search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார சீர்கேடு"

    • ஏரி கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டம்
    • நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் அடுத்த கணபதி நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக தெருக்களின் ஓரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.

    குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம், மோர்தானா அணையில் இருந்து நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    இதற்காக தற்போது குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையின் ஓரத்தில் செல்லும் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த கால்வாய் பணி முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    தற்போது அந்த கால்வாயில் வரும் கழிவுநீர், பாதியில் கால்வாய் கட்டிடம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செல்ல வழியில்லாமல் அதிகளவில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    பல நாட்களாக தேங்கிநிற்கும் கழிவுநீரில் கொசக்களின் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    பொதுமக்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குடியிருப்பில் இருந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு கழிவுநீர் எடுத்துசெல்ல கடந்த 2 மாதத்திற்கு முன்பு கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அந்த பணியும் முழுமையாக முடியாததால், கழிநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    இரவு நேரத்தில் கொசுக்கள் துரத்தி, துரத்தி கடிப்பதால் நாங்கள் தூக்கத்தை இழந்து தவிக்கிறோம். மாலையில் கொசுக்கள் தொல்லை அதிகாம இருப்பதால் நாங்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது.

    கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் இருக்கும் விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகிறது. மழை காலங்களில், ஏரிக்கு வரும் மழைநீர் கழிவுநீரோடு கலந்து, விவசாய நிலத்தில் தேங்கி பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் மழை காலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.

    எனவே மக்களின் நலன் கருதி கால்வாய் கட்டும் பணியை முழுமையாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    • என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
    • நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி.2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பூவுலக நண்பர்கள் மற்றும் மந்தன் அத்யாயன் கேந்திரா சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் அதிக அளவு பாதரசம், செலினியம் மற்றும் புளோரைடு இருப்பது தெரியவந்தது. வடக்கு வேலூர் தொல்காப்பியர் நகரில் உள்ள ஒரு ஆழ்துளை கிணறு நீரில் பாதரசத்தின் அளவு அனுமதிக்கபட்ட வரம்பை விட 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் குடிநீரில் அதிகஅளவு கொந்தளிப்பு மற்றும் செலினியம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக பொதுமக்களுக்கு சீறுநீரக பிரச்சனைகள், சுவாச மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்தது. மேலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி தூசி மற்றும் சாம்பலின் மாசுபாடுகள் வீடுகளில் இருப்பதை ஆய்வு கண்டிறியப்பட்டுள்ளது.

    கரிக்குப்ப கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் மாசுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உள்ளுர் நீர்நிலைகளில் சாம்பலை கொட்டுவதை நிறுத்தவும் சாம்பலை எடுத்து செல்லும் ஓடைகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. பகுதிகளில் குடியிருப்போருக்கு வருடத்திற்கு 2 முறை இலவச சுகாராத முகாம் நடத்த வேண்டும். சுகாதார பிரச்சனைகள் உள்ள கிராமங்களை என்.எல்.சி. பொதுமருத்துவமனை கண்காணிக்க வேண்டும். நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, மண் வாழ்வியலாளர் சுல்தான் இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

    • நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக உள்ளது.
    • ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பாச்சலூரில் இருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு, சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிறு ஓடையாக வரும் நீர் ஆறாக மாறி வடகாடு மலைக்கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு வருகிறது.

    ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 6 பெரிய கண்மாய்களுக்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக உள்ளது.

    இடையக்கோட்டையில் நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் வந்து சேர்கிறது. இந்த அணை நிரம்பியவுடன் கரூர் அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு போக கடலில் கலக்கிறது.

    இந்நிலையில் இடையக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்று ஓரங்களில் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நங்காஞ்சியாற்றில கலப்பதால் மாசடைந்து சாக்கடை போல் மாறி பல இடங்களில்தேங்கி நிற்கிறது.

    மேலும் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஆற்றில் கழிவுநீர் மட்டும் தேங்கி நிற்கிறது.

    இது குறித்து இடையக்கோட்டை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் வக்கீல் கதிரவன் கூறியதாவது:- கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் ஓரங்களில் உள்ள கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற அந்த அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    • கிராமத்தில் வெளியேறும் சாக்கடை நீர் முழுமையாக பள்ளி முன்பு கடந்த மூன்று மாதங்களாக தேங்கி நிற்கிறது.
    • கால்வாய் அமைத்து சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் கேத்திரெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பிலைபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கிராமத்தில் வெளியேறும் சாக்கடை நீர் முழுமையாக பள்ளி முன்பு கடந்த மூன்று மாதங்களாக தேங்கி நிற்கிறது.

    இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாண வியர்கள் சாக்கடை நீரில் நடந்தவாறு சென்று வருகின்றனர்.

    இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாக்கடை நீர் எளிமையாக செல்ல கால்வாய் அமைத்து சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை.

    இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் முன்பு இவற்றை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தியாகதுருகத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது.
    • ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    கள்ளக்குறிச்சி, ஜூலை.3-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் செல்லும் சாலையில், சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை மற்றும் ஆயில் ஆலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதால் தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியுள்ளது.

    இதனால் அப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காட்ட முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே ஆலைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஏரியின் கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துரு நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடைந்த துவாரத்தின் வழியாக கழிவுநீர் குடியிறுப்பு பகுதியில் உள்ள காலி இடங்களில் தேங்குகிறது.
    • கொசுக்கள் அதிகளவில் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 31-வது வார்டு பாரதிபுரத்தில் ராஜீவ்காந்தி தெரு, பாரதியார் தெரு, விவேகானந்தர் தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இந்த தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு ள்ளது.

    இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய் தூர்வாராமல் சிதிலமடைந்து உள்ளது.

    இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேக்கமடைகிறது. உடைந்த துவாரத்தின் வழியாக கழிவுநீர் குடியிறுப்பு பகுதியில் உள்ள காலி இடங்களில் தேங்குகிறது.

    கொசுக்கள் அதி களவில் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதனால் பொது மக்கள் அவதியடைகின்றனர். இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆட்டின் கழிவுகளுடன் கழிவு நீர், மழை நீர் கால்வாயில் வெளியேறி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது.
    • இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி, 5 வது வார்டில் நகராட்சி ஆடு அறுக்கும் தொட்டி உள்ளது.

    இங்கு தினந்தோறும், 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் ஆடுகளின் கழிவுகள் ஆடு அறுக்கும் தொட்டி வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

    மேலும், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதை இங்கு பணியாற்றி வருபவர்கள் உடைத்துள்ளனர்.

    இதனால், ஆட்டின் கழிவுகளுடன் கழிவு நீர், மழை நீர் கால்வாயில் வெளியேறி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது.

    இதன், காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    கடந்த, 6 மாதங்களாக உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பிக்காமல் இங்கு, ஆடு அடிக்கும் தொட்டியில் சுகாதாரமற்ற முறையில் வெட்டப்படும் ஆட்டு ரத்தம், தலை, கால்களால் பொது மக்களுக்கு விற்கப்படுகிறது.

    இதை தடுக்க வேண்டிய உணவு பாது காப்புத்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    இதனால், ஆடு அடிக்கும் தொட்டியின் பின் புறம் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்வேறு பரிசோதனை களுக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், பிரசவத்துக்கு வரும் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி தருமபுரி நகராட்சி நிர்வாகம், இந்த ஆடு அடிக்கும் தொட்டியை நகராட்சி எல்லையில் பொதுமக்கள் குறைவாக உள்ள பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.
    • மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை லாரிகள் மூலம் கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பை, கழிவுகளை கொட்டுவது, எரிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    சென்னை மதுரவாயல் மேம்பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் குப்பை கொட்ட கூடாது என பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அங்கு பிளாஸ்டிக், மரச்சா மான்கள், ரப்பர் உள்ளிட்ட கழிவுகள், வீட்டுக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேசிய நெடுஞ்சாலை யோரம் குப்பைகளை கொட்டுவது மட்டுமின்றி, தீ வைத்து எரிப்பதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.

    வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், திடக்கழிவுகள், கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் லாரிகளில் கொண்டு வந்து அருகில் உள்ள கால்வாயில் கொட்டப்படுகின்றன. மேலும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை லாரிகள் மூலம் கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை நேரத்தின் போது பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. இங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும்,பொது மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது.
    • வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது. மேலும் குறிப்பாக இந்த வீராணம் ஏரியிலிருந்து சென்னை வாழ்மக்கள் குடிநீருக்காக தினமும் தண்ணீர் செல்கிறது. 

    தற்போது கோடை வெயில் முடிந்த நிலையிலும் குறையாத வெப்பத்தின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிருந்து சென்னை குடிநீருக்கு ஒரு நாளைக்கு அதிகமான கனஅடி அளவு தண்ணீர் அனுப்பப்பட்ட நிலையில் தண்ணீர் குறைந்து வரும் காரணத்தால் தற்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் சென்னைக்கு அனுப்பும் குடிநீர் சுகாதாரமாக அனுப்பப்படுகிறதா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. ஏரியின் கரையோரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு துர்நாற்றம் வீசிகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ரெயில் பெட்டிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • பாடாவதியான ரெயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமேசுவரம், ஏர்வாடி, திருப்புல்லாணி, உத்தரகோச மங்கை, உப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆன்மிக தலங்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கானோர் வேண்டுதலுக் காக வருகின்றனர். இது தவிர ஏராளமான வெளி நாட்டினர் ராமேசுவரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்பி தேர்வு செய்கின்றனர். ராமேசுவரம், ராமநாதபுரம் ரெயில் நிலை யம் வழியாக சென்னை, கோவை, திருப்பதி, போன்ற நகரங்களுக்கு முன்பதிவு செய்து பயணம் மேற் கொண்டு வருகின்றனர்.

    ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகள் எஸ்-1 முதல் எஸ் 13 வரை இணைக்கப் பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ராமேசு வரம் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கிழிந்த இருக்கையில் தையல் போடப்பட்டு உள்ளது. தரை தளம், கழிப்பறைகள் படுமோசமாக உள்ளது. மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டியில் கதவுகளில் உள்ள இடைவெளியில் குளிர் காற்று வெளியே செல்வதால் பெட்டிக்குள் வெப்பகாற்று ஏற்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதியில்லை. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குளிர் சாதன ெரயில் பெட்டிக்குள் சென்றால் அனல் காற்று தான் வீசுகிறது. தரை தளம் படு மோசமாக உள்ளது. முன்பதிவு செய்து செல்வதை விட ஜெனரல் பெட்டியில் பயணிக்கலாம் என்ற நிலை உள்ளது.

    கழிப்பறையில் சோப், பேப்பர் போன்றவைகளை காண முடியவில்லை. ராமேசுவரம் வரும் யாத்ரீகர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு பாடா வதியான ெரயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது.
    • குட்டைக்கு மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டைக்கு மழைக்காலங்களில் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவு நீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் நீரோடை கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், கட்டடக்கழிவுகள் மற்றும் கழிவுகளை போட்டு குட்டையை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

    வேலூர்,

    வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் எதிர்ப்பு

    ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும்.

    இதனால் இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது. புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரி கட்ட அதிகாரிகள் நில அளவீடு செய்ய சென்றனர். ஆஸ்பத்தி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    செய்வது அறியாது தவித்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

    ×