என் மலர்tooltip icon

    இந்தியா

    தெரு நாய்களை விரட்ட அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த மந்திரக்கோல்- தேசிய அங்கீகாரம் கிடைத்தது
    X

    தெரு நாய்களை விரட்ட அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த 'மந்திரக்கோல்'- தேசிய அங்கீகாரம் கிடைத்தது

    • மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
    • அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது.

    திருவனந்தபுரம்:

    கேரளா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் நடந்துசெல்லும் பாதசாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் யாரும் வெளியில் அச்சமின்றி சென்றுவர முடியாத நிலை தற்போது உள்ளது.

    தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தெருநாய் கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் அதிகமாக இருப்பதால், தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தநிலையில் தெரு நாய்களை விரட்டும் மந்திரக்கோல் ஒன்றை கேரள அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதற்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரிக்கோடு. இங்குள்ள வடசேரி என்ற இடத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அபிஷேக், நிஹால், சதீன் முகம்மது சுபைர்.

    இந்த மாணவர்கள் தான் தெருநாய்களை விரட்டக்கூடிய எலக்ட்ரானிக் சர்க்கியூட் பொருத்தப்பட்ட மந்திரக்கோலை தயாரித்துள்ளனர். இதில் உள்ள சுவிட்சை அழுத்தினால், அதிலிருந்து விலங்குகளுக்கு விரும்பமில்லாத மீயொலி ஒலி மற்றும் ஒருவித வாசனை வெளியாகும்.

    மேலும் லேசான அதிர்வலைகளையும் வெளியிடும். இதனால் தெருநாய்கள் அந்த மந்திரக்கோல் வைத்திருக்கும் நபரின் அருகில் செல்லாமல் அங்கிருந்து ஓடிவிடும். மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.

    மேலும் அதிலிருந்து வெளியாகும் வாசனையும் மனிதர்களால் உணர முடியாது. இதனால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. மேலும் பாதிக்கவும் செய்யாது.

    தெருநாய்களை விரட்டும் மந்திரக்கோலை அரசு பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பிரகித் என்பவரின் மேற்பார்வையில் செய்துள்ளனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்லியில் நடைபெற்ற புதுமை மாரத்தான் என்ற நிகழ்வில் பரிசு கிடைத்துள்ளது.

    இதன் மூலம் அவர்களின் தயாரிப்பு தேசியஅளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் அதனை வணிக ரீதியாக கொண்டுவரும் வகையில் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தங்களின் கண்டு பிடிப்புக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால், அதற்கு காப்புரிமை பெற்று தொழில் தொடங்கும் முயற்சியில் அதனை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×