search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt school students"

    • 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
    • ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    அவிநாசி:

    மாவட்ட அளவிலான கபடி போட்டி, திருப்பூா் அருகே பொங்கலூா் அரசு உதவி பெறும் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.மேலும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவா்கள் யாகவராஜ், கவின் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

    வெற்றிபெற்ற மாணவா்கள், உடற் கல்வி ஆசிரியை கவிதா உள்ளிட்டோருக்கு தலைமையாசிரியா் ஆனந்தகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    • ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.
    • ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பள்ளிகளில் அதிகளவில் ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்து வரும் குழந்தைகளை கடந்த 2 ஆண்டுகளாக சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து சென்று வருகிறார்.

    இதேபோல் இந்தாண்டும் இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து செல்ல ஞானசேகரன் முடிவு செய்தார். இதற்காக மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தனர். விமானத்தில் பயணித்த மாணவ, மாணவிகள் முதல் முறையாக பயணிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். விமானத்தில் இருந்தபடி மேல் இருந்து கீழே உள்ளே பகுதிகளை பார்வையிட்டு ரசித்தனர்.

    இந்த பயணமானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறியதாவது:-

    ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கனவை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாகவே ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வருகிறேன்.

    சென்னைக்கு சென்றதும், அவர்களுக்கு தேவையான காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் பார்த்து கொள்கிறேன். அங்கு மெட்ரோ ரெயிலிலும் அவர்களை பயணிக்க வைக்கிறேன்.

    அப்போது அவர்களது முகத்தில் வரும் ஒரு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்று வசதி படைத்தவர்கள், தங்களின் அருகாமையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றால் நன்றாக இருக்கும். இந்தாண்டு 75 மாணவர்கள், 75 பெற்றோர்கள், 15 ஆசிரியர்கள் என விமானத்தில் அழைத்து செல்ல உள்ளேன். இதில் 55 பேர் வீதம் மொத்தம் 3 முறை செல்ல உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

    இதோடு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார். இதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இவர்களை 3-வது ஆண்டாக விமானத்தில் சொந்த செலவில் அழைத்து சென்று வருகிறார் என்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் விமானத்தில் சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உதவியால் நாங்களும் விமானத்தில் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எங்களின் நன்றி என்றனர்.

    • தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்
    • கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பொன்ராணி செய்து இருந்தார்.

    தென்திருப்பேரை:

    மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவுன்சிலர் ஆனந்த், தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜி அனைவரையும் வரவேற்றார். கலை விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் பரிசுகளை வழங்கினார்.

    கலை நிகழ்ச்சியை முதுகலை ஆசிரியர் ஆர்ட்டர் கிங்ஸ்லி டேவிட்சன், முதுகலை ஆசிரியர் சரவண முத்துக்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பொன்ராணி செய்து இருந்தார்.

    முதுகலை ஆசிரியை சுனந்தா நன்றி கூறினார். கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


    அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புதிய வண்ண யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும்.

    10 ஆண்டுகளாக பிளஸ்-2 மாணவர்கள் படித்து வந்த பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த 1,000 மாணவ- மாணவிகளை மருத்துவ மேல்படிப்புக்கு தேர்வாக வைப்பதே எங்களது இலக்கு.

    அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும். 9,10,11,12-ம் வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பிப்ரவரியில் மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்.

    அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உலக அளவில் தமிழக மாணவர்களின் கல்வி தரம் உயர அன்றைய வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் செல்போன் மூலமாக ‘‘யூ டியூப்பில்’’ பார்க்கலாம். அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பாடங்களை படிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. #TNGovt #NutritionCenters
    சென்னை:

    அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நீடித்தார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சத்துணவு திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. மத்திய அரசும் சத்துணவு திட்டத்துக்கு உதவி வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது 43,200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஏழை மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் வருகை குறைவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

    1000 குழந்தைகள் வரை பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


    இதையடுத்து மாணவர்கள் குறைவாக வரும் மையங்கள் பற்றி அரசு கணக்கெடுத்து வருகிறது. இதில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் 8,000 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த மையங்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அருகில் உள்ள மையங்களுக்கு மாற்றப்படுகிறது. அந்த மையங்களில் இருந்து உணவு தயாரித்து மாணவர்கள் குறைவாக உள்ள மையங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்க செயலாளர் ஆர்.நூர்ஜகான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் 10,000 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவால் சத்துணவு திட்டம் மேலும் பலவீனம் அடையும்” என்றார்.

    இதுபற்றி சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கூறுகையில், “சத்துணவு மையங்களில் பணியிடங்களை ஒரே சீராக்கும் வகையில் 1992-ம் ஆண்டே அரசு இந்த முடிவு எடுத்தது. அது தான் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. நேரடியாக சத்துணவு மையங்கள் மூடப்படவில்லை” என்றார்.  #TNGovt #NutritionCenters
    தமிழக அரசு ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி மாணவர்களுக்கு வழங்க 15 லட்சத்து 66 ஆயிரம் லேப்-டாப்களை கொள்முதல் செய்துள்ளது. #FreeLaptops
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்” என்று அறிவித்தது.

    அதன்படி அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச லேப்- டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின்கீழ் 2011-2012-ம் ஆண்டு 8.99 லட்சம் இலவச லேப்-டாப்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. 2012- 2013-ம் ஆண்டு 7.56 லட்சம் லேப்-டாப்கள், 2013-2014-ம் ஆண்டு 5.65 லட்சம் லேப்- டாப்கள், 2014-2015-ம் ஆண்டு 4.97 லட்சம் லேப்- டாப்கள், 2015-2016-ம் ஆண்டு 5.19 லேப்-டாப்கள் வழங்கப்பட்டன.

    2016-2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 5.58 லட்சம் லேப்-டாப்களாக அதிகரித்தது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு 2017-2018-ம் ஆண்டு 42 ஆயிரத்து 473 லேப்- டாப்கள்தான் வழங்கப்பட்டன. கடந்த 7 ஆண்டுகளில் 38 லட்சத்துக்கும் மேற்பட்ட லேப்-டாப்கள் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.

    2017-2018-ம் ஆண்டு 4.73 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான லேப்-டாப்களும் வழங்கப்பட வேண்டியது உள்ளது. பல்வேறு காரணங்களால் இலவச லேப்-டாப்கள் வழங்குவது தாமதம் ஆனது.

    தமிழக அரசு இந்த திட்டத்திற்காக சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5.5 லட்சம் லேப்-டாப்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்குகிறது. தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சார்பில் இதற்காக டெண்டர் விடப்பட்டு லேப்-டாப்கள் பெறப்படுகின்றன. எந்த நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு தயாரித்து தருவதாக சொல்கிறதோ அந்த நிறுவனத்திடம் லேப்- டாப்கள் பெறப்படுகின்றன.

    கடந்த ஆண்டு 4.73 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்பட வேண்டியது நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான லேப்- டாப்களையும் மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டியது உள்ளது. இதை கருத்தில் கொண்டு அதிக அளவில் லேப்-டாப்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் எல்காட் நிறுவனம் டெண்டர் வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதிலிருந்து லெனோவா நிறுவனம் லேப்-டாப்களை தயாரிப்பதற்கான டெண்டரை பெற்று உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த நிதி மூலம் 15 லட்சத்து 66 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்யப்படும்.

    ஒவ்வொரு லேப்-டாப்பும் ரூ.10 ஆயிரம் மதிப்பில் வழங்குவதற்கு லெனோவா நிறுவனம் ஒத்துக்கொண்டு இருப்பதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு லேப்-டாப்பும் சராசரியாக சில நூறு ரூபாய் குறைவாகவே வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    இலவச லேப்-டாப்க்கான விலை விவரங்கள் மற்றும் அவை மாணவர்களுக்கு விநியோக்கப்படும் விவரங்களை முதல்- அமைச்சர் வெளியிடுவார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இதனால் நடப்பு கல்வி ஆண்டில் உள்ள மாணவர்களும் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களும் இலவச லேப்-டாப்புகளை விரைவில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லெனோவா நிறுவனம் இலவச லேப்-டாப்களை விரைவில் சப்ளை செய்யும் என்று தெரிய வந்துள்ளது. எனவே வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பே இலவச லேப்-டாப்கள் மாணவ- மாணவிகளுக்கு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலவச லேப்-டாப் திட்டத்துக்காக தமிழக அரசு மிக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து அதிகபட்சமான லேப்- டாப்களை கொள்முதல் செய்வது இதுவே முதல் தடவையாகும். #FreeLaptops
    பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாடங்களை பாதியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையில் கரிகுலம் என்று சொல்லப்படுகிற பாடங்களை உருவாக்குகின்றது.

    தமிழகத்தில் இந்த ஆண்டு கொண்டு வருகிற புதிய பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. இனி கல்லூரிகளுக்கு சென்றால் கூட அவர்கள் பாட திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டிய அளவிற்கு உருவாகி உள்ளது.

    வருகிற நிதி ஆண்டில் பாடங்களை குறைத்து தேர்வை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாணவர்களுக்கு கூடுதல் சுமை உள்ளதாகவும் நாட்கள் போதவில்லை என்றும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    மத்திய மந்திரி கூறியிருப்பது சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மட்டும் தான். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் போன்ற பள்ளிகளுக்கு அவரவர் சிலபஸ் என்பது தனி வகையாக இருந்து வருகிறது.



    மத்திய அரசின் மாணவர்கள் திறனாய்வு தகுதி தேர்வுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாணவர்களுக்கு நீச்சலை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும். கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தடுக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    மயிலம் அருகே தழுதாளி அரசு பள்ளியில் கர்நாடக மாநில முத்திரையுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். #FreeCycles
    மயிலம்:

    தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 2001-02-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் பின்னர் 2005-06-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டிலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆயிரத்து 524 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் ஒருசில மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில் முன் பகுதியில் கூடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் வட்டவடிவில் கன்னட மொழியில் உள்ள முத்திரை காணப்பட்டது. மாணவி படிப்பது போன்ற படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழில் பொது கல்வித்துறை கர்நாடக அரசு என்று பொருளாகும்.

    கர்நாடக முத்திரை இருப்பதை கண்டு மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-


    தமிழகத்தைபோல் கர்நாடகத்திலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மாணவர்களுக்கு வழங்க அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. அந்த சைக்கிளை பரிசோதித்து சென்று பார்த்ததில் தரமற்றிருப்பது தெரியவந்தது. மேலும் இது எளிதில் துருபிடிக்கும் சைக்கிள்களாகவும் இருந்தது.

    இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை தற்போது தழுதாளி பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பின்னர் அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். இதையடுத்து சைக்கிள்களை மாணவர்கள் வாங்கிச்சென்றனர்.

    இதுபற்றி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்ட போது, இந்த சைக்கிள் எவ்வாறு இங்கு வந்தது? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் இதுபோன்ற முத்திரையுடன் எத்தனை சைக்கிள்கள் வந்தள்ளது? என்கிற விவரங்களை சேகரித்து தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளோம். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அரசால் கொள்முதல் செய்து தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் அனைத்தையும் அரசு பரிசோதித்தது. இவை அனைத்தும் தரமானது என தெரிந்த பின்னர்தான் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சைக்கிள்கள் தரமற்றவை என்று கூறப்படுவது முற்றிலும் தவறு. சைக்கிள்கள் கொள்முதல் செய்யும்போது அதில் அந்த ஸ்டிக்கர் மட்டும் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அவை நீக்கப்படும்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

    கர்நாடக முத்திரையிடப்பட்ட சைக்கிள் தமிழகத்துக்கு வந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சைக்கிள் வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகியிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே மாவட்ட வாரியாக அனுப்பப்பட்ட சைக்கிள்களில் கன்னட மொழி மற்றும் படம் உள்ள சைக்கிள்களை பிரித்தெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #FreeCycles
    திண்டிவனம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசின் முத்திரை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #CVeshanmugam
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அதில், சில சைக்கிள்களின் முன்புறத்தில் இருந்த கூடையில், வட்டவடிவில் இருந்த முத்திரையில் மாணவி படிப்பது போன்ற படத்துடன், கன்னட மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் முத்திரை இல்லாமல், கர்நாடக அரசின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது.


    இதற்கிடையே இந்த சைக்கிள் பற்றி அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. கர்நாடக மாநில அரசு சார்பில், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கிய சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.  #CVeshanmugam

    அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் விலையில்லா செருப்புகளுக்கு பதில் ஷூ வழங்க அரசுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. #GovtSchools #Shoe #MinisterSengottaiyan
    சென்னை:

    தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை போல் அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    சீருடையில் மாற்றம் கொண்டு வந்தாலும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை போல் ஷூ அணியாமல் செருப்புகள் அணிந்துதான் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர்.

    இந்த குறையை நிவர்த்தி செய்ய அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் விலையில்லா செருப்புகளுக்கு பதில் ஷூ வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்தவாரம் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தெரிவித்திருந்தார்.

    இதை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் பள்ளிக் கல்வித்துறை வேகமாக ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 2017-18-ம் ஆண்டில் 1 முதல் 10 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 60 லட்சம் விலையில்லா செருப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் அதே அளவுக்கு அடுத்த ஆண்டு ‘ஷூ’ வழங்க அரசுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக முன்னணி நிறுவனங்களிடம் இருந்து விலைப் புள்ளிகள் பெறப்பட்டு தகுதியான நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட உள்ளது.


    ஒவ்வொரு மாணவ- மாணவிக்கும் கருப்பு கலர் மற்றும் வெள்ளை கலரில் 2 ஷூக்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி அரசு உயர் அதிகாரி கூறுகையில், மாணவ-மாணவிகளின் கால்களுக்கு ஏற்றார்போல் பல்வேறு அளவுகளில் ஷூ தயாரிக்க டெண்டரில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். #GovtSchools  #Shoe #MinisterSengottaiyan
    புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம், சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த திருபுவனை சன்னியாசி குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.32 லட்சம் செலவில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதோடு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு அறைகள், அனைத்து வகுப்பறைகளிலும் மின் விசிறிகள், தேசிய கொடிக்கு தனி கொடி மேடை, விழா மேடை, புதிய கரும்பலகைகள் என பள்ளி முழுவதும் புதிதாக புனரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    பள்ளியின் புதிய கட் டிட திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் நாராயண சாமி திறந்து வைத்து பேசினார்.

    புதுவையில் அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி, போட்டு தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மாணவர் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.


    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 60 பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்படும். புதுவையில்-40, காரைக்காலில்-20 ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்படும்.

    அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில், அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையாளர் சீத்தாராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #Congress #Narayanasamy
    ×