அரசு. அதனால்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு என்கிற வரலாறு தொடரட்டும் என்றேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. எதிர்கால சிற்பிகளாம் மாணவர்களின் உடல்நலனும் உள்ள வலிமையும் காத்திடும் வகையில் விரிவாக்கப்படும் காலை உணவு திட்டத்தை நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி எனப் போற்றக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் பயின்ற திருக்குவளைப் பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறேன். இதற்கென இந்த நிதியாண்டில் 404 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் குறித்த மாநிலம் முழுவதுக்குமான புள்ளி விவரத்தைக் கேட்டேன்.

    எனக்குக் கிடைத்த புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் வலிமை இருந்தால்தான் உள்ள வலிமையும் இருக்கும். சிறப்பான எதிர்காலமும் இருக்கும். சிறப்பான எதிர்காலமும் அமையும். எனவே ஊட்டச்சத்து வழங்க ஒரு திட்டத்தை உருவாக்கச் சொன்னேன்.

    இந்தத் திட்டத்தின் கீழ் பிறவியிலேயே குறைபாடுகள் கொண்ட 3 ஆயிரத்து 38 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.

    இதுபோலவே, ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய் மார்களுக்கு என சிறப்பு கூடுதல் சத்துணவு அளிக்கப்பட்டதால், சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.

    இந்தத் திட்டம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து இளம் தாய்மார்களுக்கு இடையே நல்லதொரு தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

    அடுத்து என்னுடைய கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மக்களாகிய நீங்கள் தான் என்னை முதலமைச்சர் ஆக்கினீர்கள். நான் முதலமைச்சராக இருந்தாலும், என்னை முதலமைச்சராக்கிய உங்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் உள்ள பிள்ளைகள் தங்கள் திறனை மேம்படுத்தி, நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய வகையிலே சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

    இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டு அதில் மூன்றரை லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பல்வேறு பணிகளில் அரசின் உதவியுடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். திறன் மிகுந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதும், அதற்கேற்ற பணி வாய்ப்புகளை அவர்கள் பெறுவதும்தான் எனக்கு முழுமையான மகிழ்ச்சியை தரும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×