search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yercaud"

    • ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.
    • அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைப் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்றப்பட்டு ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகளை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்படைந்த தடுப்புச்சுவர்களுக்கு திட்ட மதிப்பீடு செய்யவும், மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய சாலை பராமரிப்பு குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் துரை, ஏற்காடு உதவிக் கோட்டப் பொறியாளர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் ராஜேஷ்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் செல்வராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஏற்காட்டில் கன மழை-கடும் குளிரால் மக்கள் தவித்தனர்.
    • ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது . இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இரவில் கடும் குளிர் நிலவியது. நேற்றிரவு ஏற்காடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் பொது மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21.8 மி.மீ. மழை பெய்தது. மேட்டூர் 3.2, காடையாம்பட்டி 3, ஆனைமடுவு 2, கரியகோவில் 2, சங்ககிரி 1.1, சேலம் 0.9 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 34 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    ஏற்காட்டில் அரசு பஸ் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் சேலம் சின்னத்திருப்பதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்காடு காவல் நிலையத்திற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

    இந்நிலையில் இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆட்கள் இல்லாததால் இன்று காலை மீண்டும் அவர் பணிக்காக ஏற்காடு நோக்கி அவசரமாக வந்து கொண்டிருந்தார்.

    அவர் ஏற்காடு மலை பாதை 20-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அரையாண்டு விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    ஏற்காடு:

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா விடுதிகள் நிரம்பியுள்ளன.

    இதற்கிடையே ஏற்காட்டில் பனி மூட்டமும், அடிக்கடி மழைச்சாரலும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளில் விற்பனை களை கட்டுகின்றன.

    கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் சொட்டர் அணிந்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது. சுற்றுலா பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, சேர்வராயன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வருவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

    ஏற்காட்டிற்கு காதலனுடன் வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஏற்காடு:

    ஈரோட்டை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது32). திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலியுடன் கடந்த 26-ந் தேதி ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தார்.

    இருவரும் ஏற்காட்டை சுற்றி பார்த்த பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். அப்போது வாசுதேவன் மது அருந்தினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த காதலி தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு அண்ணா பூங்கா பகுதிக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வாசுதேவன் வந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் (37), மற்றும் கார் ஓட்டுனர் ஆரோக்கியதாஸ் (32) ஆகிய இருவரும் வாசுதேவனின் காதலியிடம் என்ன தகராறு என நைசாக பேச்சு கொடுத்தனர்.

    அவர் பேசிக்கொண்டிக்கும் போது வாசுதேவன் அங்கு வந்தார். 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் கொண்டு விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிய அவர்கள் வாசுதேவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து விட்டு அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளினர்.

    பின்னர் டிரைவர்கள் 2 பேரும் சேர்ந்து வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றனர், ஆரோக்கியதாஸ் பாதி வழியில் இறங்கிவிட்டார்.

    விஜயகுமார் ஏற்காட்டில் தனக்கு தெரிந்த தங்கும் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் நேற்று அதிகாலை 1.45 க்கு அந்த பெண்ணை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு ஏற்காடு வந்தார்.

    இது குறித்து வாசுதேவன் ஏற்காடு போலீஸ் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் காவல் புகார் கொடுத்தனர்.

    ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஒண்டிக்கடை பகுதியில் இருந்த விஜயகுமார் மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரனை நடத்தினர். மேலும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. சூர்ய நாரயணன் ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்.

    விசாரணை முடிவில் விஜயகுமார் மீது கற்பழிப்பு, வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும், ஆரோக்கியதாஸ் மீது வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் இன்று சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  #Tamilnews
    ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி நாளை நடைபெறுகிறது.
     ஏற்காடு:

    ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் பிரதான நிகழ்வாகவும், சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் படகு போட்டி நடைபெறுகிறது. ஏற்காடு படகு இல்ல ஏரியில் சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி நாளை நடைபெறுகிறது. வருடந்தோறும் இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுவர்.

    மேலும் நாளை மறுநாள் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது செல்ல பிராணிகளை பலர் அழைத்து வருவர்.

    மேலும் பல்வேறு வகை நாய்கள் காட்சியில் இருக்கும் என்பதால், இந்த கண்காட்சியை காணவும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
    ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 43-வது கோடை விழா - மலர் கண்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    ஏற்காடு கோடை விழா மற்றும் ஏற்காடு அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத் துறை மூலம் 2½ லட்சம் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ள மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஏற்காடு கலையரங்கில் நடந்த விழாவில் ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.4.5 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.5.12 கோடியில் 2,170 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.

    முன்னதாக, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சுற்றுலா துறை, கலை பண்பாட்டு துறை சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்களுக்கு படகு போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    ஏற்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதால் பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும், கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காட்டில் இன்று காலை முதலே அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வாராயன் கோவில், பக்கோடா பயிண்ட், மான் பூங்கா உள்பட பல பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    ஏற்காட்டியில் லேசான குளிருடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இந்தாண்டு கோடை விழா முன் கூட்டியே தொடங்கி உள்ளதால் மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ரோகிணி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #TNCM #EdappadiPalanisamy
    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் மே மாதத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதிவரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலை துறை மற்றும் மற்ற துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலர் கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளை ஊழியர்கள் தயார்படுத்தி வருகிறார்கள். இதில் சால்வியா, மேரிகோல்டு, வின்கா, தினியா, பிரான்சி, மெடானியா, டேலியா, ஜெரியா, காஸ்மாஸ், ஜெர்பேரா, ரோஜா போன்ற ரக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர மலர் கண்காட்சிக்காக ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விதவிதமான ரோஜா மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் (12-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதையட்டி ஏற்காடு செல்லும் மலை சாலை தூய்மை படுத்தப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளை கோடு போடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலை பாதைகளில் நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் கொண்டைஊசி வளைவுகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வீரன் வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணியசிவா, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தகடூர் அதியமான், வள்ளல் பாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாண்டிய நெடுஞ்செழியன், கரிகால சோழன், அவ்வையார், கம்பர், பாரதியார், திருவள்ளுவர், கபிலர், பரணர், இளங்கோ அடிகள் ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு மே மாத தொடக்கத்திலேயே கோடை விழா நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அண்ணாப்பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.

    ஏற்காட்டிற்கு முதல்வர் வருவதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர இருப்பதாலும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    கோடை விழாவையொட்டி ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக வருகிற 12-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு தினமும் 50 சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


    ×