search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்
    X

    கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்

    • ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.
    • ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பள்ளிகளில் அதிகளவில் ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்து வரும் குழந்தைகளை கடந்த 2 ஆண்டுகளாக சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து சென்று வருகிறார்.

    இதேபோல் இந்தாண்டும் இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து செல்ல ஞானசேகரன் முடிவு செய்தார். இதற்காக மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தனர். விமானத்தில் பயணித்த மாணவ, மாணவிகள் முதல் முறையாக பயணிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். விமானத்தில் இருந்தபடி மேல் இருந்து கீழே உள்ளே பகுதிகளை பார்வையிட்டு ரசித்தனர்.

    இந்த பயணமானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறியதாவது:-

    ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கனவை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாகவே ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வருகிறேன்.

    சென்னைக்கு சென்றதும், அவர்களுக்கு தேவையான காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் பார்த்து கொள்கிறேன். அங்கு மெட்ரோ ரெயிலிலும் அவர்களை பயணிக்க வைக்கிறேன்.

    அப்போது அவர்களது முகத்தில் வரும் ஒரு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்று வசதி படைத்தவர்கள், தங்களின் அருகாமையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றால் நன்றாக இருக்கும். இந்தாண்டு 75 மாணவர்கள், 75 பெற்றோர்கள், 15 ஆசிரியர்கள் என விமானத்தில் அழைத்து செல்ல உள்ளேன். இதில் 55 பேர் வீதம் மொத்தம் 3 முறை செல்ல உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

    இதோடு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார். இதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இவர்களை 3-வது ஆண்டாக விமானத்தில் சொந்த செலவில் அழைத்து சென்று வருகிறார் என்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் விமானத்தில் சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உதவியால் நாங்களும் விமானத்தில் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எங்களின் நன்றி என்றனர்.

    Next Story
    ×