search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fellow Citizen"

    • தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.
    • நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    சென்னை:

    'பெல்லோ சிட்டிசன்' நிதியுதவியுடன் செயல்படும் ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 6 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

    சமூக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் இருக்கும் இளைஞர்களுக்கு அதற்குரிய பொருளாதார வசதி, பின்னணி இல்லாமல் இருப்பார்கள். அதுபோன்ற இளைஞர்களையும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் 'தந்தி' டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

    அந்தவகையில், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த ஆண்டில் 90 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 10 இடங்களில் வந்தனர்.

    அதேபோல், நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளில் 6 பேர் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கு பெற தகுதி பெற்றனர். அவர்களில் 5 பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடங்களை பெற்று இருக்கின்றனர். அதன்படி, கே.துர்கா தேவி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியையும், ஹரிணிதேவி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், ஆர்.இலக்கியா திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியையும், விமல்சுவார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியையும், விஷ்ணுபிரியா ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து உள்ளனர்.

    இதுதவிர நீட் தேர்வில் 523 மதிப்பெண் பெற்ற கனிஷ்கா என்ற மாணவி பொதுப்பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து, அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறார். இவர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 2024-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கையும் முடிந்துவிட்டது. அவர்களுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கின்றன.

    ×