search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle inspection"

    • சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர்.
    • மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகரில் சமீப காலமாக போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக தலைகவசம் அணியாதவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என பல்வேறு போக்குவரத்து விதி மீறுபவர்களையும் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலத்தில் முள்ளுவாடி கேட், கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அணைமேடு பாலம், உடையாப்பட்டி பைபாஸ் என அனைத்து பகுதிகளிலும் மறைவான இடத்தில் நின்று கொண்டு தலைகவசம் அணியாதவர்களை விரட்டி விரட்டி பிடித்து வருகிறார்கள்.

    மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போலீசாரிடம் சிக்கினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் தலா 10 பேரை பிடித்து அபராதம் விதிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சேலம் மாநகரில் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    அதன்படி சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர். அதில் சிலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பணம் கையில் இருந்தவர்கள் பணத்தை கட்டிவிட்டு சென்றனர். ஆனால் கையில் பணம் இல்லாதவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பணத்தை எடுத்து வந்து அபராதத்தை செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள் ஆவர்.

    சேலம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்சரா இறக்கம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர வகான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர் ஒருவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதே போல சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி. நேற்றிரவு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பரிசோதனை செய்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அபராதத்தை கட்டி விட்டு போலீஸ் நிலையத்தில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறினர்.

    இதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார் . தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சேலம் அர சு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அவரை பிரிந்து சென்றதும், நேற்று மனைவியை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாநகரில் நேற்றிரவு நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், ரோஷனை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர்ஸ்டாலின் மற்றும் போலீசார் திண்டிவனம் ரோஷனை ஒலக்கூர் போன்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    • வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது.
    • இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை யில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனை யில் ஈடுபட்டனர். இதில் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 2 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருச்செங் கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறியதாவது:-

    கடந்த ஜூலை மாதத்தில் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டதில் 630 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 129 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.வரி செலுத்தாத மற்றும் இதர குற்றங்களுக்காக 30 வாகனங்களுக்கு வரியாக ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் 99 வாகனங்களுக்கு ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 300 இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதன்படி வரி மற்றும் இணக்க கட்டணமாக மொத்தம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 400 அரசுக்கு வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியது, சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை மதிக்காமல் முந்தி சென்றது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 67 வாக னங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாக னங்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில் தற்போது 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த போலீஸ் காரர் மீது மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனல் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பழனிவேல் (வயது 39).

    இவர் கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார் அப்போது அந்த வழியாக ராமநாதன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஏட்டு பழனிவேல் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனி வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக தஞ்சை எஸ் பி ஆசிஷ் ராவத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விபத்தில் இறந்த ஏட்டு பழனிவேலுக்கு திருமணமாகி சத்தியா 32 என்ற மனைவியும், சாய் பிரசாத் 9, பத்ரிநாத் 7 என்ற இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியலூரில் வாகன சோதனை நடைபெற்றது
    • 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், வாகன ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூர் நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஓட்டுனர் உரிமம் மற்றும் தகுதி சான்று உள்பட எந்த ஆவணங்களும் இன்றி 7 ஆட்டோக்கள் இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 7 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று நகரில் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படும் எனவும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தென்பாதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்கும் வகையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.

    சீர்காழி தென்பாதி மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

    மீண்டும் இவ்வாறு அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
    • உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.

    இந்த வாகன சோதனை யில் பள்ளி குழந்தைகளை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    உரிய அனுமதியின்றி 13 பள்ளி குழந்தைகளை அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்ற தனியார் ஆம்னி வேன், பறிமுதல் செய்யப் பட்டு பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் தார்பாய் போடாமல் சென்ற 2 மணல் லாரிகளுக்கு தணிக்கை சீட்டு வழங்கி, தார்ப்பாய் போட்டபின் பயணத்தை தொடர அனுமதிக்கப் பட்டது. அனுமதியின்றி ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட மேக்சி கேப் ஆகியவற்றுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.

    இந்த வாகன சோதனை பரமத்திவேலூர் வட்டார பகுதியில் தொடர்ந்து நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். 

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
    • போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்யன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து வந்தது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    • வாலிபர் ஜெயிலில் அடைப்பு
    • 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கோழி தலையில் வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவரை போலீசார் ைகது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் கீழ்கொடுங்காலூர் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் பைக்கில் வந்தவரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட அவர் கொண்டு வந்த பையை பிரித்து பார்த்தனர்.

    அதில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் காட்டுப்பன்றி மற்றும் நாட்டு வெடிகுண்டு பொருத்திய 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் போளூர், அல்லி நகர் பகுதியை சோந்த அஜித் (வயது 25) என்பதும், அவர் கோழி தலைகளுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அஜித்தை கைது செய்த போலீசார், வேட்டையாடப்பட்ட காட்டு பன்றியை ஆரணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வேட்டை யாட பயன்படுத்திய பைக் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்ததோடு, அஜித்தை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    • சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கடலோர மாவட்டங்களில் சாகா் கவாச் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று (29-ந்தேதி) காலை 6 மணிக்கு தொடங்கி, ஒத்திகை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாா், குற்றப்பிரிவு போலீசாா், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல் துறையை சோ்ந்த பல்வேறு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்தினர். நேற்று நடந்த ஒத்திகையில் ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த 16 பேரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டது. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

    • நாங்குநேரி-களக்காடு சாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவரும் போலீசாரை பார்த்து அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று நாங்குநேரி-களக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தினர்.

    இதனை தொடர்ந்து இருவரும் போலீசாரை பார்த்து அரிவாளை காட்டி, மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை டவுன் கரிக்கா தோப்ப்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (43), பாட்டாபத்து, தேவிபுரத்தை சேர்ந்த மணிமுருகன் (43) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • தஞ்சை சிங்கபெருமாள் குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஹரிபாபு, காரல்மார்க்ஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் காட்டுராஜா. இவர் மற்றும் போலீசார் தஞ்சை சிங்கபெருமாள் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் தஞ்சையை சேர்ந்த ஹரிபாபு, காரல் மார்க்ஸ் ஆகிய 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

    அந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் வேகமாக நிறுத்தாமல் ஒட்டி சென்றனர். இதனால் போலீஸ்காரர் காட்டுராஜா மற்றும் போலீசார் வாகனத்தில் ஏறி அந்த காரை துரத்தினர். சிவகங்கை பூங்கா அருகே காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த ஹரிபாபு, காரல் மார்க்ஸ் ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர் காட்டுராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தரக்குறைவாக பேசி உள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் சென்று விட்டனர்.இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் காட்டுராஜா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஹரிபாபு, காரல்மார்க்ஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் இது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×