search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவு
    X

    8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவு

    தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. #TNGovt #NutritionCenters
    சென்னை:

    அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நீடித்தார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சத்துணவு திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. மத்திய அரசும் சத்துணவு திட்டத்துக்கு உதவி வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது 43,200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஏழை மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் வருகை குறைவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

    1000 குழந்தைகள் வரை பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


    இதையடுத்து மாணவர்கள் குறைவாக வரும் மையங்கள் பற்றி அரசு கணக்கெடுத்து வருகிறது. இதில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் 8,000 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த மையங்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அருகில் உள்ள மையங்களுக்கு மாற்றப்படுகிறது. அந்த மையங்களில் இருந்து உணவு தயாரித்து மாணவர்கள் குறைவாக உள்ள மையங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்க செயலாளர் ஆர்.நூர்ஜகான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் 10,000 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவால் சத்துணவு திட்டம் மேலும் பலவீனம் அடையும்” என்றார்.

    இதுபற்றி சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கூறுகையில், “சத்துணவு மையங்களில் பணியிடங்களை ஒரே சீராக்கும் வகையில் 1992-ம் ஆண்டே அரசு இந்த முடிவு எடுத்தது. அது தான் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. நேரடியாக சத்துணவு மையங்கள் மூடப்படவில்லை” என்றார்.  #TNGovt #NutritionCenters
    Next Story
    ×