search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Test Championship"

    • ஓவல் மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம்.
    • மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் ஆறாவது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்க உள்ளது. இதில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த மைதானம் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    ஓவல் மைதானத்தில் 1880 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.

    ஓவல் மைதானத்தில் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து அணி 43 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வென்றுள்ளன. இந்த மைதானத்தில் டாஸ் வென்ற அணிக்கான வெற்றி வாய்ப்பு 34.62 சதவீதம் (36 போட்டிகள்). அதே போல முதலில் பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 35.58 சதவீதம் (37 போட்டிகள்). இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 27.88 சதவீதம் என உள்ளது.

    டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் (ஜூன் 7, 8 மற்றும் 9) ஆகிய தேதிகளில் ஓவலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நான்கு மற்றும் ஐந்தாவது நாள் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை பொழிவு இருக்கலாம் எனவும் தெரிகிறது. மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் ஆறாவது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடுகளம் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் இங்கிலாந்தில் வானிலை முறையாக கணிக்க முடியாத சூழல் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம்.

    அதே போல ஆடுகளம் கடைசி 2 நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது களத்தில் பந்து பவுன்ஸ் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இருக்கும் பவுன்ஸ் சூழல் ஓவலில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதை இந்திய அணி வீரர்கள் ஓவலில் தங்களது முதல் வலை பயிற்சி மேற்கொண்ட போதே எதிர்கொண்டனர்.

    இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக சாதனை வைத்துள்ள ஒரே மைதானமாக ஓவல் உள்ளது. 38 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் 44 ரன்களுக்கு (இங்கிலாந்து அணிக்கு எதிராக 1896) ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகி உள்ளது.

    இந்திய அணி 1936 முதல் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றி, 5 தோல்வி மற்றும் 7 போட்டிகள் சமனில் முடித்துள்ளது. கடந்த 2021-ல் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இதே மைதானத்தில் வென்று அசத்தி உள்ளது.

    கடந்த 2017 முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும்.
    • ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

    2013-க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இந்த போட்டி இந்திய ரசிகர்ளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் சமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இரு அணிகளின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை பாருங்கள். அதில் யார் சிறந்ததை கொண்டிருக்கிறார்கள்? ஒருவேளை பும்ரா இருந்தால் ஷமி, சிராஜ் ஆகியோரை கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு சமமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவை நீங்கள் பார்க்கும் போது ஹேசல்வுட் காயத்தால் வெளியேறினாலும் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள்.


    மேலும் ஹேசல்வுட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட மைக்கேல் நீசர் சமீபத்திய கவுண்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஸ்காட் போலாண்ட் தான் சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். குறிப்பாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடர்களில் பிட்ச்சில் லேசான உதவி கிடைத்தால் அவர் மற்றவர்களை காட்டிலும் ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த பவுலராக செயல்படும் தன்மையை கொண்டதை நாம் பார்த்தோம். எனவே அவர் நிச்சயமாக ஹேசல்வுட் இடத்தை நிரப்புவார்.

    என்று ரவிசாஸ்திரி கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டனில் நடைபெற உள்ளது.
    • இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது. பந்துவீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும்.
    • நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன்.

    சிட்னி:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 7-ந்தேதி லண்டன் ஓவரில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியை விரைவில் அவுட் ஆக்குவது முக்கியமானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார்கள். எனவே அவர்களை முடிந்த வரை சீக்கிரம் அவுட் ஆக்குவது அந்தந்த அணிகளுக்கு முக்கியத்துவமாக இருக்கும்.

    தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும். நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன். ஆனால் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்.

    கடந்த 3 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவைவிட இந்தியா சிறப்பாக விளையாடி உள்ளது. எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயமாக இருக்காது. இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி துருப்பு சீட்டாக விராட் கோலி மற்றும் புஜாரா இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள்.

    கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும்.

    கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். தான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்.

    என பாண்டிங் கூறினார்.

    • ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
    • ஆஸ்திரேலியா அணி எட்டு வருடங்களில் இந்திய அணியை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்கடிக்கவில்லை.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    இந்நிலையில் இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.

    1880-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அன்று முதல் 38 டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் 18.42 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து மைதானங்களிலேயே இந்த மைதானத்தில் அவர்களின் மோசமான சாதனையாக இது உள்ளது.

    ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. மறுபுறம், அவர்கள் லார்ட்ஸில் 29 போட்டிகளில் 17 வெற்றிகளுடன், ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 43.59 -ஆக உள்ளது. இது 141 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்தின் 39.72 சதவிகிதத்தையும் அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவின் 33.33 சதவீதத்தையும் விட சிறந்ததாகும்.

    இங்கிலாந்து மைதானங்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் ஹெடிங்லியில் 34.62 சதவீதமும், டிரெண்ட் பிரிட்ஜில் 30.43 சதவீதமும், ஓல்ட் டிராஃபோர்ட் மற்றும் எட்ஜ்பாஸ்டனில் முறையே 29.03 சதவீதம் மற்றும் 26.67 சதவீதமாக உள்ளது.

    இதேபோல இந்திய அணி ஓவல் மைதானத்தில் பெரிய அளவில் சாதித்ததில்லை. இந்த மைதானத்தில் இந்திய அணி இரண்டு வெற்றி, ஏழு டிரா மற்றும் ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2021-ல் இங்கிலாந்துக்கு எதிராக 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு 40 ஆண்டுகால டெஸ்ட் போட்டியில் ஓவல் மைதானத்தில் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    ஆஸ்திரேலியா அணி எட்டு வருடங்களில் இந்திய அணியை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்கடிக்கவில்லை. இந்திய அணியிடம் நான்கு தொடர்ச்சியான தொடர் தோல்விகள் ஆஸ்திரேலிய அணி சந்தித்துள்ளது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
    • இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

    துபாய்:

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா, ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுப்பட்ட வீடியோவை ஐசிசி வெளியிட்டது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ரெட் ரிடெம்ப்ஷன் என்ற ஆக்ஷன் படத்தின் போஸ்டரில் ரோகித் சர்மா இடம் பெற்றிருக்கிறார். போஸ்டருக்கு 2021 உலக டெஸ்ட் இறுதிப் போட்டியை விட இந்தியா சிறப்பாகச் செயல்படுமா? என்றும் ரெட் பால் ரிடெம்ப்ஷன் என்ற வார்த்தையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ-யின் எமொஜியை தலைப்பாக வைத்திருக்கிறது.

    தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
    • 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை.

    மும்பை:

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

    இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கபட உள்ளது. இதனை ஐசிசி அறிவித்துள்ளது.

    • தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார்.
    • ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

    'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார்.

    அடுத்த மாதம் (ஜூன்) 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் ராகுல் விலகினார்.

    இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மீண்டும் அணிக்கு திரும்பி வெற்றிக்கு உதவுவதற்கான எல்லாவற்றையும் செய்வேன். அது தான் எனது இலக்கு. எனது காயத்தின் தன்மை குறித்து கவனமாக பரிசீலித்த மருத்துவ குழுவினர், தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு விரைவில் ஆபரேஷன் செய்வதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சியை விரைவில் தொடங்குவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்.
    • ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியஷிப்பின் இறுதிப்போட்டி ஜீன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்தியா இந்த முறை அதை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

    அதேவேளையில் உலக டெஸ்ட் சாம்பியந்திப்பின் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக நுழைந்துள்ள ஆஸ்திரேலியா தனது முதல் முயற்சியிலேயே வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கும்.

    இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிபோட்டியில் யார் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    சமீபத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வலுவான அணியாக காணப்பட்ட இந்தியாவுக்கு இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.

    இரு அணிகளும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நாம் காண்போம் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும்.
    • ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து ஐசிசி புதிய புள்ளிப்பட்டியலை வெளியிட்டது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    1 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா சுழலில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 113 ரன்களில் ஆட்டமிழந்தது.

    115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

    இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதில் ஆஸ்திரேலிய அணி (66.67%) முதல் இடத்திலும், இந்தியா (64.06%) 2ம் இடத்திலும், இலங்கை (53.33%) 3ம் இடத்திலும் உள்ளன.

    எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
    • இலங்கை அணி 3-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் இருக்கிறது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் 'டிரா' ஆனது.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 75.56 சதவீதத்துடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இறுதி போட்டிக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. ஆஸ்திரேலியா 15 டெஸ்டில் 10 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 136 புள்ளிகள் பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியா அடுத்து இந்திய மண்ணில் 4 டெஸ்டில் விளையாடுகிறது. 4 டெஸ்டில் தோற்றால் ஆஸ்திரேலியாவின் சதவீதம் 59.65 ஆக குறையும். ஏதாவது ஒரு டெஸ்டில் டிரா செய்தாலே அந்த அணி இறுதி போட்டிக்கு நுழைந்து விடும்.

    மேலும் 4 டெஸ்டிலும் தோற்றாலும் இலங்கை-நியூசிலாந்து போட்டியை பொறுத்து முடிவு இருக்கும். ஆஸ்திரேலியா முதல் முறையாக இறுதி போட்டியில் நுழைய வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணி 14 டெஸ்டில் 8 வெற்றி 4 தோல்வி, 2 டிராவுடன் 99 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளிகள் 58.93 ஆகும். வங்காள தேசத்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரை 4-0, 3-1 அல்லது 3-0 என்று கைப்பற்றினால் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஒரு வேளை 2-0, 2-2 என்ற கணக்கில் முடிந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

    இதே போல இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும் போட்டியில் உள்ளன. இலங்கை அணி 5 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் 64 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளியில் 53.33 ஆக உள்ளது. அந்த அணி தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 13 டெஸ்டில் 6 வெற்றி, 6 தோல்வி, 1 டிராவுடன் 76 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 48.72 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்னும் 3 டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை இறுதி போட்டியை நிர்ணயிக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்திய மண்ணில் இந்த தொடர் நடக்கிறது. இலங்கை-நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 2 டெஸ்டில் விளையாடுகிறது. 

    ×