search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவுரை"

    • நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது,
    • மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொதுமக்கள், கடைஉரிமையாளருக்கு அறிவுரை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாடு அதிகமாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரின்பேரில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமையில் பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழியால் ஆன 50 கிலோ பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். பதுக்கி வைக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை மற்றும் விரைவில் மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொது மக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் அறிவுரை வழங்கினார்.

    • பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்.
    • தேவகோட்டை பஸ் நிலையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தேவகோட்டையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்காக பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

    சமீப காலமாக கூட்டநெரிசல் காரணமாக பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ்குமார் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தனியார் மற்றும் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இறக்கி விடப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரித்துடன் அவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தினமும் காலை, மாலை நேரங்களில் ஆய்வு செய்வேன் என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார். அப்போது காவலர் சிலம்பரசன் உடன் இருந்தார்.

    • வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட் வழங்கல்.
    • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழபாலம் பகுதியில் நடைபெற்றது.

    இதில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ பங்கேற்று வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட்களை வழங்கினார்.

    மேலும் சாலை விதிகள், தலைகவசத்தின் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மகிழ்வாகனன், நகர காவல் உதவி ஆய்வாளர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ''டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, ''அதிக சம்பளம்'' என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் வருகிறது.

    இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்ப்டடால் 96000 23645, 87602 48625, 044-28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் என்பது உயரமான சிகரத்தில் ஏறுவதற்கு சமசமானது. அதில் திட்டமிடல் மிகவும் அவசியம்.
    • மருத்துவத்துறையில் சவால்கள் அதிகம். அன்றாடம் வளர்ந்து வரும் இத்துறையில் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    திருச்சி :

    திருச்சியில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது :-

    கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் என்பது உயரமான சிகரத்தில் ஏறுவதற்கு சமசமானது. அதில் திட்டமிடல் மிகவும் அவசியம். நம்முன்னே பலதுறைகள் இருந்தாலும் நமக்கு எது பொருந்தி வரும் என்பதை சரியாகத் தேர்வு செய்து அதில் தடம் பதிக்க வேண்டும். சமுதாயத்தில் ஆசிரியர்களின் பணியும், டாக்டர்களின் பணியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மருத்துவத்துறையில் சவால்கள் அதிகம். அன்றாடம் வளர்ந்து வரும் இத்துறையில் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகக்கடினமான முறையில் நடந்த அறுவை சிகிச்சைகள் கூட இப்போது எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் செய்யக்கூடிய வசதிகள் வந்து விட்டன. நம்நாடு மருத்துவ அறிவியலில் பல சாதனைகள் படைத்து வருகிறது.

    அதே போல் அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியப் பணியிலும் நாம் நவீன உத்திகளைக் கையாண்டு கல்வியைத் தொய்வில்லாமல் தொடர முடிந்தது. எந்த செயலை செய்வதற்கும் அச்சம் கூடாது. எனினும் அச்சப்பட வேண்டியதற்கு அச்ச ப்பட்டே ஆக வேண்டும். இக்கால மாணவர்களிடம் அறிவாற்றல் நிறைய இருக்கிறது. அதை இனம் கண்டு வெளிக்கொணர ஆசிரியர்கள் உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    • சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • மீனவர்கள் கடற்கரையை சுத்தம் செய்ததை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனோரா படகு இறங்குதளம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ஆகிய இரு இடங்களில் சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில், கடலோர சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ராஜசேகர், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் கெங்கேஸ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி, அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், மீன்வளத் துறையினர், கடலோர காவல் குழுமத்தினர், மீனவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர். தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

    • மாணவர்கள் முன்னுதாரணமாகவும் தெளிவான முறையில் தங்களது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும்.
    • மாணவர்களுக்கு எளிமையான முறைகளும் மிமிக்கிரி செய்தும் நகைச்சுவை வழியாகவும் அறிவுரை வழங்கினார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியரை கொண்டாட வேண்டும் என்ற தலைப்பில் மாணவ ர்களுக்கான விழிப்பு ணர்வு மற்றும் மாணவர்களை வளப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர். காமராஜ் தலைமை தாங்கி பேசும் போது, கற்க கசடற கற்க கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறலுக்கு ஏற்ப மாணவர்கள் முன்னுதாரணமாகவும் தெளிவான முறையில் தங்களது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    அவரைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அப்துல் கலாமின் சீடரும் பிரபல நகைச்சுவை நடிகருமான தாமு பேசுகையில்,கலாமை வழிபடும் மாணவன் நான் என்பதில் பெருமிதம் கொள்வ தாகவும் அப்துல் கலாமின் பொன்மொ ழியான உறங்கும் போது வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வதே கனவு என்ற அவரின் கோட்பாட்டை மாணவ ர்களுக்கு எளிமையான முறைகளும் மிமிக்கிரி செய்தும் நகைச்சுவை வழியாகவும் அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் சி. பி. ஜி .அன்ப ழகன், முதல்வர் வேலவன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெ. இளங்கோ, துணைத் தலைவர் பாலசுப்பி ரமணியன் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவி னை சிறப்பித்தனர்.

    • செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நோய் வராமல் இருக்க ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது.

    திருப்பூர் :

    ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து உணவு பற்றிய பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 15 வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நோய் வராமல் இருக்க நமது உடலில் ஊட்டச்சத்து மிக அவசியமாக தேவைப்படுகிறது. சத்தான உணவுகளான ,கீரைகள், காய்கறிகள் இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் தேவைப்படுகிறது. இவற்றில் அதிகளவில் முக்கிய சத்துக்கள் காணப்படுகிறது.வைட்டமின் -ஏகொண்ட முருங்கை, பப்பாளி போன்ற பழம், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை எவ்வளவு அதிகம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகம் கேடு விளைவிக்கும். சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தோடு வாழவேண்டும்.ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், அரவிந்தன், பாலசுப்பிரமணியம், சுந்தரம் , பூபதி ராஜா, பாக்கியலஷ்மி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியில் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 ந் தேதி தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும். அதன் படி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் காய்கறிகளின் அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.தொடர்ந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் கண்காட்சியினை நடத்த திட்டமிட உள்ளார்கள் என்றார்.

    • உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை.
    • நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இம்முகாம் நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி வரவேற்றார்.குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சுகந்தி தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை. அதை முறையாகப் பராமரித்து பாதுகாத்து நல்ல உடல் நலத்துடன் வாழ்வதும், அதை பாழ்படுத்தி வீணடிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இந்த பூமியில் நம் பிறப்பு மூலம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் உதவும் வகையில் நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.நம்மை நம்பியுள்ள நம் குடும்பத்தைக் காப்பாற்ற நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். எனவே அதை முறையாக நாம் பாதுகாத்து நலமுடன் இருக்க வேண்டும்.வேலைப் பளு காரணமாக மருத்துவ பரிசோதனைக்கும், உடல் நலம் காக்கவும் இயலாத நிலையில் உள்ளோருக்கு இது போன்ற மருத்துவ முகாம்கள் பயன்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.முகாமில், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி நாகராஜன், மோட்டார் விபத்து வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நடுவர் புகழேந்தி, வக்கீல் சங்க நிர்வாகிகள், பழனிசாமி, சுப்ரமணியம், அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லுக்கு கூட்டு உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.
    • விவசாயிகள் மழையினை பயன்படுத்தி வயல்களை உழவு செய்து விதைப்பதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி மாத தொடக்கத்தில் இருந்தே மாவட்டம் முழுவதிலும் நல்ல மழை பொழிந்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி வயல்களை உழவு செய்து விதைப்பதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் அடியுரமாக பயன்படுத்தப்படும் டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நெல் சாகுபடிசெய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டி.ஏ.பி. உரத்தினையே அடி உரமாக பயன்படுத்து கிறார்கள். டி.ஏ.பி. உரம் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொரு ளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உள்நாட்டில் டி.ஏ.பி. உர உற்பத்தி குறைந்துள்ளது. பெரும்பாலான டி.ஏ.பி. உரங்கள் வெளிநாட்டி லிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

    மத்திய அரசின் உரத்துறையானது டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடிஉரமாக இட விவசாயி களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது. அதன்படி 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம் என்று மத்தியஅரசு வலியுறு த்தியுள்ளது.

    தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடை களில் கூட்டுரம் (காம்ப்ளக்ஸ் உரம்;) 1520 மெ.டன், டிஏபி 590 மெ.டன், யூரியா 1420 மெ.டன் உரமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தனியார் உரக்கடைகளில் சூப்பர் பாஸ்பேட் 55 மெ.டன் தற்சமயம் இருப்பில் உள்ளது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சூப்பர் பாஸ்பேட் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் கூட்டுரம் (காம்ப்ளக்ஸ்) உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம், கூறியுள்ள தை விவசாயிகள் பின்பற்றி நெற்பயிரில் இந்த சம்பா பருவத்தில் இதனை நடைமுறைபடுத்தி நல்ல மகசூல் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மதுரை மாநகர பகுதியில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை கூறினர்.
    • இந்த நடைமுறை பல்வேறு மாவட்டங்களில் அமலுக்கு வந்தன.

    மதுரை

    தமிழகத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நடைமுறை பல்வேறு மாவட்டங்களில் அமலுக்கு வந்தன.

    மதுரை மாநகரில் போக்குவரத்து விதி–முறைகளை மீறுவோர் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்்ந்து பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி (தெப்பக்குளம்), சுரேஷ் (தல்லாகுளம்), கணேஷ் ராம் (தெற்கு வாசல்) உள்ளிட்ட அதிகாரிகள், நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஒட்டிய 545 பேரும், பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணித்த 194 பேரும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 23 பேரும் பிடிபட்டனர். அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    மேலும் யூனிபார்ம் அணியாமல் ஆட்டோவை ஓட்டிய 74 டிரைவர்களும் பிடிபட்டனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை மாநகரம் முழுவதும் பஸ் நிறுத்தங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவ- மாணவிகளிடம் பஸ்சுக்குள் செல்லும்படி அறிவுறுத்தினர்.

    பஸ் நிறுத்தங்களில் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

    • மானாமதுரை அருகே சட்ட விழிப்புணர்வு முகாமில் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உண்மையாக்க வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.
    • மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மானாமதுரை அருகில் உள்ள ராஜகம்பீரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். கல்வி ஒன்று தான் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு துணை நிற்கும். ''இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்'' என்பதை மாணவர்கள் உண்மையாக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இந்த முகாமில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் வனராஜன், பள்ளி தாளாளர் சேவியர் சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர் செல்வன் ஆகியோரும் பேசினர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்களான நாகேந்திரன், காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×