search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்கள்"

    • மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
    • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் மின்சாரக் கம்பி செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் மாணவர்களை குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
    • சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    கொரட்டூர்:

    சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. ஒரு வார விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

    இந்தநிலையில் பள்ளியின் மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்றபடி குடிநீர் தொட்டியில் இருந்த அசுத்த நீரை வாளி மூலம் வெளியேற்றி வந்தனர். இதை சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    இதுபற்றி பள்ளி மாணவர்களிடம் அவர் கேட்டபோது, தலைமை ஆசிரியர்தான் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய சொன்னதாக மாணவர்கள் கூறும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
    • விழாவில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலா ளருமான உதயநிதிஸ்டாலின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

    மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, மாநகர பொருளாளர் காளையார் சரவணன், கவுன்சிலர்கள் உஷா, அண்ணா.பிரகாஷ், லெனின். இளைஞரணி வாசிம்ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
    • வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடமலைக்குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் முட்செடிகளை அகற்றுதல், வைகை ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துதல், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

    முகாமின் இறுதி நாளான நேற்று வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர். கடமலைக்குண்டு கிராமத்தில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழ் ஆசிரியர் செல்வம் தலைமையில் போதை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

    • மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும்.
    • விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களின் விபரங்களை தொகுக்கும் வகையில், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும். எமிஸ் புள்ளி விபர அடிப்படையில் தான் ஆசிரியர் காலியிடம் கணக்கிடுதல், மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் கொள்முதல் செய்வது, புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

    வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும் போது ஆகஸ்டு மாதம் இறுதி வரை அட்மிஷன் நடப்பதால், அவ்வப்போது புதிதாக சேரும் மாணவர் விபரங்கள் உள்ளீடு செய்யப்படும். தற்போது விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாணவரின் சுயவிபரங்கள் அனைத்தும், சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், எமிஸ் இணையதளத்தில் சர்வர் குளறுபடியால், உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.மாதந்தோறும் இப்பணிகள் மேற்கொள்வதால், கற்பித்தலில் ஈடுபட முடியாத சூழல் நீடிக்கிறது. தொழில்நுட்ப குளறுபடிகளை சரிசெய்துவிட்டு, அப்டேட் பணிகள் மேற்கொண்டால் மட்டுமே இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றனர். 

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா பயணம் சென்றனர்.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனை கலெக்டர் ஆஷா அஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதலமைச்சர் , பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய வைகளை சீராக வைத்துக் கொள்வ தற்கெனவும், பல்வேறு சிறப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளார். அந்தவகையில் சிவகங்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில், சிவகங்கை அருங்காட்சி யகம், கீழடி அருங்காட்சி யகம், அகரம், கொந்தகை அகழ்வாராய்ச்சி மையம், இது தவிர திருமலை மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் ஆகிய இடங்களுக்கு மாணவ, மாணவியர்கள் அழைத்துச் செல்லப்படு கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா மிகவும் சிறப்பாக அமைகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23 -ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் 'மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக 2022-23-ம் ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலையரசன், கலையரசி விருதுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

    பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும் கலை அரங்கம் செயல்பாடுகள் மூலம் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனி நபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு: கவின்கலை / நுண்கலை,

    இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை - தோற் கருவி, 4. கருவி இசை துளை காற்றுக்கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள் 6. இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் போட்டி நடைபெறும்.

    11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, தோற் கருவி, கருவி இசை துளை / காற்றுக்கருவி, கருவி இசை தந்திக் கருவிகள், இசைச்சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    போட்டிகள் தனி நபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம் ஒரு மாணவர் ஏதேனும் 3 தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக பங்கு பெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் இரண்டாமிடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.

    பள்ளி அளவில் வருகிற 14-ந்தேதிக்குள், வட்டார அளவில் 18-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள், மாவட்ட அளவில் 26-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள், வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

    சென்னை:

    விஞ்ஞானி சிவதாணுபிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ஆன்லைன் மூலமாக ஏவுதள அறிவியல் பயிற்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி தொடங்கியது.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 300 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு 4-வது கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    சென்னை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 6 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் 4 மாணவர்களுக்கு ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட நிதியுதவி கிடைக்க பெற்ற நிலையில் 2 மாணவர்களுக்கு நிதி இல்லாததால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டபோது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட முதல் கட்டமாக 50 மாணவ-மாணவிகள் 10 ஆசிரியர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

    மாணவ-மாணவிகளுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் பல்லாவரம் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை, கியாஸ் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை என புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன்படி புதுவையில் அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 370 அரசு இடங்களில் 37 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

    எனவே மருத்துவக்கல்விக்கு தேர்வாகும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அரசு பள்ளி மாணவர்ளுக்கு இலவச மருத்துவ கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த சிரமப்படுகின்றனர்.

    எனவே முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். பெற்றோர்களும் தங்களின் சிரமத்தை தெரிவித்தனர்.

    இதையேற்று அரசு பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி படிக்க இடம் பெறும் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் முழுவதையும் புதுவை அரசே செலுத்தும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.
    • இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வாழப்பாடியில் நடைபெற்ற வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.

    எட்டாம் வகுப்பு மாணவர் இ. தோர்னேஷ் மூன்றாமிடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு செ. சூரியா மூன்றாமிடமும், 14-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மு.தீபிகா முதலிடமும், வட்டெறிதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் பெ.மணிகண்டனையும், பள்ளி தலைமையாசிரியர் கு. வெங்கடாசலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • 53 வழி தடங்களில் புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை 8 மணிக்கு முன்னதாக உணவு வினியோகிக்கப்படும்.
    • உணவு தயாரிக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவ-மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும், பள்ளி இடைநிற்றலை தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே முதல் கட்டமாக தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவுப்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கிறார்.

    சென்னையில் இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. தற்போது 38 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 5220 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    விரிவாக்கம் செய்வதன் மூலம் மொத்தம் 358 பள்ளிகளில் 65,030 மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர். சென்னை மாநகராட்சியுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்ட பள்ளிகள் இணைக்கப்பட்டதை தொடர்ந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    15 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவை தயாரித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் 35 இடங்களில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. 53 வழி தடங்களில் புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை 8 மணிக்கு முன்னதாக உணவு வினியோகிக்கப்படும்.

    உணவு தயாரிக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை முதல் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சமையல் கூடமும் பயன் அடையும் பள்ளிகளை மையமாக வைத்து நிறுவப்பட்டுள்ளது.

    செவ்வாய், வியாழக்கிழமைகளில் வினியோகிக்கப்படும் கிச்சடியுடன் இனி சாம்பார் சேர்த்து வழங்கப்படும். வெள்ளிக்கிழமையில் இதுவரையில் இனிப்பு வழங்கப்பட்டது. அவை நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×