search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uddhav Thackeray"

    • உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார்.
    • நாராயண் ரானே சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.

    மும்பை :

    மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய சதி செய்ததாக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து அவர் நேற்று மும்பையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொள்முதல் செய்த மருந்து பொருட்களில் ஊழல் நடந்துள்ளது.

    இந்த ஊழலுக்கு உத்தவ் தாக்கரே தான் முழு பொறுப்பு ஆவார்.

    அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். இதற்காக அவர் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவினார். இதுபோன்ற நபர்களிடம் இருந்து எனக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போன் அழைப்புகள் வந்தன. உத்தவ் தாக்கரே என்னை கொல்ல பலரை ஏவி விட்டார். ஆனால் அவர்கள் யாராலும் என்னை தொடக்கூட முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய மந்திரி நாராயண் ரானே, மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியின்போது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன.
    • எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இது கடும் விவாதப்பொருளாகி உள்ளது. ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்து விட்டதாக பா.ஜ.க, சிவ சேனா ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியின் கருத்தால், மகாராஷ்டிராவில் காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) அதிருப்தி அடைந்துள்ளது. ராகுல் பேசியதற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு பேசியபின் கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேவின் சிவ சேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நாங்கள் ராகுல் காந்தியுடன் பேசினோம். நமது போராட்டம் சாவர்க்கருக்கு எதிரானது அல்ல, மோடிக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்தப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சிறப்பானவை. நம் ஒற்றுமை அப்படியே இருக்கட்டும். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. நேற்று இரவு காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன்.
    • பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.

    மும்பை :

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தரப்பினர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது:-

    மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்து உள்ளார். வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன். பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.

    சாவர்க்கரை அவமதித்த ராகுல் காந்தியை உத்தவ் தாக்கரே தரப்பினர் ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது. அவர்களுக்கு இந்துத்வா பற்றி பேச அருகதையில்லை.

    ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 'காவலாளியே திருடன் ' என கூறினார். அப்போது மக்கள் அவருக்கு தேர்தல் தோல்வி மூலம் பாடம் கற்றுகொடுத்தனர். அவர் வெளிநாட்டில், நாட்டின் பிரதமர் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பேசினார். பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தி பாரதத்தை துண்டாடுதல் குறித்து பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவா் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி ஒன்றும் நமது இந்தியா கிடையாது.
    • சாவர்க்கரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

    மாலேகாவ் :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுதான் "மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை'', என கூறினார்.

    இதன்மூலம் ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின. இது மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் நேற்று மராட்டிய மாநிலம் மாலேகாவில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    சாவர்க்கர் எங்களின் அடையாளம். ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில் அவரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

    அந்தமான் செல்லுலார் சிறையில் 14 ஆண்டுகள் கற்பனை செய்ய முடியாத சித்ரவதைகளை சாவர்க்கர் அனுபவித்தார். அவரது துன்பங்களை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். இது ஒரு வகையான தியாகமாகும்.

    நமது நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றதான் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன். இந்த நேரத்தை வீணடிக்க அனுமதித்தால் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும். 2024-ம் ஆண்டு தேர்தல்தான் ஜனநாயகத்தை காக்க நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றாக பேசினார். ரூ.20 ஆயிரம் கோடி யாருக்கு சொந்தமானது என்று சரியான கேள்வியை எழுப்பினார். ஆனால் மத்திய அரசு அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

    நான் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற போராடுகிறேன். என் போராட்டம் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆகவேண்டும் என்பதற்கானது அல்ல. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக்கின் 6 வயது பேத்தியை புலனாய்வு அமைப்புகள் விசாரித்தனர். லாலு பிரசாத் யாதவின் கர்ப்பிணி மருமகள் மயக்கம் அடையும் வரை விசாரிக்கப்பட்டார். ஆட்சியில் இருப்பவர்களை விமர்சித்தால் போலீசார் உங்களை தேடி வருவார்கள்.

    பிரதமர் மோடி ஒன்றும் நமது இந்தியா கிடையாது. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் இதற்காகவா உயிரை கொடுத்தார்கள்? பா.ஜனதாவில் இருப்பவர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்றால் மற்ற கட்சியில் இருந்து வரும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்ப்பதை அவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடிகிறது.

    எனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பறித்துவிட்டனர். ஆனால் அந்த துரோகிகளால் மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் பாலாசாகேப்பின் சித்தாந்தம் மற்றும் மரபின் வாரிசு.
    • எங்களை துரோகிகள் என்று சொல்ல உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேத் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.

    இந்தநிலையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் அதே இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார்.

    இதில் முதல்-மந்திரி ஷிண்டே உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தனது சொந்த கட்சியினரின் அரசியல் வாழ்க்கையை அழிக்க மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து சதி செய்த ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. நான் துரோகி இல்லை, சுயமரியாதை உள்ளவன். எங்களை துரோகிகள் என்று சொல்ல உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை. கஜானன் கீர்த்திகர், ராம்தாஸ் கதம் போன்ற மூத்த தலைவர்கள் சிவசேனாவை வலுப்படுத்த பாலாசாகேப்புடன் தோளோடு, தோள் நின்று உழைத்தனர். ஆனால் நீங்கள் அவர்களை துரோகிகள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

    நான் வீட்டில் உட்கார்ந்துகொண்டு உத்தரவு போடும் முதல்-மந்திரி அல்ல. நெருக்கடியான நேரத்தில் களத்தில் இறங்குவேன். 2 முறை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளேன். நான் எப்போதும் களத்தில் உழைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை துரோகி என்று அழைக்கிறீர்கள்.

    உத்தவ் தாக்கரே பாலாசாகேப் தாக்கரேவின் சொத்துகளுக்கு வாரிசாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் அடகு வைத்த சித்தாந்தத்திற்கு அவர் வாரிசு இல்லை.

    நான் பாலாசாகேப்பின் சித்தாந்தம் மற்றும் மரபின் வாரிசு. பாலாசாகேப் பால் தாக்கரே தனது தந்தையாக இருப்பதை விட மிகவும் பெயரிவர் என்பதை உத்தவ் தாக்கரே அறிந்துகொள்ள வேண்டும்.

    எனக்கு உங்கள் சொத்துக்கள் வேண்டாம். பாலாசாகேப் உங்கள் தந்தையாக இருக்கலாம். ஆனால் அனுதாபத்தை பெறுவதற்காக அதைப்பற்றி கூறிக்கொண்டே இருக்காதீர்கள்.

    மாநில தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத, தனது கட்சிக்கு கூட பொறுப்பேற்க முடியாத ராகுல் காந்தி அல்லது தேசபக்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இதில் யார் வேண்டும் என்பதை சிவசேனா தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

    • ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார்.

    மும்பை :

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தனது மனைவி லதாவுடன் மும்பை வந்துள்ள ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். போட்டியின் போது மைதானத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

    ரஜினிகாந்துடன் மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்களும் போட்டியை பார்த்து ரசித்தனர்.

    இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசினார். ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இது தொடர்பாக ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பதிவில், ''ரஜினிகாந்த் மீண்டும் மாதோஸ்ரீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி'' என தெரிவித்து உள்ளார்.

    ரஜினிகாந்த், உத்தவ் தாக்கரே சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை நிமித்தமானது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதோஸ்ரீயில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நேற்று மும்பையில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை பார்த்தார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ரஜினி

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து பார்த்தார்.


    உத்தவ் தாக்கரேவை சந்தித்த ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினி மகராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை மும்பை, மாட்டோஸ்ரீ இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இருவரின் திடீர் சந்திப்பிற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • பா.ஜனதாவுக்கு சாதகமாக எல்லாம் நடக்கின்றன.
    • எத்தனை பேர் வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது.

    மும்பை :

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் மும்பையில் மராத்தி மொழி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மூத்த வக்கீல் கபில் சிபில் கூறியது சரியாக உள்ளது. சிவசேனா தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டு இருக்கும் போது, அதில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையம் ஒரு போலி அமைப்பு. மக்களை முட்டாளாக்கும் ஆணையம் என அதை அழைக்க வேண்டும். பா.ஜனதாவுக்கு சாதகமாக எல்லாம் நடக்கின்றன. மொகம்போ வம்சாவளியினர் (அமித்ஷா) எத்தனை பேர் வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது.

    சட்டத்தை பின்பற்ற வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிகொடுக்காவிட்டால், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை திருடிச்செல்வார்கள். எனவே திருடர்கள் பற்றி நான் அதிகம் பேசவிரும்பவில்லை. அவர்கள் அதற்காக வெட்கப்படமாட்டார்கள்.

    சிவசேனா வெறும் பெயர், சின்னம் மட்டுமல்ல. வில், அம்பு மட்டும் சிவசேனா அல்ல. சிவசேனா நம்முடையது. அதை யாராலும் திருட முடியாது. பால் தாக்கரே விதைத்ததை நீங்கள் எப்படி நீக்க முடியும். யாராலும் சிவசேனாவை அழிக்க முடியாது. உங்களுக்கு தைரியம் இருந்தால், திருடிய சிவசேனா பெயர், வில், அம்புடன் தேர்தல் களத்துக்கு வாருங்கள். 2024 தேர்தல் தான் நாட்டில் நடக்கும் கடைசி தேர்தல் என எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். மராத்தி தினத்தில் கவர்னர் சட்டசபையின் இரு அவைகளில் இந்தியில் உரையாற்றுகிறார். இது துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும்.
    • எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும்

    மும்பை :

    பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் கூறி இருப்பதாவது:-

    எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற புதிர் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். பா.ஜனதாவின் போலி தேசியவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் விஷத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.

    மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் பா.ஜனதாவுடன் தனித்தனியாக போராடி வருகின்றனர். இதுபோன்ற அரசியல் அணுகுமுறைக்கு எந்த அர்த்தமும் இல்லை.

    காங்கிரசை வெறுத்து ஒதுக்கிவிட்டு பா.ஜனதாவை எதிர்த்து எப்படி போராடுவீர்கள்?.

    2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து பின்னர் சிந்திக்கவேண்டும். அதற்கு முன்பு பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்தாலோசித்து தங்களின் வியூகத்தை இறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும்.

    பணமும் அதிகார ஆணவமும் இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன.

    நாடு தழுவிய அளவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலிமையான மற்றும் முதிர்ச்சி பெற்ற தலைவராக உருவெடுத்துள்ளார்.

    ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி- கவுதம் அதானியின் தொடர்பு குறித்து ராகுல் காந்தி மக்களவையில் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்து பேசும்போது, பிரதமர் பதில் சொல்ல முடியாமல் பலமுறை தண்ணீர் குடித்ததை பார்க்க முடிந்தது. இதற்கு அர்த்தம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பது தான்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது
    • உத்தவ் தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு

    புதுடெல்லி:

    மகாராஷ்ராவில் ஆளுங்கட்சியான சிவ சேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியைக் கைப்பற்றினார். அதன்பின்னர் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகள் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கியது. சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு வழங்கியது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

    அதன்படி, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    அதேசமயம், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேணடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகிவற்றை ஷிண்டே தரப்பிடம் ஒப்படைத்தது.
    • எம்.எல்.ஏ.க்கள் பலத்தை அடிப்படையாக வைத்து இம்முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர்.

    இதற்கிடையே, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முதல் மந்திரி ஷிண்டே மற்றும் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்பினர் தான் உண்மையான சிவசேனா என கடந்த வெள்ளிக்கிழமை முடிவை அறிவித்தது.

    சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகிவற்றை ஷிண்டே தரப்பிடம் ஒப்படைத்தது. எம்.எல்.ஏ.க்கள் பலத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் சிவ சேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்து, கட்சியின் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்றது.
    • தலைவர்கள் பட்டும், படாமல் தான் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.

    சிவசேனா கட்சி மராட்டியத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதாவுடன் நட்பு பாராட்டி கூட்டணி வைத்து இருந்தது.

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பங்கிடுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து மாநிலத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி உடைந்தது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனா கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மலைப்போல் நம்பி மாறுபட்ட கொள்கை கொண்ட கட்சிகளுடன் மகாவிகாஸ் அகாடி கூட்டணி என்ற விஷப்பரீட்சையில் உத்தவ் தாக்கரே இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சரத்பவார் அரசியல் சாணக்கியராக கருதப்பட்டார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் சரத்பவார் தான் இருந்தார். அவரின் கட்சிக்கு தான் நிதி, உள்துறை போன்ற முக்கிய இலாகாக்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மராட்டிய அரசியலில் பூகம்பம் வெடித்தது. சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் உத்தவ் தாக்கரே அரசு பதவி விலகியது. பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்றது.

    தற்போது ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், கட்சியின் வில்-அம்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 7 மாத இழுபறிக்கு பின் இந்த முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனா என அங்கீகரித்ததை உத்தவ் தாக்கரே தரப்பு கடுமையாக விமர்சித்து உள்ளது. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக செயல்படுகிறது என விமர்சித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தண்ணீரும், தாமரை இலையும் போல செயல்படுகின்றன.

    குறிப்பாக உத்தவ் தாக்கரே யாரை பெரிய அளவில் நம்பி கொள்கை மாறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாரோ, அதே சரத்பவாரே தேர்தல் ஆணையத்தின் முடிவு பற்றி கடும் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. அவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கி உள்ளாரே தவிர, தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து எந்த கருத்துகளையும் கூறவில்லை.

    ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் கட்சி பெயர், சின்னத்தை வழங்கியது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது:- தேர்தல் ஆணையம் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை பற்றி ஆலோசிக்க முடியாது. தேர்தல் ஆணைய முடிவை ஏற்று கொள்ள வேண்டும். புதிய சின்னத்தை தேர்ந்தெடுங்கள். பழைய சின்னத்தை இழப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்திக்கும் இதே நிலை ஏற்பட்டது. காங்கிரசின் சின்னம் 'இரட்டை காளையாக' இருந்தது. அந்த சின்னத்தை அவர்கள் இழந்தனர். அதன்பிறகு 'கை' சின்னத்துக்கு மாறினர். மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். அதுபோல உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதேபோல நேற்று முன்தினம் அவர் தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்புக்கு சின்னம், கட்சியை வழங்கிய விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சோ்ந்த எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவாரும் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனை தான் கூறியுள்ளார்.

    எனவே தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டேக்கு வில், அம்பு, கட்சியின் பெயரை வழங்கிய விவகாரத்தில் சரத்பவார் விலகி இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் சரத்பவார் நடைமுறைக்கு எது சாத்தியமோ அது பற்றி பேசியிருக்கிறார் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

    2019-ம் ஆண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பது பற்றி தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்த போது, சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார், தேவேந்திர பட்னாவிசுடன் சேர்ந்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அஜித்பவார், சரத்பவார் ஒப்புதலுடன் தான் எங்களுக்கு ஆதரவாக பதவிஏற்றார் என சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேசியவாத காங்கிரஸ் போல, காங்கிரஸ் கட்சியும் சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் பெரிய அளவில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவில்லை. மாநில தலைவர் நானா படோலே தவிர மற்ற தலைவர்கள் பட்டும், படாமல் தான் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.

    இது கூட்டணி கட்சிகளின் உறுதித்தன்மை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

    ×