search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்கள்"

    • அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 26 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.

    ஈரோடு:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். (மருத்துவம்) மற்றும் பி.டி.எஸ் (பல் மருத்துவம்) போன்ற படிப்பிற்கு நீட் தேர்வு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நீட் தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி களில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்கள், 15 மாணவிகள் என 21 பேர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். பட்டம் படிக்க மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.

    இதேப்போல 4 மாணவிகள் உள்பட 5 பேரும் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ் பட்டம் படிக்க சேர்க்கை பெற்றுள்ளனர்.

    இதில் ஒருவர் மட்டும் முதல் முறையாக நீட் தேர்வு எழுதி 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.

    மீதமுள்ள 25 பேரும் 2-ம் முறை நீட் தேர்வு எழுதி அரசின் இட ஒதுக்கீடு பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ளதை மாவட்ட கல்வித்துறையினர் உறுதி செய்தனர்.

    • தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.
    • நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    சென்னை:

    'பெல்லோ சிட்டிசன்' நிதியுதவியுடன் செயல்படும் ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 6 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

    சமூக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் இருக்கும் இளைஞர்களுக்கு அதற்குரிய பொருளாதார வசதி, பின்னணி இல்லாமல் இருப்பார்கள். அதுபோன்ற இளைஞர்களையும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் 'தந்தி' டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

    அந்தவகையில், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த ஆண்டில் 90 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 10 இடங்களில் வந்தனர்.

    அதேபோல், நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளில் 6 பேர் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கு பெற தகுதி பெற்றனர். அவர்களில் 5 பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடங்களை பெற்று இருக்கின்றனர். அதன்படி, கே.துர்கா தேவி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியையும், ஹரிணிதேவி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், ஆர்.இலக்கியா திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியையும், விமல்சுவார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியையும், விஷ்ணுபிரியா ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து உள்ளனர்.

    இதுதவிர நீட் தேர்வில் 523 மதிப்பெண் பெற்ற கனிஷ்கா என்ற மாணவி பொதுப்பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து, அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறார். இவர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 2024-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கையும் முடிந்துவிட்டது. அவர்களுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கின்றன.

    • ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.
    • ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பள்ளிகளில் அதிகளவில் ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்து வரும் குழந்தைகளை கடந்த 2 ஆண்டுகளாக சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து சென்று வருகிறார்.

    இதேபோல் இந்தாண்டும் இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து செல்ல ஞானசேகரன் முடிவு செய்தார். இதற்காக மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தனர். விமானத்தில் பயணித்த மாணவ, மாணவிகள் முதல் முறையாக பயணிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். விமானத்தில் இருந்தபடி மேல் இருந்து கீழே உள்ளே பகுதிகளை பார்வையிட்டு ரசித்தனர்.

    இந்த பயணமானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறியதாவது:-

    ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கனவை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாகவே ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வருகிறேன்.

    சென்னைக்கு சென்றதும், அவர்களுக்கு தேவையான காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் பார்த்து கொள்கிறேன். அங்கு மெட்ரோ ரெயிலிலும் அவர்களை பயணிக்க வைக்கிறேன்.

    அப்போது அவர்களது முகத்தில் வரும் ஒரு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்று வசதி படைத்தவர்கள், தங்களின் அருகாமையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றால் நன்றாக இருக்கும். இந்தாண்டு 75 மாணவர்கள், 75 பெற்றோர்கள், 15 ஆசிரியர்கள் என விமானத்தில் அழைத்து செல்ல உள்ளேன். இதில் 55 பேர் வீதம் மொத்தம் 3 முறை செல்ல உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

    இதோடு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார். இதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இவர்களை 3-வது ஆண்டாக விமானத்தில் சொந்த செலவில் அழைத்து சென்று வருகிறார் என்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் விமானத்தில் சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உதவியால் நாங்களும் விமானத்தில் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எங்களின் நன்றி என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    • மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆப் மார்க் நிர்ணயிக்கப்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் எழுதிய நீட் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானதில் தமிழக மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். மேலும் 4 மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்து தகுதி பெற்றனர்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதியதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 54 சதவீத தேர்ச்சியாகும். இந்த ஆண்டு உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் மருத்துவ கட்-ஆப் மார்க் உயருகிறது.

    இந்த நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் படித்த 12,997 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை இந்த வருடம் எழுதினார்கள். இதில் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 31 சதவீத தேர்ச்சி ஆகும்.

    கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 27 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 24 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த முறை அதிகரித்துள்ளது.

    கடந்த வருடம் அரசு பள்ளி மாணவர்கள் 14,979 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4118 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு 461 பேர் எம்.பி.பி.எஸ். மற்றும் 106 பேர் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ந்தனர்.

    இந்த ஆண்டு எத்தனை பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கும் என்று தெரியவில்லை. 500 பேருக்கு குறையாமல் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளது.

    மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆப் மார்க் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எம்.எம்.சி., ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சேலத்தில் தான் அதிகபட்சமாக 2007 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இதில் 519 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 822 பேர் தேர்வு எழுதியதில் 131 பேர் தகுதி பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 597 பேர் எழுதியதில் 92 பேர் தேர்ச்சி பெற்றனர். தர்மபுரியில் 548 பேரும், கள்ளக்குறிச்சியில் 543 பேரும் தேர்வு எழுதினர்.

    சென்னை மாவட்டத்தில் 296 பேர் தேர்வு எழுதியதில் 93 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தான் அதிகளவில் தேர்வு எழுதினர்.

    • பள்ளிகளுக்கு சென்று திரும்பிய குழந்தைகள் காலில் செருப்பு அணியாமல் சென்றதை காண முடிந்தது.
    • அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பொருட்களையும் உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள், கோடை வெயில் காரணமாக ஜூன் 12-ந் தேதி திறந்த நிலையிலும், பாடப் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் தவிர வேறு ஏதும் வழங்கப்படவில்லை என்றும், சில பள்ளிகளில் பாடப் புத்தகங்கள்கூட தரப்படவில்லையென்றும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் மட்டும் ஒன்றிரண்டு பேருக்கு கொடுக்கப்பட்டு அதற்கான புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் செய்திகள் வருகின்றன.

    நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு சென்று திரும்பிய குழந்தைகள் காலில் செருப்பு அணியாமல் சென்றதையும், கிழிந்த புத்தகப் பையுடன் சென்றதையும் காண முடிந்தது.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்வதையும், அவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பொருட்கள் உடனுக்குடன் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

    எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உடனடியாக பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பு, சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார்.

    இதுதொடர்பான திட்டங்கள் மற்றும் செயலாக்கங்களுக்கு 'பெல்லோ சிட்டிசன்', அவருக்கு உதவி செய்து வருகிறது. ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 3-வது ஆண்டாக, 2024-ம் ஆண்டு 'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பிளஸ்-2 படிக்கும் மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் www.aatrupadaifoundation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த மாதம் இறுதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் இலவச பயிற்சி பெறுவதற்காக சென்னைக்கு வந்து பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களை 63811 28698, 93633 68271 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த கல்வியாண்டில் ரூ.177.44 கோடி மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
    • நடப்பு கல்வி ஆண்டில் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்குவதற்காக முதல்கட்டமாக ரூ. 100 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 4 சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்துறை பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக சீருடைகள் வழங்கப்படுகிறது.

    கடந்த கல்வியாண்டில் ரூ.177.44 கோடி மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்குவதற்காக முதல்கட்டமாக ரூ. 100 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கிரே பாலியஸ்டர் டையிங் நூல் 1866 டன்களும், டையிங் செய்யப்பட்ட காட்டன் வார்ப் நூல் 1,422 டன்களும் வாங்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.

    டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சர்ட்டிங் துணிகள் 5.23 கோடி மீட்டரும், பேண்ட் துணி 5 கோடி மீட்டரும், உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளனர். சமூக நல ஆணையத்தின் சார்பில் மகளிர் தொழில் துறை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருவூரில் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமனோர் தங்களது தலைமுடியை ஒழுங்கற்ற முறையில் வெட்டி ஸ்டைலாக வலம் வந்தனர்.
    • ஒழுங்கற்ற முறையில் தலைமுடியுடன் வந்த 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பை சேர்ந்த சுமார் 50 மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் மரத்தடியில் அமரவைத்தனர்.

    திருவள்ளூர்:

    பள்ளி மாணவர்கள் விதவிதமாக தங்களது தலைமுடியை வெட்டி வலம் வருகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும் கேட்பதில்லை.

    இந்த நிலையில் விதவிதமான தலைமுடி ஸ்டைலில் வந்த மாணவர்களின் தலைமுடிய பள்ளியிலேயே ஆசிரியர்கள் நறுக்கிய ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.

    திருவள்ளூரை அடுத்த திருவூரில் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமனோர் தங்களது தலைமுடியை ஒழுங்கற்ற முறையில் வெட்டி ஸ்டைலாக வலம் வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். தலைமுடியை ஒழுங்காக வெட்டி வருமாறு கூறினர். ஆனால் மாணவர்கள் தங்களது தலைமுடி ஸ்டைலை மாற்றாமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் தலைமுடியுடன் வந்த 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பை சேர்ந்த சுமார் 50 மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் மரத்தடியில் அமரவைத்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கேயே சலூன் கடை உழியர் ஒருவர் மூலம் சீராக முடி வெட்டப்பட்டது.

    தலைமையாசிரியை ராஜம்மா உத்தரவின் பேரில் பள்ளி ஓவிய ஆசிரியர் அருணன் மேற்பார்வையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    • பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.
    • முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 1996- 97ல் படித்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர், அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

    அவர்களுக்கு பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    பின்னர் பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.

    அனைவரும் ஒன்று கூடி குழு போட்டோ எடுத்த பின்னர் பிரியாவிடை பெற்றனர். சரவணன், ஜலால் சலீம், செல்வம், தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின், பாம்பினோ சீனு உள்ளிட்டோர் இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

    • மின்கட்டணம் செலுத்தப்படாததால் அந்த பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
    • நேற்று மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து காலாண்டு தேர்வை எழுதினர்.

    விக்கிரமசிங்கபுரம்:

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளிக்கான கடந்த மாத மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும், இதற்காக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னரும் மின்கட்டணம் செலுத்தப்படாததால் அந்த பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது கடும் வெயில் அடிக்கிறது. மேலும் மின்சாரம் இல்லாததால் வகுப்பறையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் வகுப்பறையில் மாணவ, மாணவிகளை உட்கார வைத்து பாடம் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது. எனவே, மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். நேற்று மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து காலாண்டு தேர்வை எழுதினர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாணவர்கள் படிப்பிற்காக அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மின்சாரம் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளாவது மனிதாபிமான முறையில் மின்சாரம் வழங்கி இருக்கலாம்' என்றனர்.

    • இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
    • அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.

    இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த வாரம் அவர் அதே பள்ளி மாணவர்களுடன், பெற்றோரையும் கோவை முதல் சென்னை வரை 110 பேரை விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.

    சென்னையில் மெட்ரோ ரெயில், எலக்ட்ரிக் ரெயில் உள்ளிட்டவற்றிலும் அவர்களை அழைத்து மகிழ்ச்சிப்படுத்தினார். விமானத்தில் மாணவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனை பார்த்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களுக்கு எவ்வளவோ கனவுகள் உண்டு. இதில் எங்கள் பள்ளிகளுக்கு வரும் சில தன்னார்வலர்கள் எங்களுக்கு புத்தாடை நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வந்தனர். ஆனால் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் எங்களுக்கு அனுபவ ரீதியாக எது தேவையோ அதை செய்து வருகிறார். இதில் நாங்கள் விமானத்தில் சென்று வந்தது புது அனுபவமாக இருந்ததாக கூறினர்.

    இதுகுறித்து சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்று அரசியல் தலைவர்களாகவும், பெரிய பதவிகளிலும் உள்ளனர். இன்றைய சூழலில் பெற்றோர்களிடையே தனியார் கல்வி பள்ளிகளில் படிக்க வைப்பதையே பெருமையாக உள்ளனர். ஆனால் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை காட்டிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சிறிதளவு ஊக்குவித்தால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமைகள் இன்னும் அதிகரிக்கும் என்றார்.

    அடுத்த கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை மீண்டும் வெள்ளியங்காடு, காரமடை அரசு பள்ளிகளில் சிறந்து முறையில் படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை விமானத்தில் அழைத்து செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார். 

    • ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.
    • அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.அறிவியல் சார்ந்த பொறியியல், மின்னியல் மற்றும் ரோபோட்டிக் துறையில் மாணவர்களின் சிந்தனைகளை தூண்டவும், பற்பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட ஊக்கப்படுத்தவும் இந்த ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அனைத்து உபகரணங்களையும் கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதல் இரண்டு வகுப்புகளிலேயே மாணவர்கள் சுயமான தானியங்கி சென்சார் மூலம் திறந்து மூடும் கதவுகளை கொண்ட வீடு, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரம்பியதை அறிவிக்கும் அலாரம், மனிதர்கள் வீட்டுக்குள் நுழைவதை கண்டறியும் தானியங்கி சென்சார் போன்றவற்றை வடிவமைத்துள்ளனர்.

    ஒவ்வொரு மாதமும் பிரத்யேகமாக உரிய நிபுணர்கள் மூலம் அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆய்வுக்கூடத்தை முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி பார்வையிட்டார். புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, செயல்முறை விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டினார்.பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, இயற்பியல்துறை முதுகலை ஆசிரியர் கண்ணன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ஜெயமோகனகிருஷ்ணன், பி.டி.ஏ., துரைசாமி, நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் செந்தில்குமார், கிரீஷ், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஸ்டாலின் மணிக்குமார், ஜெகன் அலெக்ஸ், ராமசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×