search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாகன சோதனை: போலீசுக்கு பயந்து தப்பிய கல்லூரி மாணவர் கால் முறிந்தது
    X

    வாகன சோதனை: போலீசுக்கு பயந்து தப்பிய கல்லூரி மாணவர் கால் முறிந்தது

    • சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர்.
    • மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகரில் சமீப காலமாக போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக தலைகவசம் அணியாதவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என பல்வேறு போக்குவரத்து விதி மீறுபவர்களையும் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலத்தில் முள்ளுவாடி கேட், கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அணைமேடு பாலம், உடையாப்பட்டி பைபாஸ் என அனைத்து பகுதிகளிலும் மறைவான இடத்தில் நின்று கொண்டு தலைகவசம் அணியாதவர்களை விரட்டி விரட்டி பிடித்து வருகிறார்கள்.

    மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போலீசாரிடம் சிக்கினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் தலா 10 பேரை பிடித்து அபராதம் விதிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சேலம் மாநகரில் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    அதன்படி சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர். அதில் சிலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பணம் கையில் இருந்தவர்கள் பணத்தை கட்டிவிட்டு சென்றனர். ஆனால் கையில் பணம் இல்லாதவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பணத்தை எடுத்து வந்து அபராதத்தை செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள் ஆவர்.

    சேலம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்சரா இறக்கம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர வகான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர் ஒருவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதே போல சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி. நேற்றிரவு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பரிசோதனை செய்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அபராதத்தை கட்டி விட்டு போலீஸ் நிலையத்தில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறினர்.

    இதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார் . தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சேலம் அர சு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அவரை பிரிந்து சென்றதும், நேற்று மனைவியை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாநகரில் நேற்றிரவு நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×